விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் இடம் பெறுவதால் தவெகவுக்கு உள்ள சாதக, பாதகங்கள்

பட மூலாதாரம், TNDIPR
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முதல் கட்சியாக காங்கிரஸ் முன்வந்து ஆதரவளித்தது. அதன் பிறகே, இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவை ஆதரிக்க முன்வந்தன. இந்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதன் மூலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற வாக்குறுதியை தவெக நிறைவேற்றியுள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது தவெகவுக்கு அரசியல் ரீதியாக சாதகத்தை ஏற்படுத்தினாலும், ஆட்சியின் செயல்பாட்டைப் பொறுத்தே மக்களின் ஆதரவு கிடைக்குமென்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
தூய ஆட்சி என்கிற பிம்பத்திற்கு பாதிப்பு வரலாம் என்று கருதி அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் தராமல் இருந்தாலும், 6 மாதங்களுக்குப் பின் ஆட்சிக்கு சிக்கல் வருமென்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா.
அதேநேரத்தில், மத்திய அரசின் மறைமுக தாக்குதல்களையும் தவெக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் பத்திரிக்கையாளர் சுகுணா திவாகர்.
விஜய் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் தந்ததால் தவெகவுக்கு உள்ள சாதகங்களும் பாதகங்களும் என்ன?

பட மூலாதாரம், TNDIPR
ஆதரித்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போதே திமுக - காங்கிரஸ் உறவில் ஏற்பட்ட உரசல், தேர்தலில் திமுக பின்னடைவை சந்தித்து தவெக அதிக தொகுதிகளில் வென்றதும் பிளவாக மாறியது. தவெக ஆட்சியமைப்பதற்கு 11 இடங்கள் தேவையென்ற நிலை ஏற்பட்டபோது, காங்கிரஸ் முதல் கட்சியாக திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
காங்கிரஸ் தாமாக முன் வந்து ஆதரவளித்த பின்பு, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை தவெக நாடியது. இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, அந்தக் கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்த நிலையில், அதிமுகவிலிருந்து எஸ்பி வேலுமணி தலைமையில் ஓர் அணி பிரிந்து 25 சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, மே 13-ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு 144 வாக்குகள் கிடைத்தன. அதையடுத்து வாக்கெடுப்பில் ஆதரவளித்த கட்சிகள் அனைத்துக்கும் அமைச்சரவையில் இடம் தரப்படுமென்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுபற்றிய விவாதங்கள் சூடுபிடித்து வந்த நிலையில், நேற்று (மே 21) அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் தரப்பட்டுள்ளன. அடுத்தபடியாக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் அமைச்சரவையில் இடம் பெற முன்வந்துள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
"தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவெடுத்துள்ளோம். எம்.எல்.ஏ வன்னியரசு பெயரை பரிந்துரை செய்ய உள்ளோம்," என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மை இல்லாததால்தான் அமைச்சரவையில் இடம் தரப்பட்டதா?

பட மூலாதாரம், @CMOTamilnadu
அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால்தான் தவெக இதைச் செய்துள்ளதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
தேர்தலில் தனிப் பெரும்பான்மை வந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்போம் என்று தவெக வாக்குறுதி அளித்திருந்தாலும், தனிப் பெரும்பான்மை கிடைத்திருந்தால் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார் அவர்.
பிபிசியிடம் பேசிய ப்ரியன், "இதைச் செய்ததன் மூலமாக தமிழகத்தில் மதச் சார்பற்ற அணிக்கு நான் தான் தலைமை என்பதை காண்பிக்க விஜய் முயன்றுள்ளார். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை இழுத்து, அமைச்சரவையில் இடமளித்திருப்பதன் நோக்கம் இதுதான். ஏற்கெனவே இந்தத் தேர்தலில் விஜய்க்கு சிறுபான்மையினர் வாக்குகள் ஓரளவு கிடைத்துள்ளன. இப்போது அவர் இந்த விஷயத்தை செய்யும் போது, திமுகவுக்கு வாக்களித்த சிறுபான்மையினரும் எதிர்காலத்தில் தவெகவுக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு அமைச்சரவையில் இடமளிப்பது, இஸ்லாமியர்களிடம் அதிக வரவேற்பைப் பெறலாம். அதனால் பலவிதங்களில் தவெகவுக்கு இது சாதகம்தான்.'' என்றார்.
தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பிரகடனப்படுத்தியும், அவரை நம்பி எந்தக் கட்சியும் செல்லத் தயாராக இல்லாத நிலை இருந்ததாகச் சொல்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா. அதனால்தான் இப்போது ஆட்சிக்கு வந்தபின்பு அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரவையில் ஆதரவளித்த கட்சிகளுக்கு இடமளித்துள்ளதாகச் சொல்கிறார் அவர்.

பட மூலாதாரம், @CMOTamilnadu
பிபிசியிடம் பேசிய துரை கருணா, ''தேர்தலுக்கு முன்பு, கடைசியாக அதிமுக உரிமை மீட்புக்குழுவை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வமாவது கூட்டணிக்கு வருவார் என்று விஜய் எதிர்பார்த்தார். அவரும் கூட வரவில்லை. தேர்தல் முடிவுக்குப் பின், விஜயின் இலக்கு திமுக கூட்டணிக் கட்சிகளாகவே இருந்தது.'' என்றார்.
''திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என்ற மனநிலையுடன்தான் அவர் ஆதரவு கோரினார். ஒரு கட்டத்தில், அவர்களின் ஆதரவு மட்டும் போதாது என்று நினைத்த விஜய், அதிமுகவின் ஒரு பிரிவையும் பார்த்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 என்ற பெரிய எண்ணைக் காண்பித்து வெற்றியும் பெற்றுவிட்டார்.'' என்றார் துரை கருணா.
இந்த கருத்துகளிலிருந்து மாறுபடும் பத்திரிக்கையாளர் சுகுணா திவாகர், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல வெளியிலிருந்து ஆதரவு என்பது எப்போது வேண்டுமானாலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும், தனிப் பெரும்பான்மை இல்லாததாலும்தான் அமைச்சரவையில் மற்ற கட்சிகளை தவெக சேர்த்துள்ளது என்கிறார்.
பிபிசியிடம் பேசிய சுகுணா திவாகர், ''அமைச்சரவையில் பங்கு கொடுத்துவிட்டால், ஆட்சிக்கான ஆதரவு உறுதியாயிருக்கும். அது ஆட்சியைப் பாதுகாக்கும் என்பதுடன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்த பெயரும் தவெகவுக்குக் கிடைத்துவிடும். இதன் மூலமாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற திட்டத்தை தவெக முன்மொழிந்துவிட்டது. இனி எதிர்வரும் தேர்தல்களிலும் மும்முனைப் போட்டி நிலவும்பட்சத்தில், கூட்டணி ஆட்சி என்ற உறுதியை திராவிடக்கட்சிகளும் தரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.'' என்றார்.
''அதேநேரத்தில் இந்த நடவடிக்கை, தவெகவுக்கு வளர்ச்சியாகவும், அதிமுகவுக்கு வீழ்ச்சியாகவும் அமைந்தால் திமுக–தவெக என்ற புதிய துருவ அரசியல் துவங்கும். அதிலொரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது கைவிடப்படலாம். ஐந்தாண்டுகளுக்குள் இந்த ஆட்சி கவிழும் நிலை வரும் பட்சத்தில், நிலையான ஆட்சி என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அது கைவிடப்படவும் வாய்ப்புள்ளது.'' என்றார் சுகுணா திவாகர்.
பாஜக வெறுப்பை சம்பாதிக்கிறதா தவெக?
கூட்டணி அமைச்சரவையில் ஏற்படும் சில நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார் பத்திரிக்கையாளர் ப்ரியன். தவெக அமைச்சர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் அவர் மீது விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் கூட்டணிக் கட்சியின் அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் கூட்டணிக் கட்சித் தலைமையிடம் கூறியே நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்கிறார். அதையும் அந்தக் கட்சித் தலைமை ஏற்குமா, முரண்களைத் தாண்டி ஆதரவைத் தொடருமா என்பதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்கிறார் அவர்.
அதிமுகவின் ஒரு பிரிவினரை அமைச்சரவையில் சேர்க்காததால், அடுத்த 6 மாதங்களுக்கு ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாவிட்டாலும், அதற்குப் பின்பு ஆட்சியைத் தொடர்வதில் சிக்கல்கள் எழலாம் என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா. அதற்குள் வேறு விதமான மாற்று ஏற்பாடுகளைச் செய்து, ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம், தவெகவுக்கு இருக்கிறது என்கிறார் அவர்.
அதுபற்றி விளக்கிய துரை கருணா, ''லஞ்ச, ஊழலற்ற தூய ஆட்சியைக் கொடுப்பதாகக் கூறிவிட்டு, பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள வேலுமணியையும், கே.சி.வீரமணியையும், 2 விஜயபாஸ்கர்களையும் அமைச்சரவையில் சேர்த்தால் என்னவாகும் என்று நினைத்து அதை விஜய் தவிர்த்திருக்கலாம். அது சரிதான் என்றாலும் 6 மாதங்களுக்குள், ஆட்சியைத் தக்க வைக்க சில வியூகங்களை அவர் வகுக்கவேண்டும்.'' என்றார்.
திமுக கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருப்பதிலும், அமைச்சரவையில் அந்தக் கட்சிகளைச் சேர்த்திருப்பதிலும் சில நடைமுறைச் சிக்கல்களை தவெக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறும் துரை கருணா, துாய்மையான ஆட்சியைத் தரவிரும்பும் விஜய், தங்கள் கட்சியின் அமைச்சர்கள், பிற கட்சியினர் மூலமாக ஊழல்வாதிகளின் வலைக்குள் சிக்காமல் பாதுகாக்க போராட வேண்டியிருக்கும் என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளித்திருப்பதன் மூலமாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவை விஜய் பெற்றாலும், அதை மட்டுமே வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல்களில் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்கிறார் பத்திரிக்கையாளர் ப்ரியன். முதல் முறையாக அவருக்கு வாய்ப்பளித்துள்ள மக்கள், இந்த அரசின் செயல்பாட்டை வைத்தே அடுத்த தேர்தலில் தீர்ப்பளிப்பார்கள் என்கிறார் அவர்.
''தான் தந்துள்ள பெரியபெரிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருக்கிறது. விஜய் அண்ணா, விஜய் மாமா, என்றெல்லாம் கூறி இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்ததுபோல எதிர்காலத்திலும் வாக்குக் கிடைக்குமென்று சொல்ல முடியாது. இதெல்லாம் ஒரு தேர்தலில் மட்டுமே ஒர்க் அவுட் ஆகும். வாக்குறுதிகளிலிருந்து அவரால் தப்ப முடியாது.'' என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
தவெக முன்னுள்ள மிகப்பெரிய சவால்

