சென்னை சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் வாய்ப்பைத் தகர்த்துவிட்டாரா 15 வயது சூர்யவன்ஷி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஒருவழியாக இந்த சீசனில் தங்களின் 7வது வெற்றியைப் பதிவு செய்துவிட்டது. நேற்று (மே 19) ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல்ஸ்.
முதலில் பேட்டிங் செய்த லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதை 19.1 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த சீசனில் 200+ இலக்கு 16வது முறையாக வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 93 ரன்கள் எடுத்து தன் அணியை வெற்றி பெறவைத்தார். வெறும் 38 பந்துகளை சந்தித்து அந்த ஸ்கோரை எடுத்த சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் விளாசினார். தன் அணியின் வெற்றிகரமான சேஸிங்குக்கு முக்கியக் காரணமாக விளங்கிய அவர் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி. இன்னும் அந்த அணிக்கு ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்தப் போட்டியை வென்றால் அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
அதேசமயம் ராயல்ஸின் இந்த வெற்றி, பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சற்றுப் பாதகமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்தப் போட்டியின் முடிவு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரும் சவால்களை சந்தித்துக்கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தப் போட்டியில் கம்பேக் கொடுத்தது எப்படி, சூர்யவன்ஷி தன் அணியை வெற்றி பெறவைத்தது எப்படி, இந்தப் போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எந்த வகையில் பாதகமாக அமைந்தது என்பனவற்றை அலசுவோம்.
மார்ஷ் - இங்லிஸ் அதிரடியிலிருந்து ராயல்ஸ் மீண்டது எப்படி?

பட மூலாதாரம், ANI
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக ரியான் பராக் இந்தப் போட்டியில் விளையாடாததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் கேப்டனாக செயல்பட்டார். காயம் முழுமையாகக் குணமடையாததால் ரவீந்திர ஜடேஜாவும் இந்தப் போட்டியில் ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல், தங்களின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இந்த சீசன் அதற்கு முன் ஆடிய 3 போட்டிகளிலுமே ராயல்ஸ் தோற்றிருந்தது.
இப்படி இக்கட்டான நிலையில் களமிறங்கிய ராயல்ஸுக்கு, எல்எஸ்ஜி தொடக்கவீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜாஷ் இங்லிஸ் இருவரும் பெரும் சவால் கொடுத்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் இருந்தே அதிரடியைத் தொடங்கினார்கள் அந்த இரு ஆஸ்திரேலிய பேட்டர்களும். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க பவர்பிளேவிலேயே 83 ரன்கள் எடுத்தது சூப்பர் ஜெயின்ட்ஸ்.
8 ஓவர்கள் முடிவிலேயே 100 ரன்களையும் கடந்துவிட்டது அந்த அணி. ரன்ரேட் 13.12 ஆக இருந்தது. அதனால், அவர்கள் 240 ரன்களுக்கு மேலே கூட அடித்துவிடுவார்கள் என்று கருதப்பட்டது. ஆனால், அதன்பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியில் கம்பேக் கொடுத்தது. அதற்கு முக்கியக் காரணமாக விளங்கினார் அந்த அணியின் ஸ்பின்னர் யஷ் ராஜ் புஞ்சா.
9வது ஓவரில் இங்லிஸ் விக்கெட்டை (29 பந்துகளில் 60 ரன்கள்) அவர் வீழ்த்தினார். ஆனால், அதன்பிறகும் கூட லக்னௌ அணியின் அதிரடி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. 12 ஓவர்கள் முடிவில் 149/1 என்ற நிலையில் இருந்தது அந்த அணி. அப்போதும் கூட அவர்களின் ரன்ரேட் 12.41 ஆக இருந்தது. ஆனால், மீண்டும் அவர்களின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார் யஷ் ராஜ் புஞ்சா.
13வது ஓவரை வீசிய அவர், நிகோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும், அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய பிரிஜேஷ் ஷர்மா சிக்கனமாகப் பந்துவீசி 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மீண்டும் 15வது ஓவரை வீசவந்த யஷ் ராஜ் புஞ்சா அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இந்தக் கட்டத்தில் தான் எல்எஸ்ஜி அணியின் ரன்ரேட் வெகுவாகக் குறைந்தது. இந்த 3 ஓவர்களில் அந்த அணி 16 ரன்கள் மட்டும் எடுத்து 1 விக்கெட்டையும் இழந்தது. 15வது ஓவர் முடிவில் அவர்களின் ரன்ரேட்டும் 11 ஆகக் குறைந்துவிட்டது. யஷ் ராஜ் புஞ்சா தன் 35/2 என்று தன் ஸ்பெல்லை வெற்றிகரமாக முடித்தார்.
அதுமட்டுமல்லாமல், கடைசி ஓவரில் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினார். அந்த ஓவரில் அவர் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ரன் அவுட்கள் உள்பட 3 விக்கெட்டுகள் அந்த ஓவரில் வீழ்ந்தன. 57 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய மிட்செல் மார்ஷ் கூட ரன் அவுட் ஆனார். ஆர்ச்சரின் அந்த சிறப்பான கடைசி ஓவரின் காரணமாக எல்எஸ்ஜி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களே எடுத்தது.
சூர்யவன்ஷியின் புதிய அணுகுமுறை

பட மூலாதாரம், ANI
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை இந்த சேஸ் அவர்களுக்கு கடினமாக இருந்துவிடவில்லை. முதல் ஓவரிலேயே அவர்களுக்கு 23 ரன்கள் வந்தது. ஒட்டுமொத்தமாக அவர்களின் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் 15 ரன்களோ அதற்கு மேலோ அடிக்கப்பட்டன. அதில் 3 ஓவர்களில் 20 ரன்களுக்கும் மேல் அடிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே சீரான அந்த அதிரடியை வெளிப்படுத்தியதால் 19.1 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்தது ராயல்ஸ்.
ஆனால், இந்தப் போட்டியைப் பொறுத்தவை ஆட்ட நாயகன் வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் சற்று வழக்கத்துக்கு மாறாக இருந்தது. எப்போதும் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் அவர், இந்தப் போட்டியில் சற்று நிதானம் காட்டினார். மறுபக்கம் ஜெய்ஸ்வால் வேகமாக ஆடிக்கொண்டிருக்க, இவர் தன் முதல் பவுண்டரியை அடிக்க 6 பந்துகள் எடுத்துக்கொண்டார். சொல்லப்போனால், முந்தைய 5 பந்துகளில் அவர் 1 ரன் தான் எடுத்திருந்தார்.
இதற்கு முன் இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய போட்டியில் சூர்யவன்ஷிக்கு மெய்டன் ஓவர் வீசி, அந்த ஓவரிலேயே அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் மோசின் கான். இந்தத் தொடரின் சிறந்த பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் மோசின் கானுக்கு எதிராக கவனமாக விளையாடினார் சூர்யவன்ஷி. இந்த இன்னிங்ஸில் தன் முதல் பந்தையே மோசின் கானுக்கு எதிராகத்தான் அவர் எதிர்கொண்டார். ஷார்ட்டாக வீசப்பட்ட அந்தப் பந்தை அடிக்காமல் குனிந்துகொண்டார் வைபவ். மோசின் கானின் அந்த ஓவரில் அவர் 4 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்தார்.
ஆட்ட நாயகன் விருது வாங்கும்போது பேசிய சூர்யவன்ஷி, "நான் அவசரப்படாமல் நேரம் எடுத்து விளையாட நினைத்தேன். அது மற்ற பேட்டர்களுக்கும் உதவும் என்று எனக்குத் தெரியும். என்னால் எப்போது வேண்டுமானாலும் ரன்கள் அடிக்க முடியும் என்பது எனக்கு எப்போதும் தெரியும். அதனால் நான் சற்றும் அவசரப்பட விரும்பவில்லை." என்று கூறினார். இந்தப் போட்டியில் தன் இன்னிங்ஸைக் கட்டமைத்த விதத்தின் மூலம் தன் ஆட்டத்துக்கு இன்னொரு பரிணாமம் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார் அந்த 15 வயது பேட்டர்.

பட மூலாதாரம், ANI
அவ்வளவு கவனமாக ஆடிய சூர்யவன்ஷி முதல் 10 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்தார். நன்கு செட்டில் ஆகிவிட்ட பிறகு தன் வழக்கமான அதிரடியைக் கட்டவிழ்த்தார் அவர். அடுத்த 13 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து, இந்த சீசனில் தன்னுடைய நான்காவது 50+ ஸ்கோரை அவர் பதிவு செய்தார். அடுத்த 15 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த அவர், தன்னுடைய 3வது ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை 7 ரன்களில் தவறவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசனில் மிடில் ஆர்டர் பெரும் பிரச்னையாக இருந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்தப் போட்டியில் கேப்டன் ரியான் பராக்கும் இல்லை. ஆனால், மிடில் ஆர்டருக்கு நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார் வைபவ் சூர்யவன்ஷி.
தன்னுடைய இந்த இன்னிங்ஸ் மூலம் இந்த சீசனுக்கான ஆரஞ்ச் கேப்பை அவர் வசப்படுத்தியிருக்கிறார். மேலும், ஒரு ஐபிஎல் சீசனில் 50 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.
பிளே ஆஃப் ரேஸில் அணிகளின் நிலை என்ன?
பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதிபெற்றிருக்கின்றன: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் & சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இன்னும் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மீதமிருக்கும் 1 பிளே ஆஃப் இடத்துக்குப் போட்டியிடுகின்றன.
இந்த 5 அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் மட்டுமே 16 புள்ளிகள் பெற முடியும். எனவே அந்த அணி தங்களின் அடுத்த போட்டியில் வென்றுவிட்டால் அவர்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட முடியும். மற்ற எந்தப் போட்டிகளின் முடிவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
பஞ்சாப் கிங்ஸ் (13 போட்டிகளில் 13 புள்ளிகள்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (12 போட்டிகளில் 11 புள்ளிகள்) அணிகளால் அதிகபட்சமாக 15 புள்ளிகளே பெற முடியும். 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் & டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளால் 14 புள்ளிகளே பெற முடியும். அதனால், ராயல்ஸின் இந்த வெற்றி இந்த 4 அணிகளுக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களின் கடைசிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தவேண்டும்; அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனைத்து அணிகளுமே 1 போட்டியிலாவது தோற்கவேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போதும் அதே நிலை நீடிக்கிறது.

பட மூலாதாரம், ANI
டெல்லி கேபிட்டல்ஸ் அணி தங்களின் கடைசிப் போட்டியில் வென்றாலும் கூட, அவர்களின் நெட் ரன்ரேட் (-0.871) பின்தங்கியிருப்பதால், அது சிஎஸ்கே-வுக்குப் பெரும்பாலும் பிரச்னை ஏற்படுத்தாது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ரன்ரேட் இப்போது சூப்பர் கிங்ஸுக்கு பிரச்னையாக மாறும். ஒருவேளை ராயல்ஸ் தங்களின் கடைசிப் போட்டியில் தோற்றாலும் கூட அவர்களின் நெட் ரன்ரேட் (0.083) பெரும் பின்னடைவை சந்திக்கவேண்டும். தற்போது சூப்பர் கிங்ஸ் -0.016 என்ற நெட் ரன்ரேட் வைத்திருக்கிறது. சூப்பர் கிங்ஸின் ரன்ரேட் மேம்பட்டு, ராயல்ஸின் ரன்ரேட் அடிவாங்கினால் மட்டுமே சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தானை முந்த முடியும்.
சூப்பர் கிங்ஸுக்குப் பிறகு தான் ராயல்ஸின் கடைசிப் போட்டி என்பதால், அது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சாதகமான அம்சம். என்ன வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றோ அல்லது என்ன வித்தியாசத்தில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்றோ அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிடும்.
இன்று (மே 20) ஈடன் கார்டன்ஸில் நடக்கும் போடட்டியில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இந்தப் போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும். தோற்றுவிட்டால், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது. அதேசமயம், கொல்கத்தா தோற்பது சூப்பர் கிங்ஸுக்கு சாதகமான முடிவாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























