பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின் தாயிடம் சேர்ந்த கோவை இளைஞர் மீண்டும் மாயம்

''இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். என் மகனைப் பார்ப்பதற்காக எங்களை விட அவனுடைய அக்கா, தங்கைகள் (சுந்தரியின் சகோதரிகளின் மகள்கள்) மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவனை ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் மகன் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறான். அவனை இனிமேல் நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் என்னுடைய ஒரே வேலை.''
கோவையிலிருந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு, காணாமல் போய் பஞ்சாப் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட கோவை இளைஞரை, பஞ்சாப்பிலிருந்து மீண்டும் அழைத்து வந்த தாயார் சுந்தரி, அப்போது பிபிசியிடம் சொன்ன வார்த்தைகள் இவை.
கடந்த ஜூலை 28 அன்று, தன் மகனை 23 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த சுந்தரி, அவரை கோவைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்துப் பராமரித்து வந்த நிலையில், கடந்த 26-ஆம் தேதியிலிருந்து அவருடைய மகன் பிரகாசம், மீண்டும் காணாமல் போயுள்ளார்.
நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சுந்தரி, தன் மகன் மீண்டும் கிடைத்தால் அவனை மனநலக் காப்பகத்தில் சேர்க்க வேண்டுமென்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், HANDOUT
பஞ்சாப்பில் கொத்தடிமையாக கொடுமைப்படுத்தப்பட்ட பிரகாசம்!
தன் வீட்டிலிருந்து பிரகாசம் பிரிந்து சென்றதும் மீண்டும் சேர்ந்ததும் ஆச்சரியமளிக்கும் உண்மைக்கதை.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிலுள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரியும், அவருடைய கணவர் ராமமூர்த்தியும் தங்களுடைய 2 மகன்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்காக கோவைக்கு வந்துள்ளனர். கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் அவர்கள் முதலில் குடியிருந்துள்ளனர். அப்போதுதான் கடந்த 2003-ஆம் ஆண்டில் இவர்களின் மூத்த மகன் பிரகாசம், சிறு சண்டையில் கோபப்பட்டு, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். எங்கே தேடியும் கிடைக்கவில்லை.
காவல்துறையில் புகார் அளித்தும் பயன் இல்லை. காணாமல் போன 2 மாதங்களுக்குப் பின், இவர்களின் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மளிகைக்கடைக்கு பிரகாசம் தொலைபேசியில் அழைத்து, தான் சென்னையில் இருப்பதாக மட்டும் தகவல் தெரிவித்துள்ளார். வேறு விபரங்கள் எதுவும் கூறவில்லை. அவர் மீண்டும் பேசுவார் என்று குடும்பத்தினர் காத்திருந்தனர். ஆனால் மீண்டும் அழைப்பு வரவில்லை.
அதற்குப் பின்பு சென்னை சென்று பல இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்கவில்லை என்பதை, பிரகாசத்தின் தாயார் சுந்தரி, பிபிசியிடம் முன்பு விளக்கியிருந்தார்.
பிரகாசம் காணாமல் போன சில ஆண்டுகளுக்குப் பின், கவுண்டம்பாளையத்திலிருந்து நீலாம்பூர் ஆச்சாங்குளம் பகுதிக்கு, சுந்தரியின் குடும்பம் குடிபெயர்ந்தது. கடந்த 2021-ஆம் ஆண்டில் புற்றுநோயால் ராமமூர்த்தி இறந்து விட்டதாகக் கூறினார் சுந்தரி.
சுந்தரியும் இளைய மகன் பிரபுவும் ஒரு குடிசை வீட்டில் குடியிருந்து வந்தனர். மூத்த மகன் பிரகாசம் இருக்கிறாரா என்பதே தெரியாமலிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் சுந்தரியை வந்து சந்தித்தார், திருப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்தையா.
சுந்தரியின் மூத்த மகன் பிரகாசம், பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள ஒரு காப்பகத்தில் இருப்பதாகக் கூறி, அவருடைய புகைப்படத்தைக் காண்பித்தார்.
அதைப் பார்த்து அது தன் மூத்த மகன்தான் என்று கூறிய சுந்தரி, அதன்பின் அவரிடம் அலைபேசியில் பேசி அந்தத் தகவலை உறுதியும் செய்தார். பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலுள்ள ஒரு பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக இருந்த பிரகாசத்தை, கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பினர், அவரை அங்கிருந்து மீட்டனர்.

பட மூலாதாரம், HANDOUT
''மாடு மேய்ப்பது, பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்த பிரகாசத்துக்கு போதிய உணவு. உடை, உறைவிடம் எதுவுமே தரப்படவில்லை. ஊதியம் என்பதுமில்லை. அவர் தப்பிச் செல்ல முடியாதபடி, இரவில் ஒரு இரும்புக் கட்டிலில் சங்கிலி கட்டி வைத்திருந்துள்ளனர்.'' என அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி கூறியது.
அவரை அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும் அந்த அமைப்பினர் பிபிசியிடம் விளக்கி, பிரகாசம் அப்போது இருந்த நிலையை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாகவும் எடுத்து வைத்திருந்தனர்.
அந்த படங்கள் மற்றும் காணொளிகளை பஞ்சாப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்தர், முத்தையா மூலமாக பிபிசி தமிழிடம் பகிர்ந்திருந்தார்.
கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட பிரகாசம், அந்த அமைப்பின் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். அவரை கடந்த 2023 ஆம் ஆண்டில் அங்கு சந்தித்த ஹரியானா சட்டப்பேரவையின் ஓய்வு பெற்ற செயலாளர் சுபாஷ் சந்தர், தன்னிடம் பிரகாசம் கூறிய சில வார்த்தைகளை வைத்து, அவருடைய ஊர் கோவை என்று தெரிந்து கொண்டுள்ளார்.
அதற்கு மேல் எந்த விபரங்களையும் சொல்ல இயலாத நிலையில் உடல் நலமும் மனநலமும் இல்லாமல் குழப்பத்துடன் பிரகாசம் இருந்ததாக பிபிசியிடம் தெரிவித்திருந்தார் சுபாஷ் சந்தர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்த தன்னுடைய நண்பர் பாலகிஷனிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தார் சுபாஷ். அவர் திருப்பூரில் உள்ள அவருடைய சகோதரரான பத்திரிகையாளர் முத்தையாவிடம், பிரகாசம் கூறிய சில தகவல்களைக் கூறி, அவருடைய குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார். சுந்தரி குடும்பம் முதலில் குடியிருந்த பகுதியில் சென்று விசாரித்து முத்தையாவுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அதன்பின் சில மாதங்கள் கழித்து, மருத்துவ சிகிச்சைக்குப் பின் சற்று தெளிவாகப் பேசிய பிரகாசம், தன்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் பூமாலைப்பட்டி ஆனைக்குளம் என்ற தகவலை சுபாஷிடம் கூறியுள்ளார். அதுபற்றி முத்தையாவிடம் தகவல் தெரிவித்தார் சுபாஷ் சந்தர். அந்தத் தகவலை வைத்து, விருதுநகர் மாவட்டத்தில் பலரிடமும் விசாரித்து, சுந்தரியின் சகோதரி மகளான வாசுகியிடம் பேசியுள்ளார்.
வாசுகி, தன்னுடைய பெரியம்மா சுந்தரியின் மகன்தான் பிரகாசம் என்றும், தனது பெரியம்மாவும் மற்றொரு அண்ணன் பிரபுவும் கோவை நீலாம்பூர் ஆச்சாங்குளத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதன் பின்பே, சுந்தரியைச் சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார் முத்தையா. இந்த சந்திப்புக்குப் பின், சுந்தரியின் இளையமகன் பிரபுவை அழைத்துக் கொண்டு பஞ்சாப் சென்றார் முத்தையா.
மகனையும் தாயையும் இணைப்பதற்கு உதவிய இரு மாநில அதிகாரிகள்!
சுபாஷ் சந்தர் மற்றும் சண்டிகார் தமிழ்ச்சங்கத்தினரின் உதவியுடன், பிரகாசத்தைச் சந்தித்தபோது, உரிய ஆவணங்களுடன் தாயாரை அழைத்து வந்தால் பிரகாசத்தை முறைப்படி ஒப்படைப்பதாக அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதற்குப் பின்பே, பிரகாசம் தன்னுடைய மகன்தான் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களைப் பெற்றுத்தருமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சுந்தரி.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவால், வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து, ஆவணங்களைத் தேடினர். பிரகாசம் படித்த பள்ளியிலிருந்து சில ஆவணங்களைப் பெற்றனர். விருதுநகரிலிருந்தும் சில தகவல்களை வாங்கிய பின், பிரகாசத்தின் பெயருடன் இருந்த குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து, பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா மாவட்ட துணை ஆணையாளர் ஹிமான்சு அகர்வாலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சார்பில் பரிந்துரைக் கடிதம் வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், HANDOUT
அந்த கடிதம் மற்றும் ஆதார ஆவணங்களுடன் சுந்தரியை, கடந்த ஜூலை 25 அன்று ரயிலில் பஞ்சாப்புக்கு அழைத்துச் சென்றார் முத்தையா. முதிய வயதில் மிகவும் கடினமான ரயில் பயணத்தை மேற்கொண்ட சுந்தரி, 3 நாட்களுக்குப் பின்பு பட்டியாலா சென்றடைந்தார். அங்கு நிர்வாகரீதியான சில நடவடிக்கைகளுக்குப் பின்பு, ஜூலை 28 அன்று சுந்தரியிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார் பிரகாசம்.
அதன்பின் சிலருடைய உதவியால் அவர்கள் விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர். அவர்களை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் வரவேற்றனர். தன் வீட்டிற்கு மகனை அழைத்துச் சென்றார் சுந்தரி. பிரகாசம் மீட்கப்பட்டது குறித்து ஊடகங்களில் தகவல்கள் பரவியிருந்ததால், அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்து சென்றனர். ஆனால் யாரிடமும் பிரகாசம் சரியாகப் பேசமுடியாத நிலையில் இருந்தார்.
அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோதும், அவரால் இயல்பாக பேசமுடியவில்லை என்பது தெரியவந்தது.
தானாகவே சில நேரங்களில் பேசிக்கொண்டிருப்பதையும், கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் பேசுவதையும் அறிய முடிந்தது.
சில நாட்களில் அவர் சரியாகிவிடுவார் என்று பிபிசியிடம் நம்பிக்கை தெரிவித்தார் அவருடைய தாயார்.

அப்போது பிபிசியிடம் பேசிய சுந்தரி, ''என் மகனை நல்ல முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்வதுதான் என்னுடைய முதல் வேலை. அவனை எந்த வேலைக்கும் அனுப்பாமல் உடல் நலத்தைத் தேற்றப்போகிறேன்.'' என்றார்.
கடந்த வாரத்தில் மீண்டும் பேசிய சுந்தரி, ''இப்போது என் மகனைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள். நன்றாகத் தேறிவிட்டான். இப்போது ஓரளவுக்கு நன்றாகப் பேசுகிறான்.'' என்றார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதியிலிருந்து பிரகாசம் மீண்டும் காணாமல் போயுள்ளார். சுந்தரியும், அவருடய இளைய மகன் பிரபுவும் சுற்றிலும் உள்ள பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், நீலாம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர் கொடுத்துள்ள புகாரில், ''செப்டம்பர் 26 மதியம் ஒரு மணியிலிருந்து தன் மகனைக் காணவில்லை.'' என்று தெரிவித்திருந்தார்.
பிபிசியிடம் பேசிய சுந்தரி, ''என் மகன் நன்றாகத்தான் இருந்தான். வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்குவதைத் தவிர வேறு எந்த வேலையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. நன்றாகத் தேறிவந்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனியாகவே பேசிக் கொண்டிருந்தான். அதிலும் பல நேரம் இந்தியில்தான் பேசுவான். அதனால் அவன் என்ன பேசுவான் என்பதே தெரியவில்லை.'' என்றார்.
''காணாமல் போன அன்று என்னிடம் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தான். எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை மனதில் எதையாவது நினைத்து அப்படிப் பார்த்தானா என்று தெரியவில்லை. அன்று அவனை பலரும் அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்றார்கள். ஆனால் எங்கே சென்றான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் சற்று மனநலம் சரியில்லாமல் இருக்கிறான். அவன் மீண்டும் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படிக் கிடைத்தால் அவனை மனநலக் காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை தரவேண்டும். இங்கே வைத்திருக்க மாட்டேன்.'' என்றார் சுந்தரி.
பிரகாசம் காணாமல் போனது குறித்து சுந்தரி கொடுத்துள்ள புகாரின் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக பிபிசியிடம் கூறிய நீலாம்பூர் காவல்துறையினர், அவரைப் பற்றிய தகவல்கள், புகைப்படம் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































