சுத்தத்திற்கு பெயர் போன ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளை காண்பதே அரிதாக இருப்பது ஏன்?

ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?
    • எழுதியவர், மிஷெல் கிராஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ஒரு தாக்குதல் தொடங்கி ஆழமாக வேரூன்றியுள்ள சமூக நெறிமுறைகள் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நீங்கள் ஒரு நாள் உலா சென்றால் ஒரு காலி காபி கோப்பை மற்றும் பல சாண்விட்ச் உறைகளை எடுத்துச் செல்வீர்கள். அதனுடன் ஒரு விதமான குழப்ப மனநிலையும் உங்களுக்கு உருவெடுக்கும். ஜப்பான் அதன் தூய்மைக்காக அறியப்பட்டது. ஆனால் வெளியில் எடுத்துச் செல்லும் பொருட்களை தூக்கிப் போடுவதற்கு ஏன் ஓர் இடத்தை கண்டடைவது சிரமமான ஒன்றாக உள்ளது?

ஜப்பானுக்கு அவ்வப்போது பயணம் செய்பவர்களுக்கு இந்த மனக்குமுறல் பழகியிருக்கும். குழம்பிப்போன சுற்றுலா பயணிகள் குப்பையே இல்லாத தெருக்களில் குப்பைத் தொட்டிகளைத் தேடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

ஆனால் அதற்கான பதில் முதலில் தோன்றுவதைவிட சிக்கலானது.

"இது வரலாற்று ரீதியான வளர்ச்சிகள், பொருளாதார நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் மக்கள் எவ்வாறு செயல்படத் தீர்மானிக்கிறார்கள் என்பதில் அவற்றின் பன்முகத் தாக்கங்கள் ஆகியவற்றின் ஒரு சிக்கலான கலவையாகும்," என்று வில்லியம்ஸ் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியரும், 'கழிவு: போருக்குப் பிந்தைய ஜப்பானை நுகர்தல் (Waste: Consuming Postwar Japan)' என்ற நூலின் ஆசிரியருமான ஐகோ மருக்கோ சினியாவர் கூறுகிறார்.

ஜப்பான் எப்போதுமே குப்பைத் தொட்டி இல்லாத நாடாக இருந்ததில்லை. மார்ச் 1995-இல் நடைபெற்ற சம்பவம் ஒன்று நாட்டின் குப்பைத் தொட்டி கலாசாரத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக சினியாவர் சுட்டிக்காட்டுகிறார்.

காலை நேர நெரிசலின் போது, ​​அவும ஷின்ரிக்யோ வழிபாட்டுக் குழு உறுப்பினர்கள் டோக்கியோ மெட்ரோவின் மூன்று வழித்தடங்களில் சரின் வாயுவை வெளியிட்டதில், 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் குப்பைத் தொட்டிகளை மூடி வைத்தனர் அல்லது அகற்றினர்.

ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?

அமெரிக்காவில் நிகழ்ந்த 9/11 தாக்குதல் உள்பட உலகம் முழுவதும் பின்னர் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்கள், அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்த உதவின.

ஆனால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகும், மிகக் குறைவான குப்பைத் தொட்டிகளே திரும்ப வந்துள்ளதையும், ஜப்பான் ஏன் குறிப்பிடத்தக்க வகையில் குப்பைகள் அற்ற நாடாக நிலைத்திருக்கிறது என்பதையும் பாதுகாப்பு மட்டுமே விளக்கவில்லை.

செலவும் நடைமுறை சாத்தியமும் அதற்கு ஒரு காரணமாக உள்ளது. மக்கள் தங்கள் குப்பைகளை வீட்டிற்கே எடுத்துச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில், 2000-ஆம் ஆண்டில் இருந்து சில நகராட்சிகள் வேண்டுமென்றே தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதாக ஜப்பானின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வுக் நிறுவனத்தைச் சேர்ந்த ஆயா யோஷிடா கூறுகிறார்.

"உதாரணமாக, கியோட்டோவில் 2011-ஆம் ஆண்டிலிருந்து தெருவோரக் குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை பாதியளவிற்கும் மேலாகக் குறைக்கப்பட்டது. ஏனெனில், வீட்டுக்குப்பைகளை அவற்றில் கொட்டுவது மற்றும் அவற்றைச் சுற்றி குப்பைகள் குவிவது போன்ற சிக்கல்களால், அத்தொட்டிகளைப் பராமரிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஆகும் செலவுகள் அதிகரித்தன," என்கிறார் யோஷிடா.

ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?
படக்குறிப்பு, ஜப்பானில் பொதுக் குப்பைத் தொட்டிகள் இப்போதும் உள்ளன. ஆனால் அவற்றைக் கண்டுபிடிப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் கடினமாக இருக்கலாம்.

அப்படியெனில் ஜப்பான் தெருக்களில் ஏன் அதிக அளவில் குப்பைகள் இருப்பதில்லை? ஜப்பானின் தூய்மைக்குக் காரணம் அந்நாட்டவருக்கே உரிய தனித்துவமான நேர்த்தி உணர்வுதான் என்று கருதுவதைத் தவிர்க்குமாறு யோஷிடா எச்சரிக்கிறார்.

தூய்மையான தெருக்கள் என்பது பல ஆண்டுகால திட்டமிட்ட கொள்கையின் விளைவு என்று அவர் கூறுகிறார்.

மேலும் அவர் "பல தசாப்தங்களாக பொதுவெளியில் குப்பைகளைக் கொட்டுவதை தவிர்ப்பதற்கான குப்பை-எதிர்ப்பு பிரசாரங்கள், பொதுக் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகள் முதலீடு செய்துள்ளன," என்றும் கூறினார்.

ஆனால் சமூக நெறிமுறைகளும் முக்கியம் என்று அவர் தெரிவிக்கிறார்.

அதில் ஒன்று தான் மெய்வாகு ஓ காகெனாய். மற்றவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

அன்றாட பழக்க வழக்கங்களும் இதில் ஒரு பங்கு வகிக்கின்றன. பயணத்தின் போது சாப்பிடுவது ஜப்பானில் மிகவும அரிதானது. எனவே மக்கள் வெளியில் செல்லும்போது குறைவான அளவிலே குப்பைகளை உற்பத்தி செய்வார்கள்.

ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"எனது அன்றாட வாழ்க்கை முறையை யோசித்துப் பார்க்கும்போது, ​​வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று திரும்பும் பயணத்தின்போது எவ்வளவு குப்பை உருவாகிறது என்பது எனக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பயணத்தின்போது குப்பை உருவாவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். ஏனெனில் ஜப்பானில் நடந்து செல்லும்போது அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது சாப்பிடுவது வழக்கமான ஒன்றல்ல," என்று சினியாவர் கூறுகிறார். "

சுற்றுலாப் பயணிகள் நிச்சயமாக நகரத்தை வேறுவிதமாக உணர்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் நகரத்தைச் சுற்றிப்பார்த்து குடிநீர் பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வாங்குகிறார்கள். அதனால் அவர்கள் அதிக அளவில் குப்பைகளைச் சுமந்துகொண்டு அவற்றைக் கொட்டுவதற்கு இடம் கிடைக்காமல் தவிர்ப்பார்கள்.

குப்பைத் தொட்டிகளை எளிதில் காண முடியாமல் இருப்பது முதலில் சுற்றுலாப் பயணிகளுக்கு குழப்பமூட்டுவதாகவும் ஆத்திரமூட்டுவதாகவும் இருக்கலாம் என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான ஜன்கோ யோகோ. ஆனால் பலர் விரைவாக பழகிக் கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"ஆரம்பத்தில், குப்பைத் தொட்டிகள் இல்லாததை என் விருந்தினர்கள் பெரும்பாலும் குறை கூறினாலும், தெருக்களில் குப்பை ஏதும் இல்லாததைப் பார்த்து ரசிப்பதோடு, 'டோக்கியோவில் இருக்கும் போது அந்த இடத்துக்கேற்றவாறு நடந்துகொள்ளும்' மனப்பான்மையையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?
படக்குறிப்பு, ஷின்ஜுகு நிலையம், பயணிகளிடமிருந்து குப்பைகளைச் சேகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, நடமாடும் குப்பைத் தொட்டி ரோபோக்களை சோதனை செய்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் என்ன நினைத்தாலும் சரி, குப்பைத் தொட்டிகள் முழுமையாக மறைந்துவிடவில்லை என்று கூறும் சினியாவர், அதனை எங்கு கண்டுபிடிக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

ரயில் நிலையங்களில் இப்போதும் அவை உள்ளன. பெரும்பாலும் டிக்கெட் நுழைவு வாயில்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒளிபுகும் கொள்கலன்களாக இவை காணப்படுகின்றன, இதனால் ஊழியர்கள் அல்லது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அவற்றைக் கண்காணிக்க முடிகிறது.

மேலும் இந்த மாதத்தில்தான், டோக்கியோவின் ஷின்ஜுகு நிலையம், அனைத்திலும் மிகவும் ஜப்பானியத்தனமான ஒரு தீர்வைச் சோதனை முறையில் செயல்படுத்தத் தொடங்கியது. அதாவது, சுற்றித் திரிந்து குப்பைகளைச் சேகரிக்கும் நடமாடும் குப்பைத்தொட்டி ரோபோக்கiள ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளது.

அவை பொதுவான நடைமுறையாக மாறும் வரை, டோக்கியோவாசிகள் நீண்ட காலமாகச் செய்து வருவதையே பார்வையாளர்களும் செய்ய வேண்டியிருக்கலாம். அதாவது, குப்பையைப் போடுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டறியும் வரை அதைத் தங்களிடமே வைத்துக்கொள்ள வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு