சௌதியில் மரண தண்டனை ரத்தான சிவராசா அனோஜனுக்கு அடுத்தது என்ன? இலங்கை அரசு தரப்பு புதிய தகவல்

பட மூலாதாரம், FB/Sivarasa Anojan
நபிகள் நாயகம் குறித்த சமூக வலைத்தள பதிவு எதிரொலியாக சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள போதிலும், அவர் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை.
சிவராசா அனோஜன் ஏன் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பலராலும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றது.
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அவருக்கான மரண தண்டனை மாத்திரமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மரண தண்டனையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் இலங்கையிலிருந்து சௌதி அரேபியா நோக்கி பயணித்த சட்ட வல்லுநர்கள் குழுவில் இடம்பிடித்த ஜனாதிபதி வழக்கறிஞர் உபுல் குமரப்பெரும, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அனோஜன் மீதான வழக்கு விசாரணைகள் மீண்டும் முதல் நீதிமன்றத்தில் இடம்பெறும் என அவர் கூறுகின்றார். அதாவது, அனோஜன் கைது செய்யப்பட்டு, முதலில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதத்தையும் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தில் அவர் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் இன்னும் இரு வாரங்களுக்குள் நடைபெறும் என இலங்கை ஜனாதிபதியின் வழக்கறிஞர் உபுல் குமரப்பெரும தெரிவிக்கின்றார்.
முதல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது குறைக்கப்பட்டு, அவர் நாடு கடத்தப்படுவாரா என்பது அந்த நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
சிவராசா அனோஜனின் விவகாரத்தில் முதல் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பின் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
குடும்பத்தினர் என்ன சொல்கின்றார்கள்?
மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட போதிலும், இன்று வரை அனோஜன் தனது குடும்பத்தாருடன் தொலைபேசியூடாக கதைக்கவில்லை என அவரது சகோதரன் சிவராசா ஹம்சிதன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
தனது சகோதரனுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது தொடர்பில் தமக்கு இதுவரை சரியான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
எனினும், தனது சகோதரன் விரைவில் விடுதலையாகி, நாடு திரும்ப வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சிவராசா அனோஜனின் மரண தண்டனை குறைப்பு

பட மூலாதாரம், FB/Sivarasa Anojan
நபிகள் நாயகத்தை பேஸ்புக் பதிவின் ஊடாக அவதூறு செய்ததாக சிவராசா அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் சௌதி அரேபிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 3 மில்லியன் ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, சௌதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அதேநேரம், சௌதி அரச தரப்பு சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டு, ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.
முதல் நீதிமன்றம் இந்த குற்றத்தை சைபர் குற்றம் என அடையாளப்படுத்தி தண்டனை வழங்கியிருந்த நிலையில், இரண்டாவது நீதிமன்றம் ஷரியா சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதையடுத்து, சிவராசா அனோஜன் தமாம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்த சிறைச்சாலையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் காரணமாக, சிவராசா அனோஜன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில், சிவராசா அனோஜனின் மரண தண்டனையை ரத்துசெய்யும் நோக்கில் இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்று சௌதி அரேபியா நோக்கி பயணித்திருந்தது.
இந்த குழுவினர் சௌதி சட்ட வல்லுநர்களுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையிலேயே, அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































