'கருப்பு' விமர்சனம்: சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான படம் எப்படி உள்ளது?

Karuppu, Surya, RJ Balaji, Trisha

பட மூலாதாரம், DreamWarriorPictures

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு 'கருப்பு' திரைப்படம் வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

குறிப்பிட்ட நேரத்தில் திரைப்படம் வெளியாகாமல் போனதற்கு கண்ணீரோடு ரசிகர்களிடம் ஆர்.ஜே. பாலாஜி மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று (மே 15) தமிழ்நாடு முழுவதும் 'கருப்பு' திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? பல்வேறு ஊடக விமர்சனங்கள் இத்திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?

படத்தின் கதை என்ன?

Karuppu, Surya, trisha, RJ Balaji

பட மூலாதாரம், DreamWarriorPictures

படக்குறிப்பு, கருப்பு திரைப்படத்தில் வழக்கறிஞராக நடிகர் சூர்யா

சென்னையில் உள்ள ஏழு கிணறு பகுதியில் வழக்கறிஞர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி ), வழக்குக்காக வரும் பலரை காசுக்காக இழுத்தடித்து வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நபராக உள்ளார்.

தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளை நீதிமன்றத்தின் மூலம் பெற கேரளாவை சேர்ந்த தந்தையும் மகளும் வருகின்றனர். அதிக சவரன் நகை என்பதால் வழக்கம் போல் வழக்கை பேபி கண்ணன் இழுத்தடிக்கிறார், மனமுடைந்த தந்தை நீதிமன்றத்திற்கு எதிரே இருந்த கருப்பசாமியிடம் கண்ணீர் விட்டு முறையிடுகிறார். கருப்பசாமி மனித அவதாரம் (சூர்யா) எடுக்கிறார்.

நீதியை பெற்று தர வேண்டிய மனிதர்களை நீதிக்காக கடவுள் எதிர்க்கும் கதையே 'கருப்பு' திரைப்படத்தின் கதை.

Karuppu, Surya, Trisha, RJ Balaji

பட மூலாதாரம், DreamWarriorPictures

படம் எப்படி உள்ளது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நீதிமன்றத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதுடன், கருப்பசாமி என்ற கிராமத்து தெய்வத்தின் நம்பிக்கையும் தூவி கமர்சியல் மசாலா கலந்து படத்தை எடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி என்று தினத்தந்தி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவும், சாய் அபயங்கரின் இசையும் படத்தோடு ஒன்றி பலம் சேர்த்திருந்தாலும் லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டி பார்க்கிறது என்று அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற பின்னணியில் கதை நிகழ்வதால் வசனங்கள் கவனிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன என்று தினமணியின் விமர்சனம் தெரிவித்துள்ளது.

'நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும் என வருகிறோம். ஆனால், நீதிமன்றத்துக்கு வருவதே பெரிய தண்டனைதான்' போன்ற வசனங்கள் இன்றைய நீதித்துறையின் நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன என்று தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யாவின் பழைய படங்களின் சாயல்களையும், பிரபல கலாசாரக் குறிப்புகளையும் பயன்படுத்திய விதம் கருப்பு திரைப்படத்தை ரசிக்க வைக்கிறது என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிடுகிறது.

மேலும், கருப்பு திரைப்படம் பார்க்கும்போது 1990கள் மற்றும் 2000 களில் கே.டிவில் பார்க்கும் அம்மன் படங்களையே நினைவூட்டுகிறது என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Karuppu, Surya, Trisha, RJ Balaji, Natraj

பட மூலாதாரம், ThinkMusicIndia

படக்குறிப்பு, கருப்பு திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.

நடிகர்களின் செயல்பாடு எப்படி உள்ளது?

கருப்பசாமியாக ஒரு புறம் ஆக்ரோஷமும், மறுபுறம் வக்கீலாக போராட்டமும் என மாறுபட்ட நடிப்பில் சூர்யா கவனம் பெற்றிருப்பதாகவும், திரிஷா அழகாலும் அளவான நடிப்பாலும் தனக்கான கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி செயல்பட்டிருக்கிறார் எனவும் தினத்தந்தி விமர்சனம் தெரிவித்துள்ளது.

பேபி கண்ணனாக வரும் பாலாஜி வழக்கறிஞராக மிரட்டியிருப்பதோடு, டைமிங் காமெடியும் நக்கலும் சேர்ந்த கதாபாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். நடராஜன், ஜார்ஜ் மரியான், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர் என்று படத்தில் நடித்தவர்களையும் தினத்தந்தி பாராட்டியுள்ளது.

வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு வெற்றிக்கான சாத்தியங்களுடனே கருப்பு அமைந்திருக்கிறது. கடவுள் கதை என்பதைத் தாண்டி ஆக்சன் காட்சிகளை நம்பகமாகவே சில இடங்களில் மாற்றியிருக்கிறார் சூர்யா என தினமணி விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வில்லனாக ஆர்ஜே பாலாஜி நல்ல நடிப்புதான். ஆனால், முழுமையான வில்லனுக்கான ஆளாக அவர் தெரியவில்லை. வேறு ஒரு வில்லன் நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூடுதலாக பலம் பெற்றிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

"சாய் அபயங்கர் படத்தில் அசத்தலான துவக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இரைச்சல் அதிகம் இல்லாமல், ஒலி கலவைகளைச் சரியாகச் செய்திருப்பது இயல்பாகவே சூர்யா வரும் காட்சிகளில் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது என்று பின்னணி இசையையும் தினமணி பாராட்டியுள்ளது.

சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி மற்றும் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோரின் நடிப்பு, ஊகிக்கக்கூடிய இந்தக் கதையை மெருகேற்ற உதவியிருக்கிறது என்று குறிப்பிட்ட இந்தியா டுடே திரிஷாவின் நடிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு