'இன்னும் 6 மாதங்கள் நீடித்தால்' - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தில்னாவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரே வாரத்தில் இரண்டு முறை எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன. ஒரே வாரத்தில் லிட்டருக்கு சுமார் நான்கு ரூபாய் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி இறுதியில் இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு வர முடியாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூழ்நிலை இவ்வாறே நீடித்தால், எதிர்வரும் நாட்களில் எண்ணெய் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உயர்ந்து வரும் எண்ணெய் விலைகளின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கக்கூடும்.
கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60 முதல் 65 டாலர் என்ற அளவில் இருந்தபோது, 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.
எனினும், அதன் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால், நடப்பு நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.9 சதவீகிதத்தை ஒட்டி இருக்கக்கூடும் என்று 2026 மே மாதத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, 2025 நவம்பரில் 0.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்க விகிதம், தற்போது 3.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உணவு, வாடகை, போக்குவரத்து மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன என்பதையே இது நேரடியாக உணர்த்துகிறது. 3.48 சதவீத பணவீக்க விகிதம் என்பது தற்போதைக்கு ஆபத்தான கட்டம் இல்லை என்றாலும், பணவீக்கம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
அதே நேரத்தில், நவம்பரில் குறைவாக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம், தற்போது 8.3 சதவீதமாக உள்ளது. அதாவது, நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. மூலப்பொருட்கள், எரிபொருள், உலோகங்கள், போக்குவரத்து போன்றவற்றின் விலை உயர்வால் தொழில்துறையின் உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதையே இது நேரடியாக உணர்த்துகிறது.
மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பது என்பது, எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலைகள் உயரப் போவதற்கான அறிகுறியாகும். சமீபத்தில்கூட இந்தியாவில் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கு நெருக்கடிக்கு பிறகு மாறிவரும் சூழ்நிலைகள்
பணவீக்கம் மற்றும் வளர்ச்சி விகிதத்தைக் கணிக்கும் இந்த குறியீடுகளின் உயர்வுக்கு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே நேரடி காரணம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கடந்த நவம்பரில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 60 முதல் 65 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது அது 100 முதல் 110 அமெரிக்க டாலர் என்ற உயர்வை எட்டியுள்ளது. அதாவது, கச்சா எண்ணெய்யின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தபோதிலும், இந்திய அரசு மார்ச் மாதம் முதல் மே மாதத்தின் பாதி வரை எண்ணெய் விலையை உயர்த்தாமல் இருந்தது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலேயே இந்திய அரசு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே, எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.

பட மூலாதாரம், AFP via Getty Images
பொருளாதார நிபுணரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருமான அருண் குமார், "தேர்தல் காரணமாகவே எண்ணெய் விலையை உயர்த்த அரசு தயங்கி வந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் விதத்தைப் பார்த்தால், இந்தியாவில் எண்ணெய் விலைகள் எதிர்வரும் நாட்களிலும் மேலும் உயர்வதைத் தவிர்க்க முடியாது" என்கிறார்
கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் பொதுமக்களைச் சென்றடைவதைத் தடுப்பதற்காக, இந்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் கலால் வரியில் பத்து ரூபாய் வரை குறைத்திருந்தது.
"ஒருவேளை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாமல், எண்ணெய் அங்கேயே தேங்கியிருந்தால், இந்தியாவில் வரும் நாட்களிலும் எண்ணெய் விலை உயர்வது நிச்சயம். இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன" என்கிறார் எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா.

பட மூலாதாரம், Imtiyaz Shaikh/Anadolu via Getty Images
அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதியின் வீழ்ச்சி ஆகியவை இந்தியாவின் எண்ணெய் இருப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
"இந்தியாவிடம் வெறும் ஐம்பது நாட்களுக்குத் தேவையான உத்தி எண்ணெய் சேமிப்பு மட்டுமே உள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதே போக்கு நீடித்தால் உத்தி இருப்புகள் குறைவது தொடர்பான அழுத்தம் அதிகரிக்கக்கூடும்" என நரேந்திர தனேஜா கூறுகிறார்.
அதே நேரத்தில், இந்திய அரசு இந்த எரிசக்தி நெருக்கடியை முன்கூட்டியே கணிப்பதில் தவறிவிட்டது என்றும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதம் செய்ததாகவும் பேராசிரியர் அருண் குமார் கருதுகிறார்.
"அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் சுமார் 75 நாட்கள் தாமதம் செய்துவிட்டது என நினைக்கிறேன். எரிசக்தி நெருக்கடியைச் சரியாகக் கணித்து, சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்திருந்தால், அதன் மூலம் நாம் கச்சா எண்ணெயைச் சேமித்திருக்க முடியும். ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெயிலிருந்து நாம் தயாரித்த சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் 35 சதவீதம் வரை ஏற்றுமதி செய்துவிட்டோம். இந்தப் பொருட்கள் நாட்டின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்பட்டிருக்கலாம்" என்று பேராசிரியர் அருண் குமார் தெரிவிக்கிறார்.
கச்சா எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் அச்சப்படுகின்றனர்.
"ஒருவேளை மத்திய கிழக்கு நெருக்கடி மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 150 அமெரிக்க டாலரை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தச் சூழ்நிலை இந்தியாவுக்கு இன்னும் ஆபத்தானதாக மாறக்கூடும்" என்கிறார் நரேந்திர தனேஜா.
இந்தக் கருத்தை ஆமோதிக்கும் பேராசிரியர் அருண் குமார், "ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படும் வரை, எரிசக்தி சந்தையில் நெருக்கடி நீடிக்கவே செய்யும். இது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அது இந்தியப் பொருளாதாரத்தை மந்தநிலைக்குத் தள்ளிவிடக்கூடும்" என்கிறார்.

பட மூலாதாரம், Firdous Nazir/NurPhoto via Getty Images
பொருளாதார அதிர்ச்சி
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாகும். இதன் தாக்கம் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பிலும் எதிரொலிக்கிறது. ஏனெனில் கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் டாலருக்கு எதிராக 83 முதல் 84 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது 96 ரூபாய் என்ற அளவிற்கு சரிந்துள்ளது.
தனது எரிசக்தித் தேவைகளில் 90 சதவீதத்தைப் பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படும் எண்ணெயையே சார்ந்திருக்கும் இந்தியா, தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பெரும்பகுதியை அமெரிக்க டாலரில்தான் வாங்க வேண்டியுள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், இந்தியாவின் எண்ணெய் கொள்முதலுக்கான செலவு தற்போது மேலும் அதிகமாகியுள்ளது.
இது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த நவம்பரில் இந்தியாவிடம் வலுவான அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்த நிலையில், தற்போது அது குறைந்து சுமார் 700 பில்லியன் டாலராக ஆகியுள்ளது.
இந்தத் தொகை பெரிய அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்புதான் என்றாலும், கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு அதிகமாகவே நீடித்தால், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
"சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் தட்டுப்பாடு தோராயமாக சுமார் 15 சதவீதம் என்ற அளவில் நிலவுகிறது. எதிர்வரும் நாட்களில் எண்ணெய், பெட்ரோல், டீசல், எல்பிஜி, சிஎன்ஜி என எரிபொருட்கள் அனைத்தின் விலைகளும் உயர்வது நிச்சயம். இந்தியா அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெயை அமெரிக்க டாலரில் வாங்க வேண்டியிருக்கும், இது அந்நியச் செலாவணி கையிருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்" என்கிறார் நரேந்திர தனேஜா.
கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா "மத்திய கிழக்கு நெருக்கடி நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மேலும் உயரக்கூடும்" என கூறியிருந்தார்.
இருப்பினும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவாக உள்ளது, வங்கி கட்டமைப்பு சீராக உள்ளது மற்றும் நிதி நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு மாபெரும் பின்னடைவாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பேராசிரியர் அருண் குமார் இதனை 'விநியோக அதிர்ச்சி' என்று குறிப்பிடுகிறார்.மேலும் இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பேரடியாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறார்.
இதன் நேரடித் தாக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும், இதனால் பொதுமக்களின், குறிப்பாக பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த பிரிவினரின் குடும்ப பட்ஜெட் முற்றிலும் சீர்குலையும் என்றும் பேராசிரியர் அருண் குமார் கூறுகிறார்.
மேலும், "எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டல் உற்பத்தித் துறை பாதிக்கப்படும் என்று அர்த்தம், ஏனெனில் எரிசக்தி இல்லாமல் எந்த ஒரு உற்பத்தியையும் செய்ய முடியாது. இது ஒரு விநியோக அதிர்ச்சியாகும், இதனால் உற்பத்தி குறைந்து விலைகள் உயரும். இந்த விலை உயர்வின் நேரடித் தாக்கம் சாமானிய மனிதனின் பாக்கெட்டைப் பாதிக்கும்" என்று அருண் குமார் எச்சரிக்கிறார்.
பொருளாதாரக் குறியீடுகளில் காட்டப்படும் பணவீக்கத்தை விட, கள நிலவரப்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு இருக்கும் உண்மையான பணவீக்கம் மிக அதிகம் என்றும், ஏனெனில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவு உயர்ந்துவிட்டன என்றும் பேராசிரியர் குமார் கூறுகிறார்.
வழக்கமாக பத்து ரூபாய்க்குக் கிடைத்துவந்த ஒரு கோப்பைத் தேநீரின் விலை இப்போது சுமார் பதினைந்து ரூபாயாக உயர்ந்துள்ளது, பெருமளவிலான மக்கள் வீட்டுத் தேவைக்கான எரிவாயுவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், ANI
அரசு என்ன சொல்கிறது?
இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்
பொருளாதார ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஒருபுறம் உற்பத்தி தேக்கமடைந்துள்ள நிலையில், மறுபுறம் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, இந்திய அரசும் அதன் அதிகாரிகளும் சமீபத்தில் பல அதிகாரப்பூர்வ கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, கலால் வரியை குறைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, டீசல் ஏற்றுமதிக்கு அரசாங்கம் வரி விதித்து வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அரசு மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
அதே நேரத்தில், பணவீக்க அழுத்தங்களை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அதன் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசாங்கம் இன்னும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்று பேராசிரியர் அருண் குமார் கருதுகிறார்.
"தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய அளவில் ஒருமித்தக் கருத்தை உருவாக்க வேண்டும்" என்கிறார் அவர்
"அன்றாடத் தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், வீண் செலவுகளைத் தவிர்ப்பதும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான விஷயங்கள் சர்வதேச நிலவரங்களைப் பொறுத்தே அமையும்" என நரேந்திர தனேஜா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























