உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த 6 விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்படலாம் தெரியுமா?

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை மீறியதற்காக, கடந்த ஆண்டில் மட்டும் 95,568 ஓட்டுநர் உரிமங்களை இடைநீக்கம் செய்திருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மொபைல் ஃபோனில் பேசியபடி வாகனங்களை இயக்கியதற்காக 23,295 பேருடைய ஓட்டுநர் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 8 முதல் 9 லட்சம் பேர் வரை புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். ஒரு லட்சம் பேரின் உரிமங்கள் மீது 6 விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழகத்தில் எந்தெந்த விதமான விதிமீறல்களுக்காக ஓட்டுநர் உரிமங்கள் இடை நீக்கம் மற்றும் ரத்து செய்யப்படும், அதை எப்போது திரும்பப் பெற முடியும் என்பதை தமிழக போக்குவரத்துத் துறைஇணைய தகவல்கள், அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்த தகவல்களின்படி இங்கு விளக்கபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர்?

தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டில் போக்குவரத்து மானியக் கோரிக்கையின்போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தகவலின்படி, 2025 ஏப்ரல் முதல் தேதி வரையிலுமாக, மாநிலத்தில் மொத்தமாக 2 கோடியே 79 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். அன்றைய காலகட்டம் வரையிலும் தமிழகத்தில் 3.76 கோடி வாகனங்கள் பதிவு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 5% என்ற அளவில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 70.10 லட்சம் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் 3.85% மட்டுமே.

மொத்தமுள்ள வாகனங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம். இது மாநிலத்தின் வாகன எண்ணிக்கையில் 83.97%. ஆண்டுதோறும் சராசரியாக 9 லட்சம் பேர், புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்று வரும் நிலையில், இந்த எண்ணிக்கையில் 10% பேர், போக்குவரத்து விதிமீறல்களுக்காகத் தங்களுடைய ஓட்டுநர் உரிமங்களைத் தற்காலிகமாக இழப்பது தெரிய வந்துள்ளது.

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

செப்டம்பர் மாதம் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் பகிர்ந்த தகவலின்படி, தமிழகத்தில் கடந்த ஆண்டில் 95,568 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக, மொபைல் போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டிய, 23,295 பேரின் ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிவேகம், அதிக பாரம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களிலும், ஓட்டுநர் உரிமங்கள் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஆணையரக அதிகாரிகள் தகவல் பகிர்ந்துள்ளனர். அத்துடன், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் 23,496 பேரின் ஓட்டுநர் உரிமம் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்ய வித்திடும் 6 விதிமீறல்கள்

இந்த விதிமீறல்களை 6 ஹெட் (6 Head) என்று காவல்துறையினர் வகைப்படுத்தி வழக்காகப் பதிவு செய்கின்றனர். இத்தகைய ஆறு விதமான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீதுதான் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் அல்லது ரத்து செய்ய காவல்துறையினர் பரிந்துரை செய்கின்றனர். அவை,

  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்
  • அதிக வேகத்தில், ஆபத்தான வகையில் அல்லது பொறுப்பற்ற வகையில் வாகனம் இயக்குதல்
  • சிவப்பு விளக்கு எரியும்போது சிக்னலை மதிக்காமல் கடந்து செல்லுதல்
  • அதிக பயணிகள் அல்லது அதிக பாரம் ஏற்றிச் செல்வது
  • சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது
  • வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுவது
உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

விதிமீறல்களை காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது எப்படி?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாடு காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு காவலர்கள், நேரடியாக வாகனச் சோதனை மேற்கொள்ளும்போது இந்தத் தவறுகளைக் கண்டறிகின்றனர். சில புகார்களின் அடிப்படையில் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்கின்றனர். வேகத்தைக் கண்டறியும் கருவி, சாலைகள் மற்றும் சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையிலும் அவர்கள் விதிமீறல்களைக் கண்டறிகின்றனர்.

அவ்வாறு கண்டறிந்து அந்த வாகன ஓட்டுநர் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர். இதற்கான கருவியில் விதிமீறல் அல்லது குற்றத்தின் விவரங்களைப் பதிவு செய்யும்போதே, அதில் வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு அந்த விவரத்தை அனுப்பும் பகுதியும் இடம் பெற்றிருக்கும். விதிமீறல் விவரத்தைப் பதிவு செய்யும்போதே அதையும் அவர்கள் அனுப்பி விடுகின்றனர்.

அவர்களுடைய பரிந்துரைகளைப் பரிசீலித்து, விளக்கம் பெற்று போக்குவரத்துத் துறையினர் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் அல்லது ரத்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. ஆனால் சில குற்றங்களின்போது, ஒருவருடைய ஓட்டுநர் உரிமங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யலாம்.

அப்போது காவல்துறையால் தரப்படும் வழக்கு சார்ந்த ஆவணத்தை ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். ஆனால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்கி, அது விபத்துக்கு உள்ளானால் அந்த விபத்துக்கான காப்பீடு நிராகரிக்கப்படும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

விதிமீறலில் ஈடுபட்டவர் யார் என்பதை யார் நிரூபிப்பது?

எதன் அடிப்படையில் எவ்வளவு காலத்திற்கு ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்துத் துறை ரத்து செய்கிறது?

இதுகுறித்து விளக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், ''காவல்துறையினர் பதிவு செய்யும் போக்குவரத்து விதிமீறல் குற்ற விவரம், அவர்களால் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்டதும் துறையின் இணையதளத்திற்குச் சென்றுவிடும். அதைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு காவல்துறை பரிந்துரைத்த விவரங்களுடன் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்படும்'' என்கின்றனர்.

''சில நேரங்களில் ஒருவருக்குச் சொந்தமான வாகனத்தை வேறு ஒருவர் இயக்கும்போது, இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டிருப்பார். அப்போதும் அந்த வாகனத்தின் உரிமையாளராகப் பதிவு பெற்றிருக்கும் நபரே அந்த விதிமீறலில் ஈடுபட்டதாகக் கருதி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அப்போது அந்த விதிமீறலில் தான் ஈடுபடவில்லை என்பதை அவர் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்'' என்கின்றனர்.

அதாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர் இயக்கிய வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் (RC BOOK) இணைக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் தொடர்பு எண்ணை ஆய்வு செய்து, அந்த விதிமீறல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அந்த வாகன உரிமையாளருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு அவர் 15 நாட்களுக்குள் விளக்கம் அனுப்ப வேண்டியது அவசியம்.

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

விளக்கம் அளிக்காத பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?

சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் தரப்பில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய விளக்கம் அளிக்கப்படாத சூழலில், அவர் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கருதி, அவருடைய ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும். ஒரு சில வழக்குகளில் உயிரிழப்பு, அதிக விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநரின் உரிமம் 6 மாதங்கள் வரை ரத்து செய்யப்படுகிறது.

உரிமம் ரத்து அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் போது வாகனத்தை இயக்கினால் உரிமமின்றி வாகனத்தை இயக்கியதாகக் கருதப்பட்டு, அதற்கான அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இடைநீக்கம் செய்யப்படும் உரிமங்கள், அந்தக் கால அவகாசம் அதாவது 3 மாதங்கள் அல்லது 6 மாதங்கள் முடிந்த பிறகு மீண்டும் செல்லத்தக்கதாக மாறிவிடும் என்கின்றனர் போக்குவரத்துத் துறை அலுவலர்கள்.

தற்போது டிஜிட்டல் முறையில் உரிமம் மீண்டும் செயல்படுத்தப்படுவது தானாகவே நடைபெறும். கட்டாய இடைநீக்கக் காலம் முடிந்தவுடன், மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் பரிவாஹன் தளம் 'இடைநீக்கம்' என்ற நிலையைத் தானாகவே நீக்கிவிடும்.

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

ஓட்டுநர் உரிமம் ரத்து அல்லது இடைநீக்கம் செய்ய வித்திடும் சட்ட விதிகள்

மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் கீழ் 19, 20, 21 மற்றும் 22 உள்ளிட்ட சில பிரிவுகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கே வழங்கப்படுகிறது. தலைமை நீதிமன்றத்திற்கும் இந்த அதிகாரம் இருக்கிறது. சில வழக்குகளில் தாமாகவே இந்த ஓட்டுநர் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றன.

இடைநீக்கங்கள் தற்காலிகமானவை என்றாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யும்போது, அந்த உரிமம் ரத்து செய்யப்படலாம். தொடர்ச்சியான அல்லது மிகக் கடுமையான குற்றங்களுக்கே ஓட்டுநர் உரிமம் மீதான ரத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனம் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றம், மரணம் ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிப்பது, மீண்டும் மீண்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆகிய குற்றங்களின்போது, ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கு காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

ஒருவரது ஓட்டுநர் உரிமம் செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிவது எப்படி?

எம்-பரிவாஹன் செயலி அல்லது பரிவாஹன் இணையதளத்தில் ஓட்டுநர் உரிம எண்ணைப் பதிவிட்டால் அது தற்போது செயல்பாட்டில் உள்ளதா, இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதா அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதா என்பதைக் காண்பிக்கும். சில நேரங்களில் போக்குவரத்துத் துறையின் ஆய்வில் இருப்பதையும் குறிப்பிடும். அதன் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம்.

உங்கள் ஓட்டுநர் உரிமம் எத்தகைய விதிமீறல்களுக்கு இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படலாம்?

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதை அவர் செலுத்தாத பட்சத்தில் அதற்காக அவருடைய ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படுமா?

மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட புதிய விதிகளின்படி, சில மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த விதிமுறை செயல்பாட்டில் இல்லை. ஒருவர் மீதான அபராதம் சார்ந்த இ-சலான்கள் 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால், அந்த நபருடைய ஓட்டுநர் உரிமத்தின் மீது இடைநீக்க நடவடிக்கையை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எடுக்கலாம் என்பதே அந்தப் புதிய விதிமுறை.

மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் புதிய விதிகள் கூறுவது என்ன?

புதிய விதிமுறைகளின்படி, ஓராண்டுக்கு ஒரு நபர் மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளை 5 அல்லது அதற்கும் அதிகமான முறைகளில் மீறியிருந்தால் அவருடைய ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படலாம். அதற்கு முன்பு அவரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த விதிமுறையில் முந்தைய ஆண்டில் அந்த நபர் மீதான விதிமீறல் புகார்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

முன்மொழியப்பட்ட போக்குவரத்துப் புள்ளி முறையின் கீழ், விதிமீறல்களில் 3 ஆண்டுகளுக்குள் 12 புள்ளிகளைப் பெற்றால், அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்படும். மீண்டும் அதே குற்றத்தைத் தொடரும்பட்சத்தில் அந்த இடைநீக்கம் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். இந்தப் புதிய விதிகள் தமிழ்நாட்டில் இப்போது வரை நடைமுறைக்கு வரவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு