தமிழ்நாட்டில் விருத்த சேதனம் (சுன்னத்) செய்யும் ஒரு இந்து சமூகம் எது தெரியுமா?

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

(இந்தக் கட்டுரை 'விருத்த சேதனம்' அறிவியல் அடிப்படையில் சரியானதா அல்லது மருத்துவரீதியில் பயனுள்ளதா என்பதை அலசவில்லை. அது தொடர்பான சடங்குகள், வழக்கங்களை மட்டுமே பேசுகிறது.)

'விருத்த சேதனம்' அல்லது ஆண்குறியின் முன்தோலை நீக்கும் செயல்முறை உலகம் முழுவதும் பல்வேறு சமூகங்களில் ஒரு சடங்காக பின்பற்றப்படுகிறது.

பெரும்பாலும் இஸ்லாமிய மதத்துடன் தொடர்புபடுத்தப்படும் இந்தச் சடங்கு, யூத மதத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. பல ஆப்பிரிக்க சமூகங்களில் ஆண்களுக்கான விருத்த சேதனம் என்பது பாரம்பரியத்திலும் கலாசாரத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு சடங்காக உள்ளது.

தனக்கு 16 வயதில் மேற்கொள்ளப்பட்ட 'விருத்த சேதன' சடங்கு குறித்து, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, 'லாங் வாக் டூ ஃப்ரீடம்' என்ற தனது சுயசரிதை நூலில் விவரித்துள்ளார்.

"விருத்த சேதனம் செய்யப்படாத ஹோசா இன (தென்னாப்பிரிக்க பழங்குடி இனம்) ஆண், ஒரு ஆணாகவே கருதப்படமாட்டான், அவன் ஒரு சிறுவனாகவே கருதப்படுகிறான்" என நெல்சன் மண்டேலா குறிப்பிடுகிறார்.

ஆனால், தென்னிந்தியாவில் ஒரு இந்து தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகவே ஆண்களுக்கான 'விருத்த சேதன' சடங்கைப் பின்பற்றிவருகிறது.

'பிறமலைக் கள்ளர்கள்' எனப்படும் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், 'மார்க்கல்யாணம்' அல்லது 'கவுர் அடைப்பு' என்ற பெயரில் இந்தச் சடங்கை நடத்துகிறார்கள் என்றும், ஆனால் இது இஸ்லாமிய நடைமுறையிலிருந்து சற்றே வேறுபட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், அச்சமூக மக்களிடையே தற்காலத்தில் இந்த நடைமுறை படிப்படியாக குறைந்து வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, தேனியில் 1987இல் நடைபெற்ற ஒரு 'மார்க்கல்யாண' நிகழ்வின் அழைப்பிதழ்

'மார்க்கல்யாணம்' அல்லது 'கவுர் அடைப்பு'

பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜே.ஹெச். நெல்சன் தனது 'தி மதுரா கன்ட்ரி- ஏ மேனுவல்' (1868) நூலில், "மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளர்களில் பலர் விருத்த சேதனம் செய்து கொள்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை. இந்த வழக்கத்தின் தோற்றத்தைக் கண்டறிய நான் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. இந்த வழக்கம் மிகவும் தொன்மையானது என்பது மட்டும் அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"கள்ளர் சமூகத்தில் சில உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் பிறமலைக் கள்ளர்கள், பெரும்பான்மையாக இந்தச் சடங்கை பின்பற்றி வருகிறார்கள்" எனக் கூறுகிறார் 'பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்' நூலை எழுதியவரும், உசிலம்பட்டியைச் சேர்ந்தவருமான இரா.சுந்தரவந்தியத்தேவன்.

'பிறமலைக் கள்ளர்கள்' சமூகத்தைச் சேர்ந்த மக்கள், பெரும்பாலும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவி வாழ்வதாக அவரது நூல் குறிப்பிடுகிறது.

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தச் சடங்கு எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து 'பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்' நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'இஸ்லாமிய மதத்தில் உள்ளது போல, சிறுவயதிலேயே இதை மேற்கொள்ளாமல், சிறுவர்களுக்கு 10- 13 வயதாகும்போது இதை அவர்கள் செய்கிறார்கள்.'

இதற்கான நாள் குறிக்கப்பட்டவுடன் தாய்மாமனுக்குச் சொல்லி அனுப்புவர். பெரும்பாலும் 'கவுர் அடைப்பு' மாலைப் பொழுதில் நடைபெறும். அன்று அச்சிறுவன் புது மாப்பிள்ளை போல் அலங்கரிக்கப்படுவான். வெள்ளைப் புதுத்துணி உடுத்தி அவன் தலையில் குல்லா அணிவித்து அதனைச் சுற்றி முகம் மறைக்கின்ற வகையில் பூக்கள் அணிவித்து அவனைக் குதிரை மீது ஏற்றி, மேளதாளம் முழங்க உறவினர்கள் புடைசூழ ஊர்வலமாகக் கண்மாய், குளம், ஆறு அல்லது கிணறு போன்ற நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்வர்.

அங்கு அச்சிறுவனை ஒரு இடத்தில் உட்கார வைத்து 'அம்பட்டன்' (முடி திருத்தும் நபர்) இந்தச் சடங்கை மேற்கொள்வார். ஆண்குறியின் முன்தோல் நீக்கப்பட்டவுடன், வேதனை குறைவதற்காக அச்சிறுவனை உடனே தண்ணீரில் தூக்கிப் போட்டு விடுவர்.

ரத்தப் போக்கு நின்றவுடன், அவனைத் தாய்மாமன் தனது தோள்களில் சுமந்து கொண்டு வீட்டிற்குத் தூக்கி வருவார். அங்கு அவனுக்குப் புத்தாடைகள், மலர் மாலைகள் அணிவிக்கப்படும். பிறகு எல்லோருக்கும் சைவ விருந்தளிக்கப்படும். மறுநாள் தாய்மாமன் குடும்பத்தாருக்கு கறி விருந்து அளிக்கப்படும்.

"அதன்பிறகு சில நாட்களுக்குக் காயம்பட்ட இடத்தில் நாட்டு மருந்து தடவி புண்ணை ஆற்றுவர். ஆனால் சமீப காலமாக இவ்வழக்கம் அரிதாகி வருகின்றது" எனக் கூறுகிறார் இரா.சுந்தரவந்தியத்தேவன்.

"மார்க்கல்யாணம் எனப் பெயரிட்டு செய்முறைக்காக சில விழாக்கள் நடைபெற்றாலும், 'விருத்த சேதனம்' செய்கின்ற வழக்கத்தை சிலர் கடைபிடிப்பதில்லை" என்கிறார் அவர்.

"எனக்கே சிறுவயதில் அப்படியொரு விழா நடத்தப்பட்டது ஆனால் 'விருத்த சேதனம்' மேற்கொள்ளப்படவில்லை" என்கிறார்.

அதேசமயம், "இஸ்லாமியர்களோடு நெருங்கி வாழ்கின்ற பகுதியில் உள்ள பிறமலைக் கள்ளர்கள் இன்றும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்" என்று குறிப்பிடும் அவர், "மதுரை விளாச்சேரியில் வாழும் கள்ளர்கள் இந்தத் தலைமுறையிலும் தங்களது பிள்ளைகளுக்கு தவறாமல் இச்சடங்கைச் செய்கின்றனர்" என்று கூறுகிறார்.

இவ்வழக்கம் தோன்றியது எப்படி?

