கொல்கத்தாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழப்பு - சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுவது என்ன?

மேற்கு வங்கம்: துர்கா பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் மரணம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் திடீரென பெய்த மழையின் போது நிகழ்ந்தது. மழையிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்தைத் தேடி மக்கள் ஒரே நேரத்தில் நகர முயன்றதே நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுமியும் ஒருவர் எனத் தெரிவித்தார். மேலும், 25 பேர் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த சம்பவத்தை "துயரமானது" என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவேந்து அதிகாரி கூறினார்.

துர்கா பூஜையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 பேர் மரணம்

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம், மழை தொடங்கிய பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பு காரணமாக கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, இழுத்துக்கொண்டு, முன்னோக்கி விரைந்ததால் பலர் கீழே விழுந்து, கூட்ட நெரிசல் விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.

'திடீர் மழையால் வழுக்கி விழுந்த மக்கள்’

உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "இங்கு இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு ஒருபோதும் நடந்ததில்லை. இந்த விழா 91 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் சிலர் வழுக்கி விழுந்தனர்" என்றார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்தது. பலர் வரிசையில் நின்றிருந்தனர். அங்கு முற்றிலும் இருட்டாக இருந்தது. ஒரு விளக்குக்கூட எரியவில்லை. என்னுடன் என் பேத்தியும் மற்ற குழந்தைகளும் இருந்தனர். இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானும் கீழே விழுந்தேன். விபத்து நடந்த பிறகும் அரை மணி நேரம் வரை அங்கு காவல்துறையினரோ, பணியாளர்களோ யாரும் இல்லை" என்றார்.

மேற்கு வங்கம், துர்கா பூஜை, கூட்ட நெரிசல்

மற்றொருவர் கூறுகையில், "இந்த கூட்ட நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் கூட்ட நெரிசலால்தான் இந்த விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் கனமழை பெய்துக் கொண்டிருந்தது" என்றார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஒருவர், "பந்தலில் இருந்து வெளியேறும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அங்கு தன்னார்வலர்கள் யாரும் இல்லை. எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை" என்று கூறினார்.

மற்றொரு உள்ளூர்வாசி கூறுகையில், கனமழை பெய்துக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், மயக்கமடைந்த பலரை இருசக்கர வாகனங்களில் வெளியே கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், "இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் பார்த்த பிறகுதான் நாங்கள் இங்கு வந்தோம். இந்த பந்தல் மிகவும் அழகாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்தோம். அந்த ரீலில் இங்கு மிகுந்த கூட்டம் இருந்தது. ஆனால் நாங்கள் இங்கு வந்தபோது, ஒரு விபத்து நடந்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டோம்" என்றார்.

மேற்குவ ங்கம் துர்கா பூகை, கூட்ட நெரிசல்

மோதி, ராகுல் காந்தி இரங்கல்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், "கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். மிகுந்த துயரமும் அடைந்தேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியை பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு துணிவும் மனவலிமையும் கிடைக்க வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோதி, ராகுல் காந்தி ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்த மோதி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ₹50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வந்திருந்தார். அப்போது முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் இணைந்து கனமழையிலும் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அமித் ஷா வெளியிட்ட பதிவில், ’’துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான மிகுந்த துயரமான செய்தியை தற்போது தான் அறிந்தேன். இது குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் பேசினேன். நாளை மேற்கு வங்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்திக்கச் செல்வேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவருக்கும் உடனடி மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில், இந்த விபத்து குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாமை மற்றும் கூட்ட நிர்வாகத்தில் குறைபாடுகள் காரணமாக, மத விழாக்கள் உட்பட பெரிய மக்கள் கூடங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் அரிதானவை அல்ல.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்து மதக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தனர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு