விஜய் அமைச்சரவையில் சேரும் விசிக, முஸ்லிம் லீக் - தவெகவின் முதல் நோக்கம் நிறைவேறிவிட்டதா?

விஜய் அமைச்சரவையில் விசிக சேருமா?

பட மூலாதாரம், @CMOTamilnadu

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

'கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்'- சட்டப்பேரவை தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கூறிய வார்த்தைகள் அப்போது பேசுபொருளாக மாறின.

இன்று (மே 21) தமிழக வெற்றி கழகத்தின் தலைமையிலான அரசில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் இன்று தெரிவித்துள்ளார்.

"தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது என முடிவெடுத்துள்ளோம். எம்.எல்.ஏ வன்னியரசு பெயரை பரிந்துரை செய்ய உள்ளோம்," என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் விஜயை சந்தித்தனர்

பட மூலாதாரம், @CMOTamilnadu

படக்குறிப்பு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் விஜயை சந்தித்தனர்

'அமைச்சரவையில் பங்கு பெறாமல், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டில் தான் தாங்கள் இருப்பதாக' இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள்- இவை மூன்றுமே திமுகவின் கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்த கட்சிகள்.

2024ஆம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தபோது, "2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்," என்று அதன் தலைவர் விஜய் கூறியிருந்தார்.

இன்று 'கூட்டணி ஆட்சியை' தமிழ்நாட்டில் அமைத்திருக்கிறது தவெக.

தவெக, விடுதலைச் சிறுத்தைகள், அரசியல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம், @Aathimozhi_VCK

'ஆட்சியில் பங்கு'- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து கூட்டணி ஆட்சிக்கு ஆதரவான குரல்கள் கடந்த காலங்களில் எப்போதுமே ஒலித்துள்ளன.

'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற முழக்கத்தை சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எழுப்பி வந்தது, அப்போது அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஆதரவுக் குரல் கொடுத்திருந்தார்.

"காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்கிற உரிமையில்தான் அவர்கள் கேட்கிறார்கள்" என திருமாவளவன் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, "2016 தேர்தலின்போது (மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த) விசிக 'கூட்டணி ஆட்சி' தொடர்பான வாக்குறுதியை அளித்திருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2026-இல் மக்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். விசிக இத்தகைய சூழ்நிலையை முன்னரே கணித்திருந்தது" என்று திருமாவளவன் கூறினார்.

அதேபோல, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, "ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதை விடுதலை சிறுத்தைகள் தேர்தலுக்காக மட்டுமே கேட்பதில்லை. அது எங்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல, அது எல்லோருக்குமான முழக்கம்" என்று கடந்த பிப்ரவரி மாதம் பேசியிருந்தார்.

இந்நிலையில், தவெக-வின் அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது என்று அக்கட்சியின் மாநில கொள்கைப்பரப்பு துணைசெயலாளர் ஆதிமொழி பிபிசி தமிழிடம் முன்னதாக கூறினார்.

திமுக கூட்டணியில் இருந்து தவெக அமைச்சரவையில் இடம்பெற விடுதலை சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது ஏன் என ஆதிமொழியிடம் கேட்டபோது, "ஆட்சியமைக்க தவெக-வுக்கு பெரும்பான்மைக்கு சில இடங்கள் தேவை எனும் சூழல் எழுந்தபோது, அவர்கள் பாமக அல்லது பாஜக பக்கம் செல்லாமல், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டுமென விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல், ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டார்கள். இப்போதும் கூட அதிமுக-வின் ஒரு தரப்பு எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் அவர்களது அமைச்சரவையில் இடம்பெறுவதில்லை என்ன தவறு?" என்கிறார் அவர்.

"தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதால் மட்டுமே அவர்களுக்கு எதிராக விமர்சனங்களை நாங்கள் வைக்க மாட்டோம் எனக் கூற முடியாது. திமுக கூட்டணியில் இருந்தபோது கூட அவர்களது அரசுக்கு எதிரான போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்துள்ளோம்" என்றும் ஆதிமொழி குறிப்பிடுகிறார்.

தவெக, விடுதலைச் சிறுத்தைகள், அரசியல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம், @Aathimozhi_VCK

படக்குறிப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனோடு அக்கட்சியின் மாநில கொள்கைப்பரப்பு துணைசெயலாளர் ஆதிமொழி.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்துள்ள முடிவு பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத அக்கட்சி நிர்வாகி ஒருவர் பேசுகையில், "திமுக கூட்டணியில், அக்கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றுவிட்டு தவெக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தாவி விட்டது என்றோ அல்லது சந்தர்ப்பவாத அரசியல் என்றோ விமர்சனங்கள் எழும் என்ற கவலையில் தான் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து முடிவெடுப்பதில் கட்சிக்கு ஒரு தயக்கம் இருந்தது" என்று கூறினார்.

ஆனால், கட்சியின் நிர்வாகிகள் பலரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தபோது அதை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார் என்கிறார் அவர்.

தவெக, விடுதலைச் சிறுத்தைகள், அரசியல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம், Sivapriyan/Linkedin

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்

சந்தர்ப்பவாத அரசியலா?

"கூட்டணி ஆட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை. எனவே விசிக அமைச்சரவையில் இடம்பெறும் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன்.

"அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த வாய்ப்பு இது. இதை விடுதலை சிறுத்தைகள் பயன்படுத்திக்கொள்வது மிகச்சரியான முடிவு" என்கிறார் அவர்.

"தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, 'ஆட்சியில் பங்கு' என்ற முழக்கத்தை முன்வைத்தது. அதில் இப்போது வெற்றியும் பெற்றுள்ளது." என்று சிவப்பிரியன் குறிப்பிடுகிறார்.

விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன், ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்கள்.

"பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பதைத் தாண்டி, தலித் மக்களுக்கான ஒரு இயக்கம் ஆட்சியில் பங்கு பெறுவது முக்கியமானது. அவர்களால் தவெக ஆட்சியை விமர்சிக்க முடியாது தான், ஆனால் அமைச்சரவையில் பங்கு பெறுவதனால் அதிகாரம் அவர்களது கையிலும் இருக்கும். அடுத்த வரக்கூடிய உள்ளாட்சி தேர்தல்களில் அக்கட்சிக்கு இது உதவும். தலித் மக்களுக்கான பல திட்டங்களை அவர்களால் முன்னெடுக்க முடியும்" என்கிறார் சிவப்பிரியன்.

''மதச்சார்பற்ற அரசியல் தொடங்கி, இருமொழிக் கொள்கை, மாநில அரசின் உரிமைகள் என பலவற்றிலும் திமுகவின் கொள்கைகளையே தவெக-வும் எதிரொலிக்கிறது. எனவே கொள்கைக்கு மாறாக திமுக-விடமிருந்து விடுதலைச் சிறுத்தைகள் பிரிந்து சென்றுவிட்டார்கள் என்றும் கூற முடியாது'' எனக் குறிப்பிடுகிறார் சிவப்பிரியன்.

"எனவே இதைச் சந்தர்ப்பவாத அரசியல் என்றோ, திமுக இதில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றோ கூறிவிட முடியாது. அரசியலில் இதுபோன்ற நகர்வுகள் இதற்கு முன்னும் நிகழ்ந்துள்ளன. பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விட்டு தானே திமுக பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. எனவே திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் துரோகம் செய்துவிட்டார்கள் என கூற முடியாது" என்றும் அவர் கூறுகிறார்.

தவெக, விடுதலைச் சிறுத்தைகள், அரசியல், கூட்டணி ஆட்சி

பட மூலாதாரம், TNDIPR

'தவெக-வின் முதல் நோக்கம் நிறைவேறிவிட்டது'

"மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமை என்பது திமுகவின் முக்கிய அடையாளமாக இருந்தது. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை தன் பக்கம் இழுத்ததன் மூலம் அதைத் தகர்த்துள்ளது தவெக" என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.

"இதனால் திமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும், மதச்சார்பற்ற அரசியலின் முகமாக இருக்க வேண்டும் என்ற தவெக-வின் முதல் நோக்கம் நிறைவேறிவிட்டது." என்கிறார் அவர்.

"அதிமுக எம்எல்ஏ-க்களை சேர்க்கமாட்டோம் என தவெக கூறியதாக திருமாவளவன் தான் கூறுகிறார். விஜய் அல்லது தவெக தலைவர்கள் அதை நேரடியாக கூறவில்லை" என்றும் பிரியன் குறிப்பிடுகிறார்.

"பட்டியல் பிரிவைச் சேர்ந்த 7 பேரை அமைச்சர்களாக ஆக்கியதும் மிகவும் பாராட்டத்தக்கது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் விடுதலைச் சிறுத்தைகள் தவெக-வுக்கு ஆதரவு கொடுக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற அரசியலின் முகம் என்ற அடையாளத்தை விஜய் தக்கவைத்துக் கொள்வாரா என்பதையும், விடுதலைச் சிறுத்தைகளின் முடிவு சரிதானா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்" என்கிறார் பிரியன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.