இதயத்தில் அடைப்பு ஏற்பட்டாலே கட்டாயம் ஆஞ்சியோபிளாஸ்டி வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்

இருதயத்தில் அடைப்பு இருந்தால் ஸ்டெண்ட் பொருத்துவது கட்டாயமா?
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கேரள முதல்வர் வி.டி. சதீசன் சமீபத்தில் "தேவையற்ற ஆஞ்சியோபிளாஸ்டிகளை தவிர்க்க வேண்டும்" என்று கூறியதையடுத்து, ஒரு முக்கியமான கேள்வி பொதுவெளியில் விவாதமாகியுள்ளது.

இது, 'இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்தால், ஒவ்வொரு நோயாளிக்கும் கட்டாயமாக ஸ்டென்ட் வைக்க வேண்டுமா?' என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளது.

அதற்கான பதிலைத் தேடியபோது, மருத்துவ வழிகாட்டுதல்களும் இதயநோய் நிபுணர்களும் 'இல்லை' என்றே தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, சில சூழல்களில் ஆஞ்சியோபிளாஸ்டி உயிரைக் காப்பாற்றும். ஆனால் வேறு பல சூழல்களில் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் கண்காணிப்பே போதுமானதாக இருக்கலாம்.

ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன?

ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) அல்லது PCI (Percutaneous Coronary Intervention) என்பது, இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் கரோனரி ரத்த நாளம் குறுகியிருப்பதை அல்லது அதிலுள்ள அடைப்பைத் திறக்கும் சிகிச்சை முறையாகும்.

இதில் ஒரு மெல்லிய குழாய் வழியாக பலூன் செலுத்தப்பட்டு, அடைப்பு உள்ள பகுதி விரிவாக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க "ஸ்டென்ட்" எனப்படும் உலோக வலைக்குழாய் பொருத்தப்படுகிறது.

இருதயத்தில் அடைப்பு இருந்தால் ஸ்டெண்ட் பொருத்துவது கட்டாயமா?

ஆஞ்சியோபிளாஸ்டி எப்போது உயிரைக் காப்பாற்றும்?

மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்போது, ஆஞ்சியோபிளாஸ்டி உயிர் காக்கக் கூடியதாக இருக்கும். உயிரிழப்பைத் தவிர்க்க, அதை உடனே செய்ய வேண்டியதும் அவசியம். மாரடைப்பின்போது, இதய ரத்த நாளங்களில் ஒன்று திடீரென முழுமையாக அடைக்கப்படுகிறது. இதனால் இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் நின்று விடுகிறது. இந்நேரத்தில் விரைவாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்து அடைப்பைத் திறந்தால்:

  • இதய தசை பாதிப்பு குறையும்
  • இதய செயலிழப்பு அபாயம் குறையும்
  • உயிரிழப்பு அபாயம் குறையும்

எனவே, தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மாரடைப்புகளில் ஆஞ்சியோபிளாஸ்டி தாமதமின்றி செய்யப்பட வேண்டும் என்று மருத்துவ வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.

அரசு மருத்துவரும் இதயவியல் துறையின் மூத்த பேராசிரியருமான ஜஸ்டின் பால், "ஒருவருக்கு தீவிர பாதிப்பு இருக்கும்போது, கண்டிப்பாக ஸ்டன்ட் பொருத்தப்படும். அவர் உயிர் பிழைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள், அவருக்கு இருக்கும் வலி உள்ளிட்ட அறிகுறிகள் குறைய சாத்தியக் கூறுகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்" என்றார்.

மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள்

  • மார்பில் கடுமையான அழுத்தம் அல்லது வலி
  • கை, தோள், முதுகு அல்லது தாடைக்கு வலி பரவுதல்
  • மூச்சுத் திணறல்
  • அதிக வியர்வை
  • தலைச் சுற்றல் அல்லது வாந்தி
இதய ஆரோக்கியம், ஆஞ்சியோபிளாஸ்டி

எந்தச் சூழலில் மருந்துகளே போதுமானதாக இருக்கலாம்?

பல நோயாளிகளுக்கு மாரடைப்பு இருப்பதில்லை. அதற்குப் பதிலாக, "நிலையான கரோனரி இதயநோய்" (Stable Coronary Artery Disease) அல்லது "நிலையான அஞ்ஜைனா" (Stable Angina) இருக்கும்.

இத்தகைய நோயாளிகளில்:

  • மார்பு வலி குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே வரும்
  • உடற்பயிற்சி அல்லது நடக்கும்போது வலி ஏற்பட்டு, ஓய்வெடுத்தால் குறையலாம்
  • நிலைமை உடனடியாக உயிருக்கு ஆபத்தானதாக இருக்காது

இவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையாக பொதுவாக பரிந்துரைக்கப்படுவது:

  • கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் மருந்துகள்
  • ஆஸ்பிரின் அல்லது பிற ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள்
  • ரத்த அழுத்தக் கட்டுப்பாடு
  • நீரிழிவுக் கட்டுப்பாடு
  • புகைப் பிடித்தலை நிறுத்துதல்
  • உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மாற்றங்கள்

பல சந்தர்ப்பங்களில் இந்த மருத்துவ மேலாண்மையே நோயைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருதயத்தில் அடைப்பு இருந்தால் ஸ்டெண்ட் பொருத்துவது கட்டாயமா?

எப்போது ஸ்டன்ட் பற்றி யோசிக்கப்படுகிறது?

மருந்துகள் எடுத்தும் அறிகுறிகள் தொடர்ந்தாலோ, இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டாலோ ஆஞ்சியோபிளாஸ்டி பரிசீலிக்கப்படலாம்.

அடைப்பு இருப்பது மட்டும் ஏன் ஸ்டன்ட் தேவை என்பதைக் குறிக்காது?

ஒருவருக்கு அடைப்பு இருப்பதாலேயே ஸ்டன்ட் பொருத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்கிறார் அரசு மருத்துவரும் இதயவியல் மூத்த பேராசிரியருமான ஜஸ்டின் பால்.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரிந்தாலும், மருத்துவர் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் தேட வேண்டும்:

  • அடைப்பு எவ்வளவு தீவிரமானது?
  • அது உண்மையில் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறதா?
  • நோயாளிக்கு அறிகுறிகளை ஏற்படுத்துகிறதா?
  • இதய தசைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை உருவாக்குகிறதா?

"இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்த்த பிறகே ஸ்டென்ட் தேவைதானா என்பதை முடிவு செய்ய முடியும். அடைப்பு எந்த இடத்தில் உள்ளது, பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் உயிரோட்டமுள்ள தசைகள் எங்கு எவ்வளவு உள்ளன, ஸ்டன்ட் பொருத்துவதால் நோயாளிக்கு உண்மையிலேயே ஏதாவது முன்னேற்றம் இருக்குமா என்று ஆராய்ந்துதான் ஸ்டன்ட் பொருத்த வேண்டும்" என்கிறார் மருத்துவர் ஜஸ்டின் பால்.

ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் நோயாளி கேட்க வேண்டிய கேள்விகள்

'70% அடைப்பு இருந்தால் ஸ்டென்ட் கட்டாயம்' என்பது உண்மையா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும், "70% அடைப்பு இருந்தால் ஸ்டன்ட் கட்டாயம்" என்பது உண்மையா என்று கேட்டால், மருத்துவர்கள் 'இல்லை' என்று கூறுகின்றனர்.

ஒரு ஆஞ்சியோகிராமில் "70% அடைப்பு", "80% அடைப்பு" என்று குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமே சிகிச்சை முடிவெடுக்கப் போதுமானதல்ல என்று இதயவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாறாக, மருத்துவர்:

  • நோயாளியின் அறிகுறிகள்
  • உடற்பயிற்சி சோதனை முடிவுகள்
  • ரத்த ஓட்ட மதிப்பீடுகள்
  • மொத்த இதய ஆபத்து நிலை

ஆகியவற்றையும் சேர்த்து மதிப்பீடு செய்வார். தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இதயவியல் மருத்துவர் முத்து பிபிசி தமிழிடம் பேசுகையில், "எப்படி முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்ய வேண்டுமோ, அதே போல இதயத்துக்கு ரத்த ஓட்டம் வழங்கும் முக்கிய நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டன்ட் பொருத்துவது நோயாளியின் நிலையைப் பொருத்து அவசியமாகும். ஆனால் ரத்த நாளங்களின் இறுதி பகுதிகளில் அடைப்பு இருந்தாலோ, பிரதான ரத்த நாளங்கள் அல்லாமல் பிறவற்றில் இருந்தாலோ ஸ்டன்ட் பொருத்தும் அவசியம் பெரும்பாலும் இருக்காது. அவற்றை மருந்துகள் மூலமே சமாளிக்க முடியும்" என்கிறார்.

ஆனால், 60% அல்லது 70% மேல் அடைப்பு இருந்தால் பெரும்பாலான மருத்துவர்கள் ஸ்டன்ட் பொருத்த அறிவுறுத்துவார்கள் என்றும் மருத்துவர் முத்து கூறுகிறார்.

"அடுத்து என்ன வேண்டுமானால் நடக்கலாம் என்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மருத்துவர்கள் ஸ்டன்ட் பொருத்த அறிவுறுத்துவார்கள். 60% முதல் 70% அடைப்பு இருந்தால், அவருக்கு திடீரென உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும். அதுபோன்ற அவசர நிலையைத் தவிர்க்க ஸ்டன்ட் பொருத்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்" என்றார்.

இதய ஆரோக்கியம்

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ஸ்டெண்ட் பொருத்த வேண்டுமா?

பொதுவாக அறிகுறிகள் இருப்பவர்களுக்கே ஸ்டன்ட் பொருத்துவது பெரும்பாலான நேரங்களில் அவசியமாகும் என்று கூறும் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜோசப் ராஜ், சில நேரங்களில் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் தேவைப்படலாம் என்கிறார்.

"சிலருக்கு அடைப்பு சிறிய அளவில் இருக்கும். ஆனால் ட்ரெட் மில் சோதனையில் தசை பாதிப்புகள் அதிகம் இருப்பது தெரிய வரலாம். எனவே எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஸ்டெண்ட் பொருத்தப்படும்" என்கிறார்.

உலக சுகாதார நிறுவனம், இதய நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும்:

  • வாழ்க்கை முறை மாற்றங்கள்
  • ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற காரணிகளைக் கட்டுப்படுத்துதல்
  • பொருத்தமான மருத்துவச் சிகிச்சை

ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கேரளாவில் எழுந்துள்ள விவாதத்தின் போது, தேவையற்ற மருத்துவ சிகிச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்திய மருத்துவ சங்கமும் ஒப்புக்கொண்டது. ஆனால், உயிர் காக்கக்கூடிய சூழல்களிலும் ஆஞ்சியோபிளாஸ்டி தேவையற்றது என்ற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் பரவக்கூடாது என்றும் அது எச்சரித்துள்ளது. அத்தகைய தவறான புரிதல், மாரடைப்பு நோயாளிகள் சிகிச்சையை தாமதப்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் கூறுகிறது.

ஆஞ்சியோபிளாஸ்டிக்கு முன் நோயாளி கேட்க வேண்டிய கேள்விகள்

  • அவசர நிலை அல்லாதபட்சத்தில், நோயாளி அல்லது குடும்பத்தினர் மருத்துவரிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்:
  • எனக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா?
  • இது அவசர சிகிச்சையா அல்லது திட்டமிட்ட சிகிச்சையா?
  • அடைப்பு எவ்வளவு தீவிரமாக உள்ளது?
  • அது உண்மையில் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறதா?
  • முதலில் மருந்துகள் மூலம் சிகிச்சை முயற்சி செய்ய முடியுமா?
  • ஸ்டென்ட் வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?
  • இன்னொரு மருத்துவரின் கருத்தைப் பெற வேண்டுமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு