சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' - அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்?

பட மூலாதாரம், Getty Images
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபர் 17) முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாரிமுனையில் 36 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கத்திவாக்கம், மீனம்பாக்கம், சென்னை சென்ட்ரல், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளிலும் அதி கனமழை பெய்துள்ளது.
இதற்கிடையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள மழைப்பதிவு அறிக்கையின்படி, அக்டோபர் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 18ஆம் தேதி காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில், நகரின் 65 மழைமானி நிலையங்களில் சராசரியாக 10.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாரிமுனையில் 36 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 28.5 செ.மீ., சென்னை சென்ட்ரலில் 27.4 செ.மீ., திருவொற்றியூரில் 22.4 செ.மீ., எண்ணூரில் 21.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. (இந்த 6 இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.)
மேலும், கார்கில் நகரில் 19.2 செ.மீ., சிமெட்ரி சாலைப் பகுதியில் 17.9 செ.மீ., சைதாப்பேட்டையில் 17.02 செ.மீ., தண்டையார்பேட்டையில் 16.6 செ.மீ., வடபழனியில் 16.4 செ,மீ, பேசின் பாலத்தில் 15.4 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவில் மழை இல்லை
மாதவரத்தில் 12.6 செ.மீ., மணலியில் 12.4 செ,மீ., சாலிகிராமத்தில் 12.1 செ.மீ., ஆலந்தூரில் 13.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாநகராட்சி அறிக்கைப்படி, 65 இடங்களில் ஆறு இடங்களில் அதி கனமழையும், 17 இடங்களில் மிக கனமழையும், 18 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. மேலும், 22 இடங்களில் மிதமான மழையும், இரண்டு இடங்களில் லேசான மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவில் மழை பெய்யவில்லை என்பதும் இந்தப் பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
பாரிமுனை மற்றும் கத்திவாக்கத்தில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்திருந்தாலும், வேளச்சேரியில் 2 செ.மீ, நீலாங்கரையில் 5 மில்லிமீட்டரும், மேடவாக்கம் சந்திப்பில் 4.8 மில்லிமீட்டரும் மட்டுமே பதிவாகி இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC-GCC) அக்டோபர் 17 அதிகாலை 6 மணி முதல் அக்டோபர் 18 அதிகாலை 6 மணி வரையிலான மழைப்பொழிவு தரவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எவ்வளவு மழை?
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் அக்டோபர் 18-ஆம் தேதிக்கான மழைப்பதிவின்படி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 11.9 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 11.8 செ.மீ., சோழவரத்தில் 6.8மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக மழைமானி நிலையத்தில் 7.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை, விழுப்புரம் மாவட்டம் செம்மேட்டில் 14.36 சென்டிமீட்டர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 13.02 சென்டிமீட்டர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 11.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 11.02 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் இறையூரில் 10.2 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 10.19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்த நாட்களில் எப்படி இருக்கும்?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தென்மேற்குப் பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி நாட்டிலிருந்து முழுமையாக விலகியதுடன், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழைக் கால மழைப்பொழிவு தொடங்கியுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 17-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, வட தமிழகப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல், சுமார் 4.5 முதல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதேபோல், கேரளா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அக்டோபர் 18-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 19-ஆம் தேதியும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 20-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியிட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மண்டல அளவிலான ஏழு நாள் எச்சரிக்கையில், அக்டோபர் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், அக்டோபர் 19, 21, 22, 23 மற்றும் 24ஆம் தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், IMD Chennai
சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியது என்ன?
சென்னையில் அக்டோபர் 17-ஆம் தேதி இரவு தொடங்கி பெய்த கனமழை, குறிப்பாக வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளிலும், பிராட்வே, பிரகாசம் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட மத்திய சென்னை பகுதிகளிலும் மிக அதிக மழை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
சில மணி நேரங்களிலேயே சுமார் 35.8 செ.மீ. அளவுக்கு மழை பெய்ததாக குறிப்பிட்ட அவர், இதை சாதாரண மழை நிகழ்வாக பார்க்க முடியாது என்றும், மிகத் தீவிரமான வானிலை நிகழ்வாக கருத வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மழையின் தீவிரம் இந்த அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அடுத்த சில நாட்களிலும், குறிப்பாக இரவு நேரங்களில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்புகள் இருப்பதால், மாநகராட்சி களப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 19 ஆயிரம் களப் பணியாளர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சமீரன் தெரிவித்தார்.
துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் நேரடியாக களத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
சில இடங்களில் சாலைகளில் சுமார் ஒன்றரை அடி வரை தண்ணீர் தேங்கியிருந்தாலும், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படாத வகையில் நிலைமை கையாளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறினார்.
மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையில் இரவு முழுவதும் நீர் அகற்றும் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன என்பதைக் கொண்டு உடனுக்குடன் குழுக்கள் அனுப்பப்படுவதாகவும் சமீரன் கூறினார்.
மழைநீர் அதிகம் சூழ வாய்ப்புள்ள வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும், வடசென்னையில் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்புவதற்காக கூடுதல் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் ஐந்து நிவாரண மையங்கள் முன்னெச்சரிக்கையாகத் தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமீரன் தெரிவித்தார்.
பழுதடைந்த அல்லது பாதுகாப்பற்ற கட்டடங்களில் வசிப்பவர்கள் தேவையெனில் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டுமென்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,"மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்மாற்றிகள், மின்பெட்டிகள் மற்றும் வெளிப்படையாக உள்ள மின்சார அமைப்புகளுக்கு அருகில் பொது மக்கள் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், கால்வாய்கள் மற்றும் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளுக்கு காணொளி எடுக்கவோ, வேடிக்கை பார்க்கவோ பொது மக்கள் செல்ல வேண்டாம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அத்தகைய பகுதிகளுக்குச் செல்லாமல் இருப்பதை குடும்பத்தினர் கவனமாக உறுதிசெய்ய வேண்டும்" என்று சமீரன் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 17 முதல் 21-ஆம் தேதி வரை அதிக மழைக்கான வாய்ப்பு இருப்பதாக முன்னறிவிப்புகள் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி மட்டுமின்றி காவல்துறை, போக்குவரத்துத் துறை, பேரிடர் மேலாண்மை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும் சமீரன் கூறினார்.

மழை பாதிப்புகளுக்குப் பொது மக்கள் எங்கு புகார் அளிக்கலாம்?
மழை தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக ரிப்பன் கட்டடத்தில் உள்ள மாநகராட்சி தலைமையகத்திலும், வடக்கு, மத்திய, தெற்கு வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகப் பெறப்படும் புகார்களைக் கையாள 150 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற சென்னை மாநகராட்சியின் உதவி எண்ணையும், பேரிடர் கால உதவிகளுக்கு 1077 என்ற மாவட்டப் பேரிடர் உதவி எண்ணையும் தொடர்புகொள்ளலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


































