நேஹா போரா தடுத்து வைப்பு: அபிஜித் தீப்கே எங்கே? டெல்லி காவல்துறையிடம் சிஜேபி கேள்வி

பட மூலாதாரம், Manan VATSYAYANA / AFP via Getty Images
டெல்லியில் இன்று போராட்டங்களில் ஈடுபட முயன்ற சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் நேஹா போரா உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். அபிஜித் தீப்கேவை அவரது வழக்கறிஞர்களுடன் பேச அனுமதிக்கவில்லை என்று காக்ரோச் ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
"அபிஜித் தீப்கேவை அடையாளம் தெரியாத இடத்திற்கு டெல்லி காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது. அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வழக்கறிஞர்களிடம் பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் ஏன் இளைஞர்களை பயங்கரவாதிகளைப் போல நடத்துகிறது?" என்று காக்ரோச் ஜனதா கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
"நாங்கள் இந்தியாவின் குடிமக்கள்; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாப்புகளும் எங்களுக்கும் உண்டு. டெல்லி காவல்துறையே, அபிஜித்தை எங்கே அழைத்துச் சென்றீர்கள்? இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்."
"அபிஜீத் தனது கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி வீட்டிலிருந்து வெளியே வந்தார். கையில் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்வது எப்படி குற்றமாகும்?" என்று அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்தது.
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டேவின் இல்லத்தில் அபிஜித் தீப்கே தங்கியிருந்தார். அங்கிருந்து, 'மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்' எனும் பேரணியின் ஒரு பகுதியாக, கையில் மூவர்ணக் கொடியுடன் வெளியே வந்தபோது, அங்கு இருந்த காவல்துறை அதிகாரி, "நாங்கள் உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்" என்று கூறினார்.
தீப்கே, மூவர்ணக் கொடியை ஏந்தியபடி கன்னோட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அவர் சென்ட்ரல் பார்க்கிற்கோ அல்லது புதுடெல்லியின் வேறு எந்த இடத்திற்கோ செல்ல முடியாது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, "அப்படியானால், நான் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு எங்கு செல்ல வேண்டும்?" என்று தீப்கே கேட்டார்.
அதற்கு அந்த அதிகாரி, "அதுகுறித்து பிறகு சொல்கிறோம். இப்போதைக்கு நாங்கள் உங்களைத் தடுத்து வைக்கிறோம்" என்று கூறினார்.
அதற்கு தீப்கே, "ஆனால், நான் இதுவரை எந்தச் சட்டத்தையும் மீறவில்லையே!" என்று வாதிட்டார்.
தான் எந்தச் சட்டத்தை மீறினேன் என்று தீப்கே மீண்டும் மீண்டும் கேட்டபோதும், காவல்துறை அதிகாரி அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், ANI
அதற்கு முன்னதாக, டெல்லி காவல்துறை குழு ஒன்று தீப்கேவிடம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இது குறித்து புதுடெல்லி துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா கூறுகையில், "புதுடெல்லி மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. எனவே, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
"அபிஜித் தீப்கேவிடம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
"இந்தச் சட்டத்தின் கீழ் என்னென்ன கட்டுப்பாடுகள் வருகின்றன என்பது அவருக்கு விளக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால், இதைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் விதிகளைப் பின்பற்றத் தவறினால், சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்."
நேஹா போராவும் தடுத்து வைப்பு

பட மூலாதாரம், Reuters
இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவரான நேஹா போராவை டெல்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது.
முன்னதாக, நேஹா போராவும் அவரது நண்பர்கள் பலரும் மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து தேசியக் கொடி பேரணி ஒன்றைத் தொடங்கியிருந்தனர்.
நேஹா போராவுடன் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பிற தொண்டர்களையும் காவல்துறை தடுத்து வைத்துள்ளது.
நேஹா போராவின் சமூக ஊடகக் கணக்கில் பதிவிடப்பட்ட ஒரு செய்தியில், "நேஹா மட்டும் தனியாக கைது செய்யப்பட்டு, தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் அவரது கைபேசி இல்லை. நேஹா எங்கே இருக்கிறார் என்பதை டெல்லி காவல்துறை தெரிவிக்க வேண்டும். அவர் மீண்டும் கடத்தப்பட்டுள்ளார்; இது சட்டப்பூர்வமான தடுப்பு நடவடிக்கை அல்ல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நேஹா போரா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































