பிரதமர் மோதியை 'பாம்பாட்டி' போல் சித்தரித்த நார்வே பத்திரிகை - என்ன எழுதியுள்ளது?

பட மூலாதாரம், Lise Åserud / NTB / AFP via Getty Images) / Norway OUT
பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடித்து வருகிறது.
முன்னதாக, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் மோதியிடம் கேள்வி எழுப்பியது (அதற்கு பிரதமர் நரேந்திர மோதி பதிலளிக்கவில்லை) குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.
தற்போது நார்வே செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோதி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) பேசுபொருளாக மாறியுள்ளது.
இது விவாதிக்கப்பட்டு வருவதுடன், விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
அந்த நார்வே செய்தித்தாள் 'ஆஃப்டன்போஸ்டன்' ஆகும். இது நார்வேயின் பிரபல நாளிதழ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோதியின் நார்வே பயணத்தின் போது, ஆஃப்டன்போஸ்டன் நாளிதழ் ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருந்தது, அதில் அவர் ஒரு 'பாம்பாட்டியாகவும்' பெட்ரோல் பங்க் குழாய் ஒரு பாம்பாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த கார்ட்டூன் ஒரு கட்டுரையுடன் சேர்ந்து வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு பிரதமர் மோதியை 'ஒரு தந்திரமான மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதர்' என்று விவரித்திருந்தது.
'இனவெறி மிக்க கேலிச்சித்திரம்'

பட மூலாதாரம், Lise Åserud/NTB/AFP via Getty Images
இந்த படம் இணையத்தில், குறிப்பாக இந்தியாவில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது.
பல பயனர்களும் விமர்சகர்களும் இதனை 'இனவெறி' என்று அழைத்ததுடன், இந்தியாவை பின்தங்கிய நாடாக சித்தரிக்க மேற்கத்திய ஊடகங்கள் நீண்ட காலமாக முயன்றுவந்த காலனித்துவ காலத்தை இது நினைவூட்டுவதாகவும் தெரிவித்தனர்.
மூத்த பத்திரிகையாளர் ஆதித்யா ராஜ் கவுல் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிடுகையில், "அதிர்ச்சியளிக்கிறது. இனவெறி. அவதூறு. நார்வேயின் மிகப்பெரிய செய்தித்தாளான 'ஆஃப்டன்போஸ்டன்', இந்தியப் பிரதமரைப் பாம்பாட்டியாகச் சித்தரிக்கும் அதிர்ச்சிகரமான கார்ட்டூனை வெளியிடுகிறது. ஒரு தந்திரமான மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதர் என்று அதற்கு தலைப்பு வைத்துள்ளது. அவர்களால் இந்தியாவின் வளர்ச்சியையும் வெற்றியையும் ஜீரணிக்க முடியவில்லை. பரிதாபம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்ஜாவெட்65 என்ற எக்ஸ் பக்கத்தில், "முற்றிலும் இனவெறித்தனமானது. உலகம் இதற்கு முன்பு இந்தியாவைப் பாம்பாட்டிகளின் தேசமாகப் பார்த்தது என்று பிரதமர் மோதி பலமுறை கூறியுள்ளார். இப்போது, அவர் ஆஸ்லோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், ஒரு முன்னணி ஐரோப்பிய நாளிதழ் அவரை அதே கோணத்தில் சித்தரிக்கிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
தி இந்து பத்திரிகையாளரும், சீன விவகார நிபுணருமான ஆனந்த் கிருஷ்ணன், "ஒரு மலிவான செய்தித்தாளில் இருந்து வந்தது என்று நான் தவறாக நினைத்த இந்த கார்ட்டூன், உண்மையில் நார்வேயின் மிகப்பெரிய நாளிதழும், 'பேப்பர் ஆஃப் ரெக்கார்டு' என்று அழைக்கப்படும் ஆஃப்டன்போஸ்டன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உயர்ந்த பத்திரிகை தரநிலைகள் என்று கூறப்படும் நற்பெயருக்கு இது ஒரு நல்ல உதாரணம் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சஷாங்க் மேட்டோ இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.
"நார்வேயின் மிகப்பெரிய நாளிதழ் பிரதமர் மோதியின் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது, அவர் ஆஸ்லோவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது அவரைப் பாம்பாட்டியாக அது சித்தரித்துள்ளது." என அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.
கார்ல்வீலஸ் என்ற எக்ஸ் பக்கத்திலிருந்து இடப்பட்ட பதிவில், "நார்வேயின் மிகப்பெரிய நாளிதழ் பிரதமர் மோதியின் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு, அவரைப் பாம்பாட்டியாகச் சித்தரித்துள்ளது. இது இதழியல் அல்ல. இது, காலனித்துவ கால இனவெறியை கருத்துரையாக முன்வைப்பது போன்றதாகும். அவர்களால் இந்தியாவின் எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்களின் தாத்தாக்கள் பயன்படுத்திய அதே பழைய, ஒரே மாதிரியான சித்திரங்களை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். உண்மை எப்போதும் வெளிப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
மோதியை பற்றி அந்தக் கட்டுரை என்ன கூறியது?
ஃபிராங்க் ரோஸ்விக் என்பவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
ஆஃப்டன்போஸ்டன் நாளிதழில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை, பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் மற்றும் அவரது வெளியுறவுக் கொள்கை குறித்து விவாதிக்கிறது.
அதில், மோதியின் வெளியுறவுக் கொள்கை மிகவும் நடைமுறைச் சார்ந்தது என்றும், அதாவது அவர் சித்தாந்தத்தை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நாடுகள் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், பல்வேறு நாடுகளுடன் நல்லுறவைப் பேண முற்படும் ஒரு தலைவராக மோதி சித்தரிக்கப்படுகிறார்.
அந்தக் கட்டுரையில், மோதியின் இந்தக் கொள்கை 'ரியல்பாலிடிக்' - அதாவது, அரசியலில் நடைமுறை நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது என்று அழைக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வியூகம் என பல நாடுகளுடன் கூட்டாண்மைகளை அதிகரித்து வரும், வளர்ந்து வரும் உலக வல்லரசாக இந்தியாவை அவர் அந்த கட்டுரையில் விவரித்திருந்தார்.
இதில், நோர்டிக் நாடுகள் (நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற வட ஐரோப்பாவின் குளிர்ந்த வெப்பநிலை கொண்ட நாடுகள்) இந்தியாவுக்கு முக்கியமானவை என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அங்கு பசுமைத் தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பான வாய்ப்புகள் உள்ளன.
மேற்கத்திய நாடுகள் சில சமயங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, குறிப்பாக ரஷ்யாவுடனான அதன் உறவுகளில், முரணானதாகக் கருதலாம் என்றும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த சில விமர்சனங்களும் இதில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக, இந்தக் கட்டுரையின் தொனி முற்றிலும் ஆதரிப்பதாகவோ அல்லது எதிர்ப்பதாகவோ இல்லை. இது மோதியின் வெளியுறவுக் கொள்கையை ஒரு உத்திசார்ந்த மற்றும் நலன் சார்ந்த உலகளாவிய கொள்கையாக சித்தரிக்க முயல்கிறது.

பட மூலாதாரம், @HelleLyngSvends and ANI
தொடர்ந்து விவாதப்பொருளாக மாறியுள்ள மோதியின் நார்வே பயணம்
பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் குறித்து பெரிதும் பேசப்படுகிறது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரைச் சந்தித்த பிறகு மோதி கிளம்பும்போது, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், ஆனால் பிரதமர் பதிலளிக்காமல் முன்னோக்கிச் சென்றுவிட்டார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், பத்திரிகையாளர் ஹெலா லாங், "பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களிடமிருந்து நீங்கள் ஏன் கேள்விகளை எதிர்கொள்வதில்லை?" என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.
பின்னர், இந்தக் காணொளியைப் பகிர்ந்த ஹெலா லாங், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. நான் இதை எதிர்பார்க்கவில்லை. உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலாவது இடத்திலும், இந்தியா 157-வது இடத்திலும் உள்ளது" என்று பதிவிட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரை விமர்சித்ததுடன், அவர் கேள்விகளுக்குப் பயப்படுவதாகக் குற்றம் சாட்டின.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, ஹெலா லாங்கின் கேள்விகள் மற்றும் கூற்றுகள் 'அடிப்படையற்றவை' என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