பட மூலாதாரம், TNDIPR
காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிப்பதன் காரணமாக, பாஜகவின் வெறுப்பையும், மறைமுக தாக்குதல்களையும் தவெக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் பத்திரிகையாளர் சுகுணா திவாகர். தவெகவை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய அனைத்துக் கட்சிகளும் பாஜகவை தீவிரமாக எதிர்ப்பவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி, அதனை பாஜக தலைமை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்கிறார்.
இதுபற்றி விளக்கிய சுகுணா திவாகர், ''தென் மாநிலங்களில் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. தமிழகத்திலும் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது என்பதை பாஜக நிச்சயம் விரும்பாது. திமுக மீது பாஜகவுக்கு கொள்கை ரீதியான வெறுப்பை விட காங்கிரஸ் கட்சியைத் தாங்கிப் பிடித்ததுதான் கூடுதல் வெறுப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் மத்திய அரசின் ஆதரவையும், நிதியையும் திமுக அரசால் பெற முடியாததுடன் பலவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.'' என்றார்.
அமைச்சரவையில் 2 பிராமணர்களுக்கு வாய்ப்பளித்தது, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அறநிலையத் துறையை ஒதுக்கியது என பாஜகவை திருப்திப்படுத்தும் பலவித நடவடிக்கைகளையும் தவெக செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் சுகுணா திவாகர், இவையெல்லாவற்றையும் விட, பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவில் தவெக இருப்பதுதான் அதற்கு உறுத்தலாக இருக்கும் என்கிறார்.
''பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என 2 துறைகளும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதனிடம் உயர்கல்வித்துறை தரப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் சில நிலைப்பாடுகளை அவர் எதிர்ப்பாரா என்பது சந்தேகமே. ஏனெனில் இந்தித் திணிப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளின் நிலைப்பாடும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில மாதங்கள் சென்றால்தான் எல்லாம் தெளிவாகும்.'' என்றார் சுகுணா திவாகர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.




























