நீங்கள் பேசுவதை உங்கள் செல்போன் ஒட்டுக் கேட்கிறதா? விளம்பரம் வருவது பற்றிய ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Images
கைப்பேசி இல்லாமல் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பது அவ்வளவு எளிதல்ல. இளைஞர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 4 மணி நேரம் 37 நிமிடங்களை கைப்பேசியைப் பயன்படுத்துவதில் செலவிடுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
கைப்பேசியைக் கையில் பிடித்துக்கொண்டோ, பாக்கெட்டில் வைத்துக்கொண்டோ அல்லது அருகில் வைத்துக்கொண்டோ இருக்கும்போது, அது நம்மைக் கண்காணிக்கிறதா? நமது பேச்சைக் கேட்கிறதா? இதுகுறித்து பிபிசி விரிவாக ஆராய்கிறது.
நமது பேச்சைக் கைப்பேசியால் ஒட்டுக்கேட்க முடியும் என்றும், நமது எண்ணங்களைக்கூட அதனால் அறிந்துகொள்ள முடியும் என்றும் கூறும் பதிவுகள் சமூக ஊடகங்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒருவருடன் நேரில் ஒரு பொருளைப் பற்றிப் பேசினால், அதன்பின் அதுதொடர்பான விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் தோன்றுவதைப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருக்கிறதா?
செயலிகள் மூலம் நிறுவனங்கள் தங்களைக் கண்காணிப்பதாகப் பல சமூக ஊடகப் பயனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சிலர், கைப்பேசிகள் தங்களது உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாகவும் நம்புகின்றனர்.
ஆனால், நண்பர்களுடன் நேரில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிய பிறகு, அதுதொடர்பான விளம்பரம் சமூக ஊடகங்களில் தோன்றுவது தற்செயலான நிகழ்வாகவும் இருக்கலாம். இருந்தாலும், "நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் தொடர்பான விளம்பரங்கள் வருவது எப்படி?" என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது; இந்தக் கேள்வி சிந்திக்க வைக்கிறது.
செல்போன் ஒட்டுக்கேட்கிறதா?
ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளுடன் நீங்கள் எவ்வாறு ஈடுபாடு காட்டுகிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதேபோன்ற மேலும் பல பதிவுகள் உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் எந்தப் பதிவுகளைப் பார்க்கிறீர்கள், பகிர்கிறீர்கள், விரும்புகிறீர்கள் என்பதைக் கண்காணிக்கும் சமூக ஊடக அல்காரிதம்கள், உங்கள் இணையப் பயன்பாட்டு முறைகளைப் பகுப்பாய்வு செய்கின்றன. அதன் அடிப்படையில், உங்களுக்கு எந்த வகையான உள்ளடக்கங்களைக் காட்ட வேண்டும் என்பதை அவை தீர்மானிக்கின்றன.
சில ஆன்லைன் உள்ளடக்க உருவாக்குநர்கள், செயலிகள் பயனர்களின் தகவல்களைச் சேகரிப்பதாகக் கூறுகின்றனர். கைப்பேசியின் அமைப்புகளில் (Settings) சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் இதைத் தடுக்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனினும், இத்தகைய கூற்றுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அரசுகளும் நிறுவனங்களும் தங்களுக்குத் தெரியாமல் தங்களைக் ரகசியமாகக் கண்காணிக்கின்றன என்று வேறு சிலர் நம்புகிறார்கள்.
நீங்கள் பேசுவதை உங்கள் கைப்பேசி ஒட்டுக் கேட்கிறதா?
இதற்கு, "ஆம், இல்லை" என்று இருவிதமாகப் பதிலளிக்கலாம். ஆனால், பலரும் நினைப்பதுபோல் இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சிரி (Siri), அலெக்சா (Alexa), கூகுள் அசிஸ்டெண்ட் (Google Assistant) போன்ற குரல் உதவியாளர்கள், நீங்கள் கூறும் கட்டளைகளுக்குப் பதிலளிக்க ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. 'ஹே சிரி' போன்ற குறிப்பிட்ட சொல்லைக் கேட்டதும் சிரி செயல்பட்டு, நீங்கள் கேட்ட தகவல்களை இணையத்தில் தேடுகின்றது.
குரல் உதவியாளர்கள், உங்கள் கட்டளைகளுக்குப் பதிலளிப்பது உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காகக் குரல் தரவுகளைப் பயன்படுத்துகின்றன.
எனினும், நமது அன்றாட உரையாடல்கள் அனைத்தும் கைப்பேசிகளால் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைத் தாங்கள் ஒட்டுக்கேட்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இன்ஸ்டாகிராம் ஏற்கெனவே மறுத்துள்ளது.
நீங்கள் பேசும் விஷயங்கள் தொடர்பான விளம்பரங்கள் உங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. "அது தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம்; அந்த விஷயத்துடன் உங்களுக்கு ஏற்கெனவே தொடர்பிருக்கலாம் அல்லது அதைப் பற்றி இணையத்தில் தேடியிருக்கலாம்" என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இணையதளங்களைப் பார்வையிடும் பயனர்கள் குறித்த தரவுகளை வழங்கும் விளம்பரதாரர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் இன்ஸ்டாகிராம் கூறியுள்ளது. இத்தகைய தரவுகள், பயனர்களின் விருப்பங்கள் மற்றும் ஆன்லைன் நடவடிக்கைகளுக்கு ஏற்ற உள்ளடக்கங்களையும் விளம்பரங்களையும் அவர்களுக்குக் காட்ட உதவுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
உங்கள் கைப்பேசி நீங்கள் பேசுவதை கேட்பதாகத் தோன்றினால் என்ன செய்யலாம்?
கைப்பேசிகள் பயனர்களின் உரையாடல்களைக் கேட்கின்றனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதேனும் தகவல் உள்ளதா என்பதை அறிய, பிபிசி நிறுவனம் பிரிட்டன் அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறையைத் தொடர்புகொண்டது.
இதற்குப் பதிலளித்த அந்தத் துறையின் செய்தித் தொடர்பாளர், "செயலிகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள், உங்கள் அனுமதியுடன் மட்டுமே கைப்பேசியின் குறிப்பிட்ட அம்சங்களை அணுக முடியும். உதாரணமாக, கேமராவைப் பயன்படுத்துவது அல்லது வரைபடச் செயலியில் உங்கள் இருப்பிடத்தை அறிந்துகொள்வது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதற்கு முன்கூட்டியே உங்கள் அனுமதியைப் பெறுவதுடன், அந்த அனுமதி ஏன் தேவை என்பதையும் அவை விளக்க வேண்டும். கைப்பேசியின் அமைப்புகள் (Settings) வழியாக இந்த அனுமதிகளை நீங்கள் மறுக்கலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
உங்கள் தனியுரிமை குறித்து மேலும் உங்களுக்கு கவலை இருந்தால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
- வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். அதை யாருடனும் பகிர வேண்டாம்.
- மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்க, இரு-படி சரிபார்ப்பு (Two way verification) அல்லது கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்.
- புதிய செயலிகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு, அவை கேட்கும் அனுமதிகளைச் சரிபாருங்கள்.
- உங்கள் தனிப்பட்ட தகவல்களை நம்பகமான இணையதளங்களில் மட்டுமே பகிரவும்.
- இணையத்தில் உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன்பு கவனமாகச் சிந்தியுங்கள்.
- சமூக ஊடகங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைப் (Privacy settings) பயன்படுத்தி, உங்கள் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































