'ஆசிரியராக சம்பாதித்ததைவிட கேமிங்கில் இருமடங்கு சம்பாதிக்கிறேன்'

பட மூலாதாரம், John Fairhall/BBC
- எழுதியவர், ஸோயி ஓ'பிரையன்
- எழுதியவர், லாரா டெவ்லின்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
2019-ஆம் ஆண்டு, நீண்டகால உடல்நலப் பிரச்னை காரணமாக, ஜார்வ்ஸ் டாஸ்கர் தனது 28வது வயதிலேயே ஆசிரியர் பணியை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அவர் கேமிங் துறைக்கான தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கும் ஜார்வ்ஸ் இண்டி இன்சைட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது, ஆசிரியராக இருந்தபோது பெற்ற ஆண்டு வருமானத்தை விட இரு மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்.
சமீபத்தில் சுயாதீன கேம் உருவாக்குநர்களையும் ஸ்டுடியோக்களையும் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் பிரிட்டனில் உள்ள சஃபோக் பல்கலைக்கழகத்தின் இ-ஸ்போர்ட்ஸ் மையத்துக்கு வந்திருந்தார்
"இப்போது நான் சம்பாதிப்பதை ஆசிரியர் பணியில் சம்பாதிக்க எனக்கு சுமார் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்," என்று அவர் கூறினார்.
ஆசிரியர் பணியை விட்டு வெளியேறிய பிறகு, ஆரம்பத்தில் பிளேஸ்டேஷனின் யூடியூப் சேனலுக்காக தன்னார்வலராகப் பணியாற்றத் தொடங்கியதாக டாஸ்கர் கூறினார். ஆனால், ஆசிரியர் பணிக்கும் கேமிங் துறைக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரு கம்யூனிட்டியை நிர்வகிப்பது, மாணவர்கள் நிறைந்த ஒரு வகுப்பறையை நிர்வகிப்பதைப் போன்றதே. அதனால், இரு துறைகளுக்கும் இடையே பல பொதுவான திறன்கள் உள்ளன. மேலும், பலர் வாழ்க்கையின் பிற்பகுதியில் கேமிங் துறைக்குள் வருவது வழக்கமான விஷயமாகும்," என்றார்.
பிரிட்டனின் எக்ஸெட்டரில் வசிக்கும் டாஸ்கர், இந்தத் துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம் என்று கருதுகிறார்.
"கேமிங் துறைச் சமூகம் மிகவும் வலுவானது. தாங்கள் செய்யும் வேலையை உண்மையாக நேசிப்பவர்களை அது ஊக்குவிக்கும். அதே நேரத்தில், பணத்திற்காக மட்டுமே இந்தத் துறைக்குள் வந்தவர்களையும் அது எளிதில் அடையாளம் காணும்," என்று அவர் கூறினார்.
"ஆர்வம்தான் மிக முக்கியமானது."
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டபோது, அதனை ஏற்க மறுப்பதில் கேமிங் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகதான் நம்புவதாக அவர் கூறினார். காரணம், கேம்களை விளையாடுபவர்கள் செயற்கை நுண்ணறிவை விரும்புவதில்லை என்பதுதான்.
"மனிதர்களின் படைப்பாற்றலை தொடர்ந்து முன்னிறுத்தி வருவதில், ஒரு துறையாக நாம் பெருமைப்பட வேண்டும். அதற்குப் பார்வையாளர்களும் ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், John Fairhall/BBC
கிழக்கு இங்கிலாந்தில் வளர்ந்து வரும் சுயாதீன கேமிங் துறையைப் பற்றிய நிகழ்ச்சியை கேம் ஆங்லியா ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக டாஸ்கர், சஃபோக் வந்திருந்தார்.
கேம் ஆங்லியாவைச் சேர்ந்த மார்க் பேக்லர், இந்தத் துறை தற்போது பிரிட்டனின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதேவேளை, இந்தத் துறையில் போட்டி அதிகமாக இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், சொந்தமாக சுயாதீன கேம்களை உருவாக்கி வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளன என்றும் கூறினார்.
"இது ஓர் உள்ளடக்க உருவாக்குநராக இருப்பதைப் போன்றது. அதில் தனித்து முன்னிலை பெறுவது கடினம்தான். ஆனால், அதைச் செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு இந்தத் துறையை எவ்வாறு மாற்றும் என்பதைத் தற்போது கணிப்பது கடினம் என்றும், ஆனால் ஏராளமான கேமர்கள் ஏ.ஐ பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், John Fairhall/BBC
சாம் ரீட்-கிரேவ்ஸ், ரீட் கிரேவ்ஸ் நிறுவனத்தில் கிழக்கு இங்கிலாந்து பகுதியில் கேமிங் துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் கேமிங் துறை "மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது" என்றார்.
"சஃபோக், எசெக்ஸ், கேம்பிரிட்ஜ்ஷையர், நோர்ஃபோக் உள்ளிட்ட பகுதிகளில் கேம் ஆங்லியா போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருவதால், ஏராளமான மாணவர்களும் கேம் உருவாக்குநர்களும் உள்ள வலுவான குழுமங்கள் உருவாகியுள்ளன. இதன் மூலம் பெரிய அளவிலான கேம்களை உருவாக்கக்கூடிய கேம் ஸ்டுடியோக்களை இந்தப் பகுதிக்கு ஈர்க்கத் தொடங்கியுள்ளதாக நான் நினைக்கிறேன்.
கால் ஆஃப் டூட்டி அல்லது ஃபிஃபா போன்ற கேம்களைப் பொறுத்தவரை, தற்போது அவை கிழக்கு இங்கிலாந்தில் இருந்து உருவாக வாய்ப்பில்லை. ஏனெனில், இங்கு பெரிய அளவிலான கேம் ஸ்டுடியோக்கள் இல்லை.
சிறிய சுயாதீன கேம் உருவாக்குநர்களும் அதிக பணம் சம்பாதித்து, மிகப் பெரிய வெற்றியைப் பெறும் கேம்களை உருவாக்க முடியும்." என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், John Fairhall/BBC
22 வயதான அப்பிகேல் டன், எசெக்ஸைச் சேர்ந்த சுயாதீன கேம் உருவாக்கும் நிறுவனமான அஸ்ட்ரல் ஃபோர்ஜின் நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார்.
தற்போது கேமிங் துறையில் பெண்களுக்கு "ஏராளமான வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் கூறினார்.
"இங்குள்ள அனைவரும் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். குறிப்பாக இப்போது, வெளியில் இருந்து தோன்றுவதைப் போல இந்தத் துறை மோசமானதாக இல்லை. நானே ஒரு புரோகிராமர். இந்தப் பணியில் பெண்கள் இருப்பது சற்று அரிதானது என்றாலும், நான் ஒருபோதும் இந்தத் துறையில் பொருந்தாதவராக உணர்ந்ததில்லை," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், John Fairhall/BBC
ஓமர் கலீல், என்டிட்டி நிறுவனத்தில் கேம் ஸ்கவுட் குழுவின் தலைவராக உள்ளார். பிரிட்டனில் திறமையானவர்கள் "ஏராளமாக உள்ளனர்" என்று கூறிய அவர், அடுத்த பெரிய கேமை உருவாக்குவது சவாலானதாக இருப்பதாகத் தெரிவித்தார்.
"தற்போது ஏராளமான கேம்கள் உள்ளன. நல்ல கேம்களுக்கு பஞ்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால், அந்த கேம்கள் குறித்து மக்களின் கவனத்தை எப்படிப் பெறுவது என்பதுதான் முக்கியம்," என்று அவர் விளக்கினார்.
"அதுதான் மிகப்பெரிய சவால் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
கூடுதல் தகவல்கள்: ஆலிஸ் கன்னிங்ஹாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































