வெயில் 40 டிகிரியைத் தாண்டினால் உடலில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவாங்கி ஜெய்ஸ்வால்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
வெயில் கொளுத்துகிறது. வெப்ப அலைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைகள் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
வெப்ப அலைகள் உடல்நலத்தை கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் எம். அலி தெரிவித்தார்.
"தீவிரமான வெப்பத்தினால் எவருக்காவது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது மாசுபட்ட காற்றும் வெப்பமும் இணைந்து உடல்நலத்தை பாதித்ததற்கான அறிகுறியாகும். இது உடலில் ஆக்சிஜன் அளவைக் குறைக்கும், இது ஆபத்தானதாக மாறக்கூடும்" என்று அவர் குறிப்பிட்டார்.
"ஆஸ்துமா, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு இந்த பருவம் மிகவும் ஆபத்தானது. ஏனெனில், வெப்ப அலைகளின் போது காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதுடன், மாசுக்களும் அதிகரிக்கின்றன. முடிந்தவரை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" என்று டாக்டர் எம். அலி அறிவுறுத்தினார்.
வெளியிடங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இத்தகைய சூழலில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர் அலி பட்டியலிட்டார்.
"ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியாதீர்கள். உங்கள் உடலை முழுமையாக ஆடையால் மூடிக்கொள்ளுங்கள். மக்கள் பெரும்பாலும் கறுப்பு நிறக் குடைகளைப் பயன்படுத்தி வெளியே செல்கிறார்கள். இது வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும். வெள்ளை நிறக் குடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. தலையை வெள்ளை நிறத் துணியால் மூடிக்கொள்வதும் நல்லது.
சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் எஸ்பிஎஃப் 50 கொண்ட சன்ஸ்கிரீனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு குறைவான எஸ்பிஎஃப் கொண்டவற்றைத் தவிர்க்கவும். மேலும், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை இதைப் பூச வேண்டும். ஏனெனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் பாதுகாப்பு திறன் குறைந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
வெப்பத்திலிருந்து தப்பிக்கப் பலர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தகைய சூழலில் வீட்டின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
இரவு நேரத்தில் வீசும் காற்றைக் கொண்டு உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, இருட்டிய பிறகு ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும். அதேபோல், பகல் நேரத்தில் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுப்புற வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக இருந்தால், மின்விசிறிகள் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால், வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டினால், மின்விசிறிகள் உடலை குளிர்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக, சூட்டை அதிகரிக்கக்கூடும். இத்தகைய சூழலில் ஏர் கூலர் போன்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
உங்கள் வீட்டில் ஏசி இருந்தால், ஏசியை 27 டிகிரி செல்சியஸில் செட் செய்து மின்விசிறியை ஆன் செய்தால், நான்கு டிகிரி குறைவான குளிர்ச்சி, அதாவது 23 டிகிரி அளவிலான குளிர்ச்சி கிடைக்கும். இதன் மூலம் மின்சாரமும் சேமிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
குளிர்பானங்கள் உங்கள் உடலைக் குளிர்விக்காது
கோடைக்காலத்தில் எதைச் சாப்பிட வேண்டும் என்பதை விட, எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் அலி விளக்கினார்.
''அதிக கலோரி, கொழுப்பு மற்றும் சோடியம் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். கொழுப்பு மற்றும் கலோரி அதிகமாக இருக்கும்போது அவை செரிமானமாவது கடினம். இதனால் உடல் வெப்பநிலை உயர்ந்து, அதிக வெப்பமாகவும் சோர்வாகவும் உணரக்கூடும்.''
கல் உப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
உடலைக் குளிர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க, இத்தகைய வெப்பமான காலநிலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது சாப்பிட்ட உடனேயோ வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் அலி கூறினார்.
தீவிர வெப்பநிலையின் போது காஃபின் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உங்களுக்குத் தாகம் எடுக்காவிட்டாலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு கப் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம். நாள் முழுவதும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம்.
"குளிர்பானங்கள் அல்லது சில்லென்று இருக்கும் பீர் போன்றவை உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவை இரண்டிலும் அதிகப்படியான சர்க்கரை உள்ளது. இது உடலில் உள்ள நீரை வெளியேற்றி, நீரிழப்புக்கு வழிவகுக்கும்" என்று டாக்டர் அலி கூறினார்.
இதற்குப் பதிலாக மோர் போன்றவற்றை அருந்த வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
வேர்வை வரவில்லை என்றால் எச்சரிக்கையாக இருக்கவும்!
உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டினால், வெப்பத்தாக்குதல் ஏற்படும் என்று பிபிசி கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூழலில், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
உங்களுக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டும்:
- வேர்வை வெளியேறாமை: உடல் வெப்பமாக இருந்தாலும், வேர்வை வராமல் உடல் வறண்டு காணப்படுதல்.
- மூச்சுத் திணறல்.
வெப்பத்தாக்குதலால் சுயநினைவை இழத்தல், முக்கிய உறுப்புகளுக்கு நிரந்தர பாதிப்பு மற்றும் தீவிரமான நிலைகளில் மரணம் கூட ஏற்படலாம்.
இந்தச் சூழலில், உங்கள் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும். உங்கள் உடல் தாங்க முடியாத அளவிற்கு வெப்பமடைந்தால், தலைவலி, தலைச்சுற்றல், பசியின்மை, குமட்டல், அதிகப்படியான வேர்வை, தசைப்பிடிப்பு, வேகமான மூச்சு மற்றும் அதீத தாகம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இத்தகைய நிலையில், உடனடியாக உங்கள் வேலைகளைக் குறைத்துக்கொண்டு, உடல் வெப்பநிலையைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உடனடியாகக் குளிர்ச்சியான இடத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது உடலை ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
40 டிகிரி வெப்பநிலையில் உங்கள் உடல் எவ்வாறு செயல்படுகிறது?
வெப்ப அலைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்காக, பிபிசியின் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லாகர் 2023-ல் தெற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைச் செயற்கையாக உருவாக்கி ஆய்வு செய்தார்.
அறிவியல் கருவிகளின் கண்காணிப்பில், அந்த அறையின் வெப்பநிலை படிப்படியாக 21 டிகிரி செல்சியஸில் இருந்து 40.3 டிகிரி செல்சியஸாக உயர்த்தப்பட்டது. அப்போது கண்டறியப்பட்ட தகவல்கள்:
- மூளைக்கான ரத்த ஓட்டம் 8.5 சதவீதம் குறைந்தது.
- சுவாச விகிதம் நிமிடத்திற்கு 10-ல் இருந்து 15 ஆக அதிகரித்தது.
- இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 54-ல் இருந்து 87 ஆக உயர்ந்தது.
- உடல் வெப்பநிலை 36.2-ல் இருந்து 37.5 டிகிரி செல்சியஸை எட்டியது.
- ஒரு மணி நேரச் சோதனையில் 400 மில்லி வேர்வை உற்பத்தியானது.
- தோல் வெப்பநிலை 31.3 முதல் 35.4 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டதாக இருந்தது.
இந்தச் சோதனையில், பரிசோதிக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையில், நினைவாற்றல் புதிர்களுக்கான ஸ்கோர் 23/30-ல் இருந்து 17/30 ஆகக் குறைந்தது. மூளையின் நினைவாற்றல் திறனில் வெப்பநிலை ஏற்படுத்தும் தாக்கத்தை இது காட்டுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























