வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏன் கோவாவைத் தவிர்க்கின்றனர்?

Tourist, Goa, Nickola, alisan, duwain

பட மூலாதாரம், Nikhil Inamdar

படக்குறிப்பு, கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் கோவாவிற்கு வந்து செல்லும் நிகோலா, அலிசன் மற்றும் டுவைன்
    • எழுதியவர், நிகில் இனாம்தார்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கோவாவின் பலோலெம் கடற்கரையில் நண்பகல் நேரம் கடந்திருக்கிறது. சூரியன் சுட்டெரித்தாலும், அது சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கடலில் இறங்கி விளையாடுவதைத் தடுக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது இங்கு என்ன மாற்றம் என்றால், ஒரு காலத்தில் பலோலெம் மற்றும் கோவாவின் பிற கடற்கரைக் கிராமங்களில் குவிந்திருந்த ஐரோப்பியர்களும் ரஷ்யர்களும் இப்போது இங்கு காணப்படவில்லை.

இங்குள்ள கூட்டம் முழுவதும் உள்ளூர் மக்களாகவே உள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கோவா மீதான ஈர்ப்பு குறைந்து வருவதையே இது பிரதிபலிக்கிறது.

மற்றொருபுறம், நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வரும் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பது, இந்திய மக்களிடையே இதன் மீதான ஈர்ப்பு வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

கோவா சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்த போக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 2017-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 9 லட்சம் வெளிநாட்டினர் கோவாவுக்கு வருகை தந்தனர். 2025-ஆம் ஆண்டிற்குள், இந்த எண்ணிக்கை சுமார் 5 லட்சம் ஆகக் குறைந்தது. மறுபுறம், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2016 இல் 68 லட்சமாக இருந்தது, கடந்த ஆண்டு 1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது.

உலகளாவிய புவிசார் அரசியல் சூழல் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையைப் பாதித்துள்ளதாக மாநில சுற்றுலாத் துறை சமீபத்தில் தெரிவித்துள்ளது.

"எதிர்காலத்தைத் திட்டமிடும்போது நாம் அவநம்பிக்கையுடனும் அதே நேரத்தில் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்," என்று கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் காவுண்டே உள்ளூர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

ஆனால், பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது சமீபத்திய புவிசார் அரசியல் மோதல்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1960 மற்றும் 1970-களின் ஹிப்பி கலாசாரத்தின் உச்சகட்ட காலத்திலிருந்து, பட்ஜெட்டுக்கு ஏற்ற நிம்மதியான சுற்றுலாத் தலமாக கோவாவை விரும்பி வந்த வெளிநாட்டுப் பயணிகள், இப்போது ஏன் அதைத் தவிர்க்கிறார்கள்?

Tourism, Goa, Srilanka

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோவாவின் சுற்றுலாப் பொருளாதாரத்திற்கு சவாலாகும் இலங்கை போன்ற மலிவான மாற்று நாடுகள்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"மக்களிடம் போதிய பணம் இல்லை. முதலில் கோவிட் பெருந்தொற்று, அதைத் தொடர்ந்து யுக்ரேன் போர், இப்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் விமானக் கட்டணங்கள் மிகவும் உயர்ந்துவிட்டன. எனவே, பணம் நிச்சயமாக ஒரு முக்கிய காரணியாக உள்ளது," என்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் சோஃபி. அவர் கோவாவிற்கு வருவது இது ஐந்தாவது முறையாகும்.

"என்னுடைய நண்பர்களில் சிலர் இந்த ஆண்டு கோவாவிற்குப் பதிலாக துருக்கி அல்லது எகிப்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் அவை தங்களது சொந்த நாட்டிற்கு அருகிலும், செலவு குறைவாகவும் இருக்கின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

நியூகேசிலில் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வந்து செல்லும் ரிகோ என்பவரும், ஐரோப்பியப் பயணிகள் குறித்து இதே கருத்தையே கொண்டுள்ளார்.

"நிச்சயமாக, எனது நாட்டில் உள்ள மக்களிடம் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் போதிய பணம் இல்லை. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அவர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே விடுமுறையைக் கழிக்க விரும்புகிறார்கள்," என்கிறார் அவர்.

பிபிசி பேசிய அரை டஜனுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு நீண்ட மற்றும் சிக்கலான விசா நடைமுறைகளும், விசா கட்டண உயர்வும்தான் காரணம் என்று குற்றம் சாட்டினர்.

கோவா சுற்றுலாத் துறையின் கமிட்டி உறுப்பினரும், ஒரு சார்ட்டர் விமான நிறுவனத்தை நடத்தி வருபவருமான எர்னஸ்ட் டயஸ், மலிவான ஹோட்டல்களும், எளிதான 'ஆன்-அரைவல் விசா' நடைமுறைகளும் ஐரோப்பிய மற்றும் ரஷ்யப் பயணிகளை ஆசியாவின் பிற பகுதிகளை, குறிப்பாக வியட்நாம் மற்றும் இலங்கையை நோக்கித் திரும்பத் தூண்டியுள்ளன என்றார்.

"இன்றைய பயணிகள் விரைவான முடிவுகளை எடுக்கவும், கடைசி நேரத்தில் பயணங்களைத் திட்டமிடவும் விரும்புகிறார்கள். எனவே இந்த விசா தாமதம் நிச்சயமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு ஒரு முக்கிய காரணியாகும்," என்று டயஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெரிய குழுவினர் சமீபத்தில் தங்களது திட்டமிடப்பட்ட கோவா பயணத்தை ரத்து செய்துவிட்டு, வியட்நாமிற்குச் சென்றதாக அவர் கூறினார், அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

'ஆன்-அரைவல் விசா' வசதி மட்டுமின்றி, கோவாவை விட இந்த நாடுகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு மலிவான செலவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

டயஸின் கூற்றுப்படி, உள்நாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் கூட்டங்கள், ஊக்கத்தொகை பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சார்ந்த பயணிகளின் வருகையால் நல்ல நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்களின் கட்டணங்கள் கோவாவில் கணிசமாக உயர்ந்துவிட்டன. இதனால் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் அந்த கட்டணங்களைச் செலுத்த முடிவதில்லை.

வியட்நாம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கோவாவில் மலிவான விலையில் கடற்கரை ஒட்டிய ரிசார்ட்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஆனால் அந்த நாடுகளில் பாதியளவு அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே ஒட்டுமொத்த டூர் பேக்கேஜ்களையும் பெற முடிகிறது.

இதுதவிர, லண்டன் கேட்விக் மற்றும் கோவா இடையேயான ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை ரத்து செய்யப்பட்டதும் இதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tourism, Goa

பட மூலாதாரம், Getty Images

வித்தியாசம் என்ன?

பலோலெம் கடற்கரைக்கு வடக்கே உள்ள பெனாலிம் கடற்கரையின் ஓரத்தில் உள்ள ஒரு குடிலில் வைத்து, பிபிசியிடம் பேசிய நிகோலா, ரத்து செய்யப்பட்ட விமான சேவை காரணமாகத் தான் மும்பையில் திட்டமிடாத ஒரு தங்குதலை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும், அது தனக்கு வசதியாக இருக்கவில்லை என்றும் கூறினார்.

அவர் தனது நண்பர்களான அலிசன் மற்றும் டுவைனுடன் மூன்று வாரப் பயணமாக இங்கு வந்துள்ளார்.

தனது சகோதரர் இந்த ஆண்டு கோவாவிற்குப் பதிலாக இலங்கையைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றுள்ளதாக அவர் கூறினார்.

"இலங்கை நிச்சயமாக தற்போது வளர்ந்து வரும் ஒரு சுற்றுலாத் தலமாக உள்ளது. அது கோவாவை விட மலிவானது என்றும், மிகவும் தூய்மையானது என்றும் அவர் கருதினார்," என்று நிகோலா கூறினார்.

கடற்கரைகளை குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க அரசாங்கம் தனது முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று எர்னஸ்ட் டயஸ் கூறுகிறார். ஆனால், கடற்கரைகளுக்குச் செல்லும் பல சாலைகள் குப்பைகளால் சீரழிந்துள்ளது என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார்.

"இது ஒரு நல்ல காட்சி அல்ல, குறிப்பாக தூய்மையில் மிகுந்த கவனம் செலுத்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இது நல்ல எண்ணத்தை ஏற்படுத்தாது," என்று அவர் தெரிவித்தார்.

ஆப்-அடிப்படையிலான டாக்ஸி சேவைகளுக்கு உள்ளூர் தொழிற்சங்கங்கள் காட்டும் தீவிர எதிர்ப்பின் காரணமாக, டாக்ஸி கட்டணங்கள் கட்டுப்படியாகாத அளவுக்கு மிக அதிகமாக இருப்பதும் மற்றொரு "பெரிய பிரச்னை" என்று அவர் கூறுகிறார்.

"இது கற்காலத்தில் வாழ்வது போன்றது, கோவாவில் உங்களால் ஆப் மூலம் ஒரு டாக்ஸியைப் பெற முடியாது. ஏனெனில் உள்ளூர் தொழிற்சங்கங்கள் அதனை எதிர்க்கும்," என்கிறார் டயஸ்.

இவை எதுவுமே, சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் இந்த உள்ளூர் பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறியாக இல்லை.

கோவாவின் பிரபலமான பாகா கடற்கரைப் பகுதியில் 100 அறைகள் கொண்ட ஹோட்டலை நடத்தி வரும் ஷெர்வின் லோபோ என்பவரின் கூற்றுப்படி, அவரது ஹோட்டலுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது 10% சரிந்துள்ளது. உள்ளூர் பயணிகளின் அதிகப்படியான புக்கிங் மூலம் இந்த பாதிப்பை அவரால் ஈடுகட்ட முடிந்தாலும், வெளிநாட்டினரே இவரைப் போன்ற ஹோட்டல் உரிமையாளர்களின் விருப்பமான விருந்தினர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நீண்ட நாட்கள் தங்கி அறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மேலும், இந்தியப் பயணிகள் பெரும்பாலும் முழு வசதிகள் அடங்கிய 'ஃபுல்-போர்டு' விடுமுறை திட்டங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று டயஸ் கூறுகிறார்.

ஆனால், அவர்களுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுப் பயணிகள் உள்ளூர் இடங்களைச் சுற்றிப் பார்க்க விரும்புவதோடு, மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது மற்றும் உள்ளூர் கடற்கரைக் குடில்கள், உணவகங்களில் சாப்பிடுவது போன்றவற்றுக்கே அதிக வாய்ப்புள்ளது என்று டயஸ் கூறுகிறார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தது, ஒட்டுமொத்த சுற்றுலாத் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

Tourism, Goa, Culture

பட மூலாதாரம், Getty Images

ஆனால், உள்ளூர் அரசாங்கம் தற்போது இந்தப் பிரச்னையை உணர்ந்து விழித்துக் கொண்டுள்ளதாக எர்னஸ்ட் டயஸ் கூறுகிறார். அதே வேளையில், கோவா மிக நீண்ட காலமாக இதில் தன் எச்சரிக்கை உணர்வை இழந்து அலட்சியமாக இருந்துவிட்டது என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

"நாங்கள் இப்போது 'ரோடு ஷோக்கள்' மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஈர்க்க எங்களால் இயன்றவரை முயற்சித்து வருகிறோம். சமீபத்தில் நாங்கள் போலந்து நாட்டிற்குச் சென்றோம், அடுத்ததாக ஸ்காண்டிநேவியா நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

மேலும், வரும் ஆண்டுகளில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பியர் அல்லாத பிற பயணிகளை அதிக அளவில் ஈர்க்க அரசு ஆர்வமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த ஆசியக் கண்டம் முழுவதும் மிகவும் மலிவான, தூய்மையான மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் தீவிரமாகச் செயல்படும் மாற்று நாடுகள் பல உருவாகி வருகின்றன.

இத்தகைய சூழலில், அந்த வெளிநாட்டுப் பயணிகளை மீண்டும் தன்வசப்படுத்த கோவா இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு