5 வயது குழந்தையை ’800 மீட்டர்’ தனியே செல்ல அனுமதித்த தாய் குற்றவாளி என தீர்ப்பு

அந்தப் பெண் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார் (சித்தரிப்புப் படம்).
படக்குறிப்பு, அந்தப் பெண் தனது ஐந்து குழந்தைகளுடன் ஒரு பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார் (சித்தரிப்புப் படம்).
    • எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில், தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் தனது 5 வயது மகனைத் தனியாக நடந்து செல்ல அனுமதித்ததற்காக, குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டில் ஒரு தாய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

36 வயதான கரியான் பார்கின்சன், தனது மகன் சாமுவேலை அருகிலுள்ள குளத்துக்குச் சென்று வாத்துகளின் இறகுகளைச் சேகரிப்பதற்காக, சுமார் 800 மீட்டர் தூரம் தனியாக நடந்து செல்ல அனுமதித்தார்.

"நான்தான் அவனைச் செல்ல அனுமதித்தேன். 'அங்கே போய்விட்டு உடனே திரும்பி வந்துவிடு' என்று கூறினேன்" எனப் பார்கின்சன், பிபிசியின் அமெரிக்கக் கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தார்.

பார்கின்சன், வில்லியம்ஸ்பர்க் நகரில் தனியார் பாதுகாப்பு வசதியுடன் கூடிய, நுழைவுக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஃபோர்ட்ஸ் காலனி குடியிருப்பு வளாகத்தில் தனது கணவர் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

குளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சாமுவேலை அங்கிருந்த பாதுகாப்புக் காவலர் ஒருவர் எதிர்கொண்டார். பின்னர், அந்தக் காவலர் சிறுவனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

"குழந்தைகள் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தனியாகச் செல்ல நாங்கள் அனுமதிப்பதில்லை என்று பாதுகாப்புக் காவலர் கூறினார். அதற்கு, 'அது குடியிருப்போர் சங்கத்தின் விதிமுறைகளில் இருக்கிறதா? ஏனென்றால், இது விதிமுறைகளுக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை' எனப் பதிலளித்தேன்" என்று நடந்த சம்பவத்தைப் பார்கின்சன் விவரித்தார்.

இதையடுத்து, அந்தக் குடும்பம் வசிக்கும் சூழலை ஆய்வு செய்வதற்காகக் காவல்துறையினரும் குழந்தைகள் பாதுகாப்புச் சேவை அதிகாரிகளும் அவர்களது வீட்டுக்குச் சென்றனர்.

"இந்த வழக்கு உண்மையாக விசாரிக்கக்கூடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஒருவரிடமும் நீதிபதியிடமும் சென்றால், அனைத்தும் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்பினோம்" எனப் பார்கின்சன் சிபிஎஸ் செய்தியிடம் கூறினார்.

ஆனால், ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் முடிவில், சிறார் ஒழுங்கீனத்துக்கு பங்களித்த குற்றத்துக்காக அந்தத் தாய் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அவருக்கு ஆறு மாதக் கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் அவர் சிறைக்குச் செல்ல வேண்டியதில்லை. இருப்பினும், விர்ஜீனியா மாகாணத்தின் குழந்தைகள் துன்புறுத்தல் மற்றும் புறக்கணிப்புப் பதிவேட்டில் அவரது பெயர் ஏழு ஆண்டுகளுக்கு இடம்பெறும்.

இதன் விளைவாக, தனது மகன் ஆறாம் வகுப்புக்குச் செல்லும் வரை அவனது வகுப்பறைச் செயல்பாடுகளில் தன்னார்வலராக அப்பெண்ணால் பங்கேற்க முடியாது.

பார்கின்சனுக்கு 36 வயது; அவர் 5 குழந்தைகளின் தாய் ஆவார்.
படக்குறிப்பு, பார்கின்சனுக்கு 36 வயது; அவர் 5 குழந்தைகளின் தாய் ஆவார்.

குழந்தைகளின் சுதந்திரம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கரியான் பார்கின்சன் மற்றும் அவரது மகன் தொடர்பான இந்த வழக்கு, குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சுதந்திரம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் சுதந்திரமான செயல்பாடுகள் தொடர்பாகப் பெற்றோர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அதிகாரிகள் கேள்விக்குள்ளாக்குவதைத் தடுக்கும் வகையில், குழந்தைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமெரிக்காவின் 13 மாகாணங்களில் நடைமுறையில் உள்ளது. அவற்றில் விர்ஜீனியாவும் ஒன்று.

"குழந்தை பாதுகாப்பாகவும், தனியாகச் செயல்படக்கூடிய திறனுடனும் இருப்பதாகத் தெரிந்தால், அவர்களிடம் பேசிவிட்டு அத்துடன் விட்டுவிடுவதுதான் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்தும் சரியாக இருக்கும்போது குழந்தைகளின் செயல்பாடுகளில் நாம் தலையிடக் கூடாது" என்று பார்கின்சன் கூறினார்.

அமெரிக்க வானொலி ஒலிபரப்பு நிறுவனமான என்பிஆர் உடனான நேர்காணலில் பேசிய அவர், "சுதந்திரமாகச் செயல்படும் குழந்தைப் பருவம் என்பது எப்படி இருக்கும் என்பதில் மக்களுக்குத் தெளிவான புரிதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்றார்.

"இதுபோன்ற சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும்போது, அது அவர்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால், இதுபோன்ற சூழல்களுக்குப் பழக்கப்படாதவர்களாக நாம் இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

"கடந்த 30 ஆண்டுகளாகக் குழந்தைகளை மூடிய இடங்களுக்குள்ளேயே நாம் வைத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

"குழந்தைகள் நாம் நினைத்துப் பழகியிருப்பதைவிட அதிக திறன் கொண்டவர்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்கு, நமது சமூகத்துக்கு ஒருவிதமான 'படிப்படியான பழக்கப்படுத்துதல்' தேவைப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகப் பார்கின்சன் அறிவித்துள்ளார். இந்த மேல்முறையீட்டு நடவடிக்கை ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இதுபோன்ற சம்பவம் தங்களுக்கும் நேர்ந்துள்ளதாகப் பல தாய்மார்கள் எனக்குச் செய்திகளை அனுப்பி வருவது ஆச்சரியமளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு