'முஸ்லிமாக மதம் மாறிய இந்து இட ஒதுக்கீடு பெற முடியாது' - உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், AFP via Getty Images
இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற உரிமையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 15) உறுதி செய்தது.
லைவ் லா செய்தியின்படி நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
"ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதால் மட்டுமே, மாநிலத்தில் உள்ள ஏழு முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது. அவர் முன்பு கொண்டிருந்த சாதி அந்தஸ்தை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அந்தஸ்தாக மாற்றிக் கொள்ள முடியாது. அதேபோல், அவரது மத அமைப்பு மட்டும் அவர் அத்தகைய இடஒதுக்கீட்டைப் பெறத் தகுதியானவர் என்பதை இறுதியாகத் தீர்மானிக்கவும் முடியாது" என்று நீதிபதிகள் கூறியதாக லைவ் லா செய்தி கூறுகிறது.
மேலும் ''அரசியலமைப்பு சட்டப்படி, இந்து, சீக்கியம் அல்லது புத்த மதத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுபவர் பட்டியலினத்தவராகக் கருதப்பட முடியாது'' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
''மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்புபவர்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும் அவர்களின் முந்தைய அடையாளத்தை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. அதற்குத் தனிப்பட்ட உண்மைச் சூழல்களை ஆய்வு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
முன்னதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, அரசாணைக்கு எதிராக யாரும் வழக்கு தொடராத நிலையில், உயர் நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாக வாதிட்டது.
ஆனால், தமிழக அரசு இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்கப்பட்டு, அதன் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளதால், "இந்தப் பிரச்னை குறித்து அதற்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது, தனது தரப்பை முன்வைக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மதம் மாறுபவர்கள் ஏற்கெனவே பெற்று வந்த சலுகையை மட்டுமே இந்த அரசாணை தொடரச் செய்ததாகவும், இந்து மதத்துக்கு வெளியிலும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ளதாகவும் தமிழக அரசு வாதிட்டது. 1992ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பிலும் இது அங்கீகரிக்கப்பட்டு இருப்பதாக அரசு குறிப்பிட்டது.
வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், பிற மதங்களைப் பின்பற்றுபவோரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்கக்கூடும் என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு "தெளிவாக ஏற்றுக்கொள்ள முடியும்" என்று குறிப்பிட்டார். ஆனால், ஒரு மதத்தில் நிலவிய பின்தங்கிய நிலை, ஒருவர் வேறொரு மதத்தைச் சேர்ந்தவராக மாறிய பிறகும் அதே உரிமையைப் பெறுவதற்கான அடிப்படையாகத் தொடர முடியுமா என்பதே உண்மையான கேள்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பதில் சாதியை அடிப்படையாகக் கொண்டது என்று நீதிமன்றம் கூறியது. இந்து சமூகத்தில் சமூகப் படிநிலை அமைப்பின் அடித்தளமாக சாதி இருந்து வந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையிலான பின்தங்கிய நிலை, சாதியில் இருந்தே உருவாகிறது.
அதனால், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுச் சலுகையை, "சம்பந்தப்பட்ட பின்தங்கிய நிலை உருவான மதத்தில் இருந்து, அந்த அடிப்படையை அங்கீகரிக்காத மற்றொரு மதத்துக்கு இவ்வாறு எடுத்துச் செல்ல முடியாது" என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மதம் மாறுவது "ஒரு மதத்துடனான தொடர்பை ஏற்படுத்துகிறது." ஆனால், அந்த மதத்துக்குள் இருக்கும் குறிப்பிட்ட சமூக-வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சமூகத்தில் உறுப்பினராக இருப்பதை அது உறுதிப்படுத்தாது என்று நீதிபதிகள் கூறினர்.
"லெப்பை உள்ளிட்ட சமூகங்கள் மதப் பிரிவுகள் அல்ல. அவை பொதுவான மூதாதையர், தங்கள் சமூகத்துக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் வழக்கம், பாரம்பரிய தொழில், பகிரப்பட்ட வரலாறு ஆகியவற்றால் உருவான சமூகக் குழுக்கள்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த அரசாணை, மதம் மாறுவதை "ஒரு வழிப் பாலமாக" கருதியதாகவும் நீதிமன்றம் கூறியது. அதாவது, ஒரு நோக்கத்திற்காகப் பழைய சாதி ஒருவரிடம் இருந்து நீக்கப்பட்டாலும், மற்றொரு நோக்கத்திற்காக அந்தச் சாதியை வேறொரு சமூகத்திற்குள் எடுத்துச் செல்ல முடியும் என்ற அணுகுமுறையை அரசாணை கொண்டிருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவின்படி, எந்தவொரு வகைப்பாடும் பகுத்தறிவுக்கு ஏற்ற அடிப்படையைக் கொண்டிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பட்டியலினத்தவர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த இந்து மதத்தில் இருந்து மதம் மாறுபவர்கள், ஏற்கெனவே உள்ள ஏழு முஸ்லிம் சமூகங்களில் ஒன்றில் ஏன் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை அரசாணை விளக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த மற்றொரு வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மதம் மாறுபவர் ஏழு முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா என்பதை உள்ளூர் முஸ்லிம் மத அமைப்பான ஜமாத் முடிவு செய்யும் என்றும், அதன் பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் சமூகச் சான்றிதழை வழங்குவார்கள் என்றும் அரசு கூறியிருந்தது.
அகமது மதம் மாறியது ஜமாத் ஒன்றால் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவர் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அந்த அமைப்பு வழங்கிய சான்றிதழ் உறுதி செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
சான்றிதழ் வழங்குவது "அரசுப் பணி" என்பதால், சட்டத்தின்கீழ் இடஒதுக்கீடு பெறுவதற்கான நோக்கில் ஒருவரின் சமூக அந்தஸ்தை இறுதியாகத் தீர்மானிக்கும் அதிகாரத்தைத் தனியார் மத அமைப்புக்கு வழங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்துக்கு மதம் மாறும் பட்டியலினத்தவர்களுக்கு பட்டியலினத்தவர்களுக்கான பாதுகாப்புகளை விரிவுபடுத்த வேண்டுமா என்பது தொடர்பான மனுக்கள் மீதான வழக்கு, 2004ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இத்தகைய மதம் மாறியவர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு 2022ஆம் ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் இதுவரை அறிக்கையை வெளியிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் அகமது, முன்பு பரமசிவம் என்ற பெயரில் அறியப்பட்டவர். அவர் 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 2016-ஆம் ஆண்டு இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பின்னர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றான 'முஸ்லிம் லெப்பை' சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சான்றிதழ் கோரி அவர் விண்ணப்பித்தார். அதை வட்டாட்சியர் நிராகரித்ததால், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறினால், அறிவிக்கப்பட்ட ஏழு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்தவராகக் கருதி சான்றிதழ் வழங்க அனுமதித்த தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டு அரசாணையை உயர் நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மூன்று முக்கிய அடிப்படைகள் இருந்தன.
முதலாவது, 1951ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அதில், இஸ்லாமுக்கு மதம் மாறுபவர் தனது சாதியைச் சேர்ந்தவராக இருப்பதை நிறுத்திக்கொண்டு, "வெறுமனே ஒரு முஸ்லிமாக" மாறிவிடுகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இரண்டாவது, மதக் கோட்பாடு. குர்ஆனை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதே இஸ்லாத்தின் நோக்கம் என்று தெரிவித்தனர். மதம் மாறுபவர்களுக்குச் சமத்துவம் கிடைக்கும் என்று கூறியே இஸ்லாமிய மத போதகர்களும் கிறிஸ்தவ மத பிரசாரகர்களும் நீண்டகாலமாக மக்களை மதம் மாறச் செய்துள்ளனர். எனவே, இஸ்லாத்திலும் படிநிலை வேறுபாடுகள் உள்ளதாகக் கூறுவது "நேர்மையற்ற வாதம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மூன்றாவது, அதிகாரப் பிரிவினை என்ற கோட்பாடு. அதாவது, அரசின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பொறுப்புகள் உள்ளன; நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாகத் துறை தனது உத்தரவால் மீற முடியாது என்பதாகும். மதம் மாறுபவர்கள் தங்களது சாதியை இழந்துவிடுகிறார்கள் என்று 1951ஆம் ஆண்டு தீர்ப்பு நிறுவியிருப்பதால், அதைத் தவிர்ப்பதற்காக அரசு நிர்வாக உத்தரவைப் பயன்படுத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஸ்டாலின் கூறியது என்ன?
இதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகச் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மதம் மாறுவதால் சமூகப் பின்னடைவு மறைந்துவிடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கூடுதல் தகவல்கள்: வினீத் பல்லா, பிபிசி செய்தியாளர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































