அசாமில் காவலில் வைக்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் - பாஜக மற்றும் அபிஜித் திப்கே கூறியது என்ன?

பட மூலாதாரம், @AshutoshRanka
காக்ரோச் ஜனதா கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஆசுதோஷ் ரங்கா மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அசாம் காவல்துறையினரின் காவலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பிறகு, தன்னை அசாம் காவல்துறை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததாக ஆசுதோஷ் ரங்கா குற்றம்சாட்டினார்.
தன்னை எந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் அழைத்துச் சென்றார்களோ, அதே இடத்திலேயே மீண்டும் விடுவிக்க வேண்டும் என்று காவல்துறை நிர்வாகத்திடம் தான் கோரியதாக ஆசுதோஷ் ரங்கா தெரிவித்தார்.
காவல்துறையின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஆசுதோஷ் ரங்கா தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிடும் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
அதில், 'ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் மாநிலத்தின் கரப்பான் பூச்சிகள் இப்போதுதான் தங்களின் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளன'' என குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, கட்சியின் 'மண்டல தன்னார்வலர்கள் சந்திப்பு' நடைபெறுவதற்கு சற்று முன்பு ஆசுதோஷ் ரங்காவும் அவரது குழுவினரும் காவலில் வைக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களாக, காக்ரோச் ஜனதா கட்சி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று, அங்குள்ள நிலைமையைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பள்ளிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக காக்ரோச் ஜனதா கட்சி குற்றம்சாட்டுகிறது. இதற்காகவே தான் அசாமுக்கு வந்ததாகவும், அங்குள்ள உள்ளூர் கட்சி ஆதரவாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் ஆசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார்.
"நாட்டின் பிற பகுதிகளுக்கு நாங்கள் செல்வதன் நோக்கம் என்னவோ, அதே நோக்கத்துடன்தான் குவாஹாத்திக்கும் வந்துள்ளோம். நீண்ட காலமாக நாட்டின் இளைஞர்கள் அடிப்படைப் பிரச்னைகளுடன் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல அடிப்படைப் பிரச்னைகளை அரசு புறக்கணித்துள்ளது. தற்போது பள்ளிகளின் நிலைமையையும், கல்வி முறையையும் மேம்படுத்துவதற்காகப் போராடி வருகிறோம்." என ஆசுதோஷ் ரங்கா சனிக்கிழமை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அசாமில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு தளம் உள்ளது. ஏராளமானோர் எங்களுடன் இணைந்துள்ளனர். வரும் நாட்களில், மாநிலத்தில் உள்ள சில பள்ளிகளுக்குச் சென்று, எங்களது தன்னார்வலர்களைச் சந்திக்க உள்ளேன். மேலும், எஸ்.ஐ.ஆரால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்க உள்ளேன்," என்றார்.
பாஜக எம்எல்ஏ அபிஜித் திப்கேவுக்கு எச்சரிக்கை
அபிஜித் திப்கே வெளியிட்ட பதிவைப் பகிர்ந்த அசாம் மாநிலம் லக்கிம்பூர் தொகுதி பாஜக எம்எல்ஏ மானப் தேகா, "அசாமுக்கு துணிச்சலைப் பற்றி யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. தனது துணிச்சலாலும் உறுதியாலும் வலிமையான முகலாயர்களையே அசாம் தடுத்து நிறுத்தியுள்ளது. உங்களைப் போன்ற முகலாயர்களை எப்படி கையாள்வது என்பது அசாம் மக்களுக்குத் தெரியும்," என்று எழுதியுள்ளார்.
மேலும், "அசாமுக்கு நீங்கள் வருவதாக அறிவிப்பதற்கு முன், இந்த நிலத்தின் வரலாற்றைப் படித்து, இங்குள்ள மக்களைப் புரிந்துகொள்ளுங்கள். அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் தலைவணங்காத நிலம் இது; இனியும் தலைவணங்காது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, ஆசுதோஷ் ரங்கா மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்பட்டது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் ரத்னா சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவை சௌரவ் தாசும் பகிர்ந்திருந்தார்.
ரத்னா சிங் தனது பதிவில், "ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் காலையில் இருந்தே காவல் நிலையத்தில் உள்ளனர். அவர்களை அங்கேயே வைத்திருப்பதற்கான காரணமாக தற்போது காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனையைச் சுட்டிக்காட்டுகின்றனர்," என்று எழுதியிருந்தார்.
அவர் மேலும், "இதற்கிடையில், எங்களது திறமையான குழு காவல் நிலையத்தில் உள்ள கழிவறையை ஆய்வு செய்தது. அதன் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது, கழிவறை தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் வேலை செய்யவில்லை, தூய்மையும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.
"தயவுசெய்து காவல் நிலையத்தைச் சீரமைக்கவும்," என்றும் அவர் எழுதியிருந்தார்.
அபிஜித் திப்கே என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
காக்ரோச் ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் பள்ளி ஆய்வு பல்வேறு இடங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கு ஆசுதோஷ் ரங்காவும் அவரது சகாக்களும் சென்றபோது, ஒரு குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது அசாமில் நடந்துள்ள சம்பவம் குறித்து அபிஜித் திப்கே சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
"ஆசுதோஷ் ரங்கா அசாம் காவல்துறையினரால் ஒரு தனியார் வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அல்லது எந்தக் காரணத்துக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை காவல்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆசுதோஷ் ரங்கா விடுவிக்கப்படாவிட்டால், காக்ரோச் ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் தான் அசாமுக்குச் செல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளரான சௌரவ் தாஸ், "ஆசுதோஷ் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியின் பிற உறுப்பினர்கள் காவலில் வைக்கப்பட்டிருப்பது, அசாமில் சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக ஹிமந்தா தனது விருப்பத்தையே நடைமுறைப்படுத்துகிறார் என்பதைக் காட்டுகிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும்," என்று குற்றம்சாட்டியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை, ஆசுதோஷ் ரங்கா சமூக ஊடகத்தில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் காவல்துறை வாகனத்தில் அமர்ந்திருப்பது தெரிகிறது.
அவர் ஊடகங்களிடம் கூறுகையில், "அசாமில் உள்ள பள்ளிகளின் உண்மையான நிலைமையை நாங்கள் வெளிக்காட்டிவிடுவோம் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா அஞ்சுகிறார். நாங்கள் பள்ளிகளின் நிலைமையை வெளிக்காட்டுவோம். நீங்கள் அசாமை எந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதையும் நாட்டின் மக்களுக்குக் காட்டுவோம்," என்றார்.
ரங்கா மேலும் கூறுகையில், "காசிரங்காவில் தண்ணீர், காடு மற்றும் நிலத்துக்காகப் போராடி வரும் மக்களையும் நாங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம் என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா அஞ்சுகிறார். காடுகள் எவ்வாறு விற்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் மக்களிடம் வெளிப்படுத்துவோம்," என்றார்.
கௌரவ் கோகோய் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தனது சமூக ஊடக பதிவில், "குவாஹாத்தியில் பல அசாம் மாநில இளைஞர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதை நான் கண்டிக்கிறேன். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது," என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் மேலும், "பாஜக ஏன் இளைஞர்களைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறது? இந்து-முஸ்லிம் பிளவை ஏற்படுத்தும் பாஜகவின் அரசியலை இளைஞர்கள் நிராகரித்துவிட்டதால் அஞ்சுகிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
"அச்சமடைந்துள்ள பாஜக, அவர்களின் வாக்குகளைப் பறிக்கவும், அவர்களின் குரலை ஒடுக்கவும் விரும்புகிறது. நான் அசாம் மாநில இளைஞர்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்," என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