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, 'பிறமலைக் கள்ளர் சமூக மக்கள், சிறுவர்களுக்கு 10- 13 வயதாகும்போது இதைச் செய்கிறார்கள்' (கோப்புப் படம்- 1987)

"மார்க்கல்யாணம் அல்லது மார்க்கக் கல்யாணம் என்பதற்கு 'ஒரு வழிமுறையின் அடிப்படையில் பின்பற்றப்படுகின்ற கல்யாணம்' என்று பொருள். இஸ்லாமிய பண்பாட்டின் தாக்கத்தால் பிறமலைக் கள்ளர்களிடையே இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்" என்கிறார் இரா.சுந்தரவந்தியத்தேவன்.

ஜே.ஹெச். நெல்சன் 'தி மதுரா கன்ட்ரி- ஏ மேனுவல்' (1868) நூலில், "மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து சாதியினரிலும் கள்ளர்கள் மட்டுமே இஸ்லாமியர்களை 'மாப்பிள்ளை'கள் என்று அழைப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலும், அதோடு விருத்த சேதன சடங்கை அவர்கள் பின்பற்றுவதும் சேர்த்து நோக்குகையில், அவர்களின் முன்னோர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் மீண்டும் உருவ வழிபாட்டிற்குத் திரும்பியிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவது போல் தோன்றுகிறது" எனக் குறிப்பிடுகிறார்.

"மார்க்கல்யாணம் மட்டுமல்லாது, பிறமலைக் கள்ளர் திருமணங்களில் கருகமணியை தாலியாக பயன்படுத்துவது, உப்பின் மீது கால் வைத்து மணமகன் தாலி கட்டுவது ஆகியவையும் இஸ்லாமிய மதத்துடன் ஒத்துப்போகிறது" என்கிறார் இரா.சுந்தரவந்தியத்தேவன்.

ஆனால் இதை மறுக்கும் எழுத்தாளர் மற்றும் நாட்டாரியல் ஆய்வாளர் பாவெல் பாரதி, "உலகின் பல்வேறு பழங்குடி இனக்குழுக்களிடம் 'விருத்த சேதனம்' சடங்கு இருந்துள்ளது எனும்போது, இஸ்லாமிய மதம் மூலம் மட்டுமே இச்சடங்கு பிறமலைக் கள்ளர்களிடம் தோன்றியது எனக் கூற முடியாது" என்கிறார்.

"கள்ளர் இனமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காடுகளில் வாழ்ந்தவர்கள் தான். அதேசமயம் அவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இணக்கமான உறவு வரலாறு நெடுகிலும் இருந்துள்ளது. இப்போதும் அது தொடர்கிறது. வயதில் மூத்த இஸ்லாமியர்களை 'சீயான்' என அழைக்கும் பழக்கம் அவர்களிடம் உள்ளது" என்று கூறுகிறார் பாரதி.

"இந்தச் சடங்கு நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்படுகிறது. 1960-70களில் வெட்டப்பட்ட முன்தோலை குளம் அல்லது குட்டையில் போடும் வழக்கம் இருந்தது. பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து அதில் முன்தோலை போடும் வழக்கம் வந்தது. அதன் பின்னரே சிறுவர்களை நீர்நிலையில் இறக்கிவிடுவார்கள். இவ்வழக்கம் இஸ்லாமியர்களிடையே இல்லை" என்கிறார் அவர்.

மாறுபட்ட வழக்கங்கள்

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவின் ஹோசா பழங்குடி இனச் சிறுவர்கள் (கோப்புப் படம்-2013)

இதேபோல ஆப்பிரிக்க பழங்குடிகளிடமும் விருத்த சேதனம் தொடர்பாக மாறுபட்ட ஒரு வழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலா 'லாங் வாக் டூ ஃப்ரீடம்' நூலில், "விருத்த சேதனத்திற்கு பிறகு நாங்கள் அழக்கூடாது, வலியை தாங்கிக்கொள்ளவேண்டும். அதன்பிறகு, குடிசையைவிட்டு வெளியேறி, இரவோடு இரவாக நடந்து சென்று எங்களுடைய முன்தோல்களைப் புதைக்குமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. மந்திரவாதிகள் அவற்றைத் தீய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, அவற்றை மறைத்து வைப்பதே இந்தப் பழக்கத்தின் பின்னணியில் இருந்த பாரம்பரிய நம்பிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டன் தனது 'தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்' (1909) நூலில், "மியாசா பேடா எனும் இந்து சமூகப் பிரிவினர், பத்து அல்லது பன்னிரண்டு வயதுடைய சிறுவர்களுக்கு 'விருத்த சேதனம்' செய்யும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

(மியாசா பேடா- கர்நாடகா மற்றும் அதையொட்டிய ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்)

"சடங்கிற்குப் பிறகு, அந்தச் சிறுவன் பதினொரு நாட்களுக்குத் தனிக் குடிசையில் வைக்கப்படுகிறான். அந்தக் காலத்தில் யாரும் அவனைத் தொடுவதில்லை. அவனுக்கு உணவு ஒரு கல்லின் மீது வைத்துக் கொடுக்கப்படுகிறது."

"பன்னிரண்டாவது நாளில் அவனைக் குளிப்பாட்டி, புதிய ஆடை அணிவிக்கப்படுகிறது. பின்னர் அவன் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவன் முன்பு அணிந்திருந்த பழைய ஆடையும், அவனுக்கு உணவு பரிமாறப் பயன்படுத்தப்பட்ட கல்லும் தூக்கி எறியப்படுகின்றன" என அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலை என்ன?

மார்க்கல்யாணம், விருத்த சேதனம், பிறமலைக் கள்ளர்கள், தமிழ்நாடு
படக்குறிப்பு, எழுத்தாளர் பாவெல் பாரதி

ஒவ்வொரு வருடமும் பள்ளி விடுமுறை காலங்களில் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 20 முதல் 30 சிறுவர்களுக்கு தான் 'கவுர் அடைப்பு' சடங்கைச் செய்வதாகக் கூறுகிறார் தேனி மாவட்டத்தின் கோம்பை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி.

"நாங்கள் 4 தலைமுறைகளாக இதைச் செய்து வருகிறோம். பிறமலைக் கள்ளர் சமூக மக்கள் இன்றும் இதை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். பிரதான சடங்கைச் செய்தபிறகு, சிறுவர்களுக்கு 30 நாட்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். காயமும் ஆற நாட்கள் ஆகும் என்பதால், கோடை விடுமுறையை பெற்றோர் தேர்ந்தெடுக்கிறார்கள்" என்கிறார் அவர்.

ஆனால், 90களில் பத்திரிக்கை அடித்து, ஒரு திருமண நிகழ்வு போல நடைபெற்ற இந்தச் சடங்கு இப்போது பெயரளவுக்கு மட்டுமே நடைபெறுவதாகக் கூறுகிறார் தேனியைச் சேர்ந்த ராஜா.

"பலரும் மருத்துவமனைக்கு சென்று எளிமையாக இதை முடித்துவிடுகிறார்கள். சிலர் இன்றைய காலத்திற்கு இந்தச் சடங்கே தேவையில்லை என நினைக்கிறார்கள்" என்கிறார் அவர்.

1987இல் நடைபெற்ற தனது 'மார்க்கல்யாண' நிகழ்வின் அழைப்பிதழை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கிறார் பாவெல் பாரதி.

"காலங்கள் மாறிவிட்டன என்பதால் பழைய கட்டுப்பாடுகள் இப்போது இல்லை. ஆனால், அப்போது அந்தச் சடங்கின் போதும் அதற்கு பிறகான சில நாட்களுக்கும், நாங்கள் உண்மையிலேயே 'மாப்பிள்ளை' போல நடத்தப்பட்டோம். கேட்டவை அனைத்தும் மறுக்காமல் கிடைத்தன" என நினைவுகூர்கிறார் பாரதி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு