குழந்தைகளிடம் நீங்கள் கவனிக்காமல் தவறவிட வாய்ப்புள்ள 4 புற்றுநோய் அறிகுறிகள்

அமீலியா
படக்குறிப்பு, கடந்த ஆண்டு அமீலியா கரோலுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவருக்கு 13 வயது .
    • எழுதியவர், கமிலா ஹாராக்ஸ்
    • பதவி, சுகாதார செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

புற்றுநோய் அரிதாகவே ஏற்பட்டாலும், பிரிட்டனில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நோய்களால் உயிரிழப்பதற்கு முக்கியக் காரணமாக அது உள்ளது. இருப்பினும், அதன் அறிகுறிகளை தங்களால் அடையாளம் காண முடியும் என்று மூன்றில் ஒரு பங்கு பெற்றோருக்கும் குறைவாகவே கூறுகிறார்கள்.

பிரிட்டனில் ஆண்டுதோறும் 0 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 1,900 குழந்தைகளுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக கேன்சர் ரிசர்ச் யுகே அமைப்பு தெரிவிக்கிறது.

தற்போது புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் 13 வயது அமெலியா கரோலுக்கு, கடந்த ஆண்டு அக்யூட் மைலாய்டு லுகேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் தென்பட்ட அறிகுறிகளை எளிதில் கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருந்ததாக அவரது தாயார் ஜெம்மா நினைவுகூர்கிறார்.

அமெலியா அடிக்கடி சோர்வாக இருந்தார் என்றும், சிறிய அளவிலான உடற்பயிற்சிக்குப் பிறகே மூச்சுவாங்கியது என்றும் அவர் கூறுகிறார். ஆனால், உடற்தகுதி குறைவாக இருப்பதாலும், பள்ளி முடிந்து வந்த சோர்வாலும் இவை ஏற்படுவதாக முதலில் கருதப்பட்டது.

அமெலியாவின் உடலில் காயங்கள் தோன்றத் தொடங்கியபோதுதான் ஏதோ தவறாக இருப்பதை ஜெம்மா உணர்ந்தார். அடுத்த 10 நாட்களுக்குள் அமெலியாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகள் புற்றுநோய் நிபுணரான பேராசிரியர் பாப் பிலிப்ஸ், தொடர்ந்து நீடிக்கும், மோசமடையும் அல்லது அதிகரிக்கும் அறிகுறிகளைக் கவனிப்பது பெற்றோருக்கு மிகவும் முக்கியம் என்கிறார்.

பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்:

  • அதீத சோர்வு
  • முகம் மிகவும் வெளிறிக் காணப்படுதல்
  • காரணம் தெரியாத காயத் தழும்புகள்
  • பெரிதாகிக்கொண்டே இருக்கும் அல்லது மறையாமல் காலப்போக்கில் வளர்ந்து கொண்டிருக்கும் கட்டிகள் மற்றும் வீக்கங்கள்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகளின் உடல் வளர்ச்சி காரணமாக அவர்களுக்குப் புற்றுநோய் மிக வேகமாக வளர்ச்சியடைகிறது.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான புற்றுநோய் அமைப்பான சிசிஎல்ஜி-ஐ சேர்ந்த பேராசிரியர் பிலிப்ஸ் உள்ளிட்ட நிபுணர்கள், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், நோயைக் கண்டறிவதற்கான காலதாமதத்தைக் குறைக்கவும் முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றனர்.

இந்தப் பிரசாரத்தில் மருத்துவ நிபுணர்களுக்கான 'மூன்று விதி' இடம்பெற்றுள்ளது. அதன்படி, ஒரு குழந்தைக்கு தொடர்ந்து நீடிக்கும் மூன்று அறிகுறிகள் இருந்தாலோ, மூன்று முறை மருத்துவரை அணுகியிருந்தாலோ அல்லது காரணம் தெரியாத அறிகுறிகள் மூன்று வாரங்களாக நீடித்தாலோ, அந்தக் குழந்தையைப் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்காக நிபுணரிடம் பரிந்துரைப்பது குறித்து மருத்துவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

இருப்பினும், 1970-களிலிருந்து குழந்தைகளுக்கான புற்றுநோய் உயிர்வாழ்வு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, 10 குழந்தைகளில் எட்டு பேர் ஐந்து முதல் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக உயிர்வாழ்கின்றனர்.

அமெலியாவைப் பொறுத்தவரை, எந்தக் காரணமும் இல்லாமல் திடீரெனத் தோன்றிய ஒற்றைச் சிவப்புக் காயத் தழும்பிலிருந்துதான் அவரது புற்றுநோய் பயணம் தொடங்கியது என்கிறார் அவரது தாய் ஜெம்மா.

மூன்று நாட்களுக்குப் பிறகு, அமெலியாவின் இரண்டு கால்களின் முன்பகுதியிலும் சிராய்ப்புக் காயங்கள் தோன்றின. அவை வலியுடனும் வீங்கியும் காணப்பட்டன.

"வழக்கமான பரிசோதனைக்காகக் கண் மருத்துவரிடம் சென்றிருந்தோம். அப்போது, அவளது கண்ணில் சில ரத்த நாளங்கள் வெடித்திருப்பதை அவர்கள் கவனித்தனர். ஆனால், அதற்கான காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை," என்று ஜெம்மா கூறுகிறார்.

10 நாட்களுக்குள், அமெலியாவுக்கு எந்த வகையான ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து சிகிச்சையைத் தொடங்குவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்குள், அமெலியாவுக்கு எந்த வகையான ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். தொடர்ந்து சிகிச்சையைத் தொடங்குவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
படக்குறிப்பு, அவரது கால்களில் புடைத்த சிவப்புக் காயங்கள் தோன்றியபோது, அவருடைய அம்மா மிகவும் கவலை அடைந்தார்.

"அமெலியாவுக்கு என்ன பாதிப்பு என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நாளில், நான் அவளை அமர வைத்து விவரித்தேன். அப்போது அவள் என்னிடம், 'எனக்குப் புற்றுநோய் இருக்கிறதா?' என்று கேட்டாள். நான் ஆம் என்று சொன்னேன். அதற்கு அவள், 'நான் இறந்துவிடுவேனா?' என்று கேட்டாள்.

'இல்லை, மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். சிகிச்சைக்கான திட்டம் தயாராக இருக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தச் சிகிச்சை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்' என்று அவளிடம் கூறினேன்," என்கிறார் ஜெம்மா.

தற்போது அமெலியா நோய் தணிவு நிலையில் உள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எலும்பு மஜ்ஜை மற்றும் ரத்தப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்.

பிரிட்டனில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சையில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 80%-க்கும் அதிகமாக இருப்பதாகப் பேராசிரியர் பிலிப்ஸ் கூறுகிறார். இருப்பினும், நோயை இன்னும் விரைவாகக் கண்டறிந்தால், தீவிரம் குறைந்த சிகிச்சைகளை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவிக்கிறார்

'மகனுக்காக விழிப்புணர்வு'

பிரிட்டன் முழுவதும், புற்றுநோய் கண்டறியப்படும் குழந்தைகளில் பாதிப் பேருக்கு இரண்டு வாரங்களுக்குள் நோய் உறுதி செய்யப்படுவதாகப் பேராசிரியர் பிலிப்ஸ் கூறுகிறார்.

"இது ஒப்பீட்டளவில் விரைவானதுதான். ஆனால், மீதமுள்ள பாதிப் பேரும் முதல் அறிகுறிகள் தென்பட்டதிலிருந்து நோய் கண்டறியப்படுவதற்கு 16, 18, 20 அல்லது 25 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கக் கூடாது என்று விரும்புகிறோம்," என்கிறார் அவர்.

கேன்சர் ரிசர்ச் யுகே தரவுகளின்படி, பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இவர்களில் 54 சதவீதத்தினருக்கு மட்டுமே, தேசிய சுகாதார சேவையான என்.ஹெச்.எஸ் நிர்ணயித்துள்ள 28 நாள் காலக்கெடுவுக்குள் நோய் இருப்பது உறுதி செய்யப்படுவதாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தெரிவிக்கிறது.

இது தவிர, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட சுமார் 2,300 பதின்ம வயதினருக்கும் இளம் வயதினருக்கும் ஆண்டுதோறும் புற்றுநோய் கண்டறியப்படுகிறது.

ஜேக் ஸ்வின்ஸ்கோ
படக்குறிப்பு, ஜேக் ஸ்வின்ஸ்கோ தனது 13வது வயதில் மென் திசுப் புற்றுநோயால் உயிரிழந்தார்.

லின்சி ஸ்வின்ஸ்கோவின் மகன் ஜேக், 13 வயதில் மென் திசு புற்றுநோயால் உயிரிழந்தார்.

2023 ஜூலை மாதம், ஜேக்கிற்கு மூன்றாம் நிலை, ஃபியூஷன் பாசிட்டிவ் அல்வியோலார் ராப்டோமையோசார்கோமா எனப்படும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் கண்டறியப்படுவதற்கு முன்பு, ஜேக்கிற்கு மூக்கடைப்பு மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தன. அது ஹே ஃபீவர் எனக் கருதப்பட்டது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவர் தூங்கிவிடுவதை, பருவத் தேர்வுகள் முடியும் காலத்தில் ஏற்படும் சோர்வு என்று நினைத்தனர்.

"மூக்கின் மேற்பகுதியில் வீக்கம் ஏற்படத் தொடங்கியபோதுதான், 'சரி, மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்' என்று நாங்கள் நினைத்தோம்" என்கிறார் லின்சி.

ஜேக்கின் மூக்கிலும் நாசிப் பாதையிலும் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு மென்மையான திசு சார்கோமா புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஒன்பது சுற்று கீமோதெரபி சிகிச்சையையும் புரோட்டான் கதிர்வீச்சு சிகிச்சையையும் பெற்றார்.

ஆனால், கீமோதெரபி சிகிச்சையால் வலிப்பு ஏற்பட்டதுடன், உடல்நிலையும் மிகவும் மோசமடைந்ததால், தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டாம் என்று ஜேக் முடிவு செய்தார்.

ஜேக்
படக்குறிப்பு, ஜேக் ஒன்பது சுற்று கீமோதெரபி மற்றும் புரோட்டான் கதிர்வீச்சு சிகிச்சையை நிறைவு செய்தார்.

2024 ஏப்ரல் 26 அன்று, தனது 14-வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், அவர் வீட்டில் அமைதியாக உயிரிழந்தார்.

"ஜேக்கைப் பொறுத்தவரை, அவன் இறப்பதற்குப் பயப்படவில்லை என்பதுதான் முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன். மரணம் பற்றியும், இறப்பது எப்படி இருக்கும் என்பது பற்றியும் நாங்கள் நிறையப் பேசியிருக்கிறோம். ஆனால், அவனைப் பயமுறுத்திய ஒரே விஷயம், 'எல்லோரும் என்னை நினைவில் வைத்திருப்பார்களா? எல்லோரும் என்னை மறந்துவிடுவார்களா?' என்பதுதான். அதனால்தான் நான் இதைச் செய்கிறேன். ஜேக் யார் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; அவன் எவ்வளவு அற்புதமானவன் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்," என்கிறார் லின்சி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு