ஹிட்லரின் தளபதிகளை ஏமாற்றி போர் ரகசியங்களை கசியவைத்த பிரமாண்ட மாளிகை - உள்ளே இருந்தது என்ன?

ட்ரென்ட் பார்க் மாளிகை, அதன் பெயருக்கு ஏற்ற வகையில் ரகசியங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
    • எழுதியவர், கேத் பவுண்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இரண்டாம் உலகப் போரின்போது, வடக்கு லண்டனில் உள்ள ட்ரென்ட் பார்க் மாளிகையின் மேல்தளத்தில் நாஜி போர்க் கைதிகள் ஓய்வெடுத்து கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனர்.

அதே நேரத்தில், கீழ்தளத்தில் இருந்த "ரகசியமாகக் ஒட்டுக் கேட்பவர்கள்" அவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கேட்ட தகவல்கள் இரண்டாம் உலகப் போரின் போக்கையே மாற்றின.

ட்ரென்ட் பார்க் மாளிகை ரகசியங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

வடக்கு லண்டனில் அமைந்துள்ள இந்த நேர்த்தியான மாளிகையின் வெளிப்புறமும், தரைத்தள அறைகளும், போருக்கு முந்தைய காலத்தில் சிறப்பான விருந்துகளை நடத்தியவரும், அழகியல் மீது ஆர்வம் கொண்டவருமான சர் பிலிப் சாசூனின் நுட்பமான ரசனையை வெளிப்படுத்துகின்றன.

ஆனால், இந்த மாளிகையின் அடித்தளத்துக்குச் செல்பவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற உளவு நடவடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான ரகசியச் செயல்பாடுகள் குறித்துப் பரவலாக அறியப்படாத ஒரு கதையை அறிந்துகொள்ள முடியும்.

எச்சரிக்கை: சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய இனப்படுகொலை தொடர்பான குறிப்புகள் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில், ட்ரென்ட் பார்க் முதல்முறையாக அருங்காட்சியகமாக பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. போர்க்காலத்தில் அது ஆற்றிய முக்கியப் பங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்குதான் "ரகசியமாகக் கேட்பவர்கள்" அடங்கிய ஒரு குழு, அந்த மாளிகையில் தங்கவைக்கப்பட்டிருந்த உயரதிகார ஜெர்மானிய போர்க் கைதிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது. அவர்களில் பலர் ஜெர்மனியைச் சேர்ந்த யூத அகதிகள்.

இந்த நாஜி ஜெர்மனி ராணுவத் தளபதிகளுக்கு, தாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பது தெரியாது.

தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தவறாக நம்பிய அவர்கள், போரின் போக்கையே மாற்றிய முக்கியமான உளவுத் தகவல்களைத் தங்களுக்குத் தெரியாமலேயே வெளியிட்டனர்.

மிகவும் ஆடம்பரமானது

அரசியல்வாதியும் கலைப் பொருட்களைச் சேகரிப்பவருமான சர் பிலிப் சாசூன், 1912-ஆம் ஆண்டு ட்ரென்ட் பார்க்கை பெற்றார். 1920களில், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நியோ-ஜார்ஜியன் கட்டடக்கலை பாணியில், அதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் பணியை அவர் தொடங்கினார்.

அரசியல்வாதியும் கலைப் பொருட்களைச் சேகரிப்பவருமான சர் பிலிப் சாசூன், 1912ஆம் ஆண்டு ட்ரென்ட் பார்க்கை மரபுரிமையாகப் பெற்றார்.
படக்குறிப்பு, ஒட்டுக் கேட்கப்பட்ட அந்த ஆடம்பரமான உட்புறங்கள், நாஜி தளபதிகளுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த உதவின. (புகைப்படம்: ஜேம்ஸ் ஓ டேவிஸ்)

"அவர் மிகவும் நேர்த்தியான, அமைதியான, எளிமையான கட்டடக்கலை பாணியை உருவாக்கினார். அதன் உட்புறமும் அதேபோன்று தான் இருந்தது. அதிகமான பொருட்கள் இல்லாமல், மிகவும் விசாலமாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அற்புதமான அழகும் மதிப்பும் கொண்ட பழங்காலப் பொருட்களுடனும் அது இருந்தது" என்று பிபிசியிடம் கூறுகிறார் ட்ரென்ட் பார்க்கின் மூத்த ஆலோசகரான சைமன் தர்லி.

நுட்பமான சீன வால்பேப்பர்களும், பிலிப் டி லாஸ்லோ மற்றும் ஜான் சிங்கர் சார்ஜென்ட் ஆகியோரால் வரையப்பட்ட குடும்ப ஓவியங்களும் சுவர்களை அலங்கரிக்கின்றன.

இந்த நேர்த்தியான மாளிகையின் தரைத்தள உட்புறங்கள் தற்போது மிகவும் கவனமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

"தரைத்தளத்தில் மக்கள் சாசூனின் உலகத்துக்குள் மீண்டும் நுழைவதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் கீழ்தளத்துக்குச் செல்கிறார்கள்" என்கிறார் அருங்காட்சியக இயக்குநர் கியூசெப்பே அல்பானோ.

ஒலிக்காக இணைக்கப்பட்டது

கீழ்தளத்துக்குச் சென்றால், நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

சர் பிலிப் 1939-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயிரிழந்தார். செப்டம்பர் மாதம் போர் தொடங்கியபோது, இந்த மாளிகையை பிரிட்டிஷ் அரசு கையகப்படுத்தியது.

பிரிட்டிஷ் ரகசிய உளவுச் சேவையின் மூத்த உளவுத் தலைவர்களில் ஒருவரான தாமஸ் கென்ட்ரிக், ஒருங்கிணைந்த சேவைகளின் விரிவான விசாரணை மையம் அமைப்பதற்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது என்று அடையாளம் கண்டிருந்தார்.

உரிமையாளரின் சகோதரியான சோல்மொண்டேலியின் மார்கியோனஸ் சிபிலின், ஜான் சிங்கர் சார்ஜென்ட் வரைந்த உருவப்படம்
படக்குறிப்பு, உரிமையாளரின் சகோதரியான சோல்மொண்டேலியின் மார்கியோனஸ் சிபிலின், ஜான் சிங்கர் சார்ஜென்ட் வரைந்த உருவப்படம், அந்த மாளிகையின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புகளில் ஒன்றாகும் (புகைப்படம்: ஜேம்ஸ் ஓ டேவிஸ்).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

லண்டன் டவர் பகுதியில் போர்க் கைதிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் முயற்சியை கென்ட்ரிக் ஏற்கெனவே மேற்கொண்டிருந்தார்.

ஆனால், ஒருங்கிணைந்த சேவைகளின் விரிவான விசாரணை மையங்கள் வெளிப்படையாகத் தெரியாத இடங்களில் இருக்க வேண்டும் என்றும், குண்டுவீச்சுக்கு உள்ளாகும் அபாயத்தைத் தவிர்க்க மத்திய லண்டனில் இருந்து போதுமான தொலைவில் இருக்க வேண்டும் என்றும் அவர் புரிந்துகொண்டார்.

டிரென்ட் பார்க் மற்றும் அதனுடன் இணைந்த லாட்டிமர் ஹவுஸ், வில்டன் பார்க் ஆகிய இடங்களும், கைதிகளின் தனிப்பட்ட உரையாடல்களில் இருந்து தாம் விரும்பிய வகையான உளவுத் தகவல்களைப் பெறும் நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்குத் தேவையான இடவசதியை கென்ட்ரிக்குக்கு வழங்கின.

அவர் அந்த நடவடிக்கையை பெரிதும் விரிவுபடுத்தினார்.

"மாளிகையின் முழுப் பகுதியும், குதிரை இருந்த பகுதியும் ஒலியைப் பதிவு செய்யும் வகையில் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன" என்று த வால்ஸ் ஹேவ் இயர்ஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியரும், வரலாற்றாசிரியருமான ஹெலன் ஃப்ரை பிபிசியிடம் கூறுகிறார்.

செடித் தொட்டிகள், விளக்குகள் தொடங்கி பில்லியர்ட்ஸ் மேசை வரை அனைத்திலும் ஒலிவாங்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மாளிகையைச் சுற்றியிருந்த மரங்களில் கூட ஒலிவாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.

மரப் பலகைகளுக்குப் பின்னாலும், தரைப்பலகைகளுக்கு அடியிலும் செல்லும் வகையில் மறைக்கப்பட்ட வயர்கள், "எம்" அறைகள் என்று அழைக்கப்பட்ட, ஒலிவாங்கிகள் பொருத்தப்பட்டிருந்த அடித்தள அறைகளுடன் அவற்றை இணைத்திருந்தன.

இந்த அறைகள் தற்போது அருங்காட்சியகத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த அறைகளில் இருந்த 'ரகசியமாகக் கேட்பவர்கள்', ஆரம்பத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தனர். அவர்கள் இரவு, பகல் என தொடர்ந்து கைதிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டனர்.

அந்த அறைகளில் இருந்த ‘ரகசியமாகக் கேட்பவர்கள்’, ஆரம்பத்தில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தனர். அவர்கள் இரவு, பகல் என தொடர்ந்து கைதிகளின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டனர்.
படக்குறிப்பு, அந்த மாளிகையின் தரைத்தளத்திற்குக் கீழே, தளபதிகளின் தனிப்பட்ட உரையாடல்களை ஒலிப்பதிவுக் கருவிகள் பதிவு செய்தன

ட்ரென்ட் பார்க், உயர் பதவியில் இருந்த ஜெர்மானிய ராணுவ அதிகாரிகளுக்கான முக்கியக் காவல் மையமாக மாறியது. அவர்களில் பலர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பிரபுத்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தனர்.

தங்களுக்கு உரிமை உள்ளது என்று அவர்களுக்கு இருந்த எண்ணமே, கென்ட்ரிக்கின் திட்டங்களுக்கு அவர்களை எதிர்பாராத வகையில் எளிதான இலக்குகளாக மாற்றியதாகத் தெரிகிறது.

சாசூனின் விலைமதிப்புமிக்க பழங்காலப் பொருட்கள் அவரது உறவினர்களால் எடுத்துச் செல்லப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அரசு வழங்கிய மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், அந்த மாளிகை தொடர்ந்து மிகவும் ஆடம்பரமான சிறைச்சாலையாகவே இருந்தது. கைதிகள் தங்களது பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையைத் தளர்த்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

ஒவ்வொரு ராணுவத் தளபதிக்கும், அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களது சொந்த ராணுவப் பணியாளர் ஒருவர் தனிப்பட்ட உதவியாளராக இருந்தார்.

அங்கு ஒரு நூலகமும் இருந்தது. பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆங்கில வகுப்புகளை நடத்தினர். அவ்வப்போது நகரத்துக்குச் செல்லவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒரு போலி பிரபு

அவர்களுக்கென தனியாக ஒரு நலவாழ்வு அதிகாரியும் இருந்தார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கற்பனையான பிரபுவான லார்ட் அபர்ஃபெல்டி என்ற அந்த கதாபாத்திரத்தை, இளம் விசாரணை அதிகாரி ஒருவர் ஏற்று நடித்தார்.

"அந்த கற்பனைப் பிரபுவுக்கு ஒரு விஸ்கி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையே வைத்திருந்தனர்" என்று சிரித்தபடி கூறுகிறார் ஃப்ரை.

அபெர்ஃபெல்டிக்கு ஹிட்லர் மீது ஒரு ரகசிய அபிமானம் இருந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், கைதிகளிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற்று ரகசியத் தகவல்களை அவர் பேச வைப்பார். அவர்கள் பேசுவது கீழே இருந்து ஒட்டுக்கேட்கும் நபர்களுக்கும் கேட்கும்.

நாஜி ஜெனரல் ஹான்ஸ்-யுர்கன் வான் அர்னிம்
படக்குறிப்பு, நாஜி ஜெனரல் ஹான்ஸ்-யுர்கன் வான் அர்னிம், மே 1943-ல் டிரென்ட் பார்க்கிற்கு வருகை தருகிறார் (புகைப்படம்: ஹாட்டன் ஹால்)

ஜெர்மனிய அதிகாரிகள் அனைவருக்கும், தாங்கள் பிடிபட்டால் தங்களது உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், ஆச்சரியமளிக்கும் வகையில், ட்ரென்ட் பார்க்கில் தங்களது உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்று அந்த ராணுவத் தளபதிகள் நினைத்ததாகத் தெரிகிறது.

"இரண்டு ராணுவத் தளபதிகளுக்கு இடையே நடந்த அற்புதமான பதிவு செய்யப்பட்ட உரையாடல் உள்ளது. அதில் அவர்கள், 'எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் நம்மை ஒட்டுக்கேட்பது தெளிவாக இல்லை. அப்படி செய்தால் நமக்குத் தெரிந்துவிடும்' என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று சிரித்தபடி கூறுகிறார் தர்லி.

"அவர்களின் தற்பெருமையையும், தங்களைப் பற்றிய அகந்தையையும் நீங்கள் திருப்திப்படுத்திவிட்டால், அவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திப்பதில்லை" என்கிறார் ஃப்ரை.

தொடர்ந்து உளவுத் தகவல்கள் கிடைத்துக் கொண்டிருந்தாலும், போர் நீடிக்க நீடிக்க, ஜெர்மன் மொழி குறித்த கல்விசார் புரிதல் மட்டுமே கொண்டிருந்த பிரிட்டிஷ் நபர்களால் ஜெர்மன் மொழியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சொற்களையும், பேச்சுவழக்குச் சொற்களையும் புரிந்துகொள்வது கடினமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து வந்த ஜெர்மன் மொழி பேசும் யூத அகதிகளைப் பணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

ரகசியமாக ஒட்டுக் கேட்பவர்

அவ்வாறு பணியில் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவர் எர்ன்ஸ்ட் லெடரர். இவர் நடிகை ஹெலன் லெடரரின் தாத்தா ஆவார்.

1939-ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து வெளியேறிய கடைசி ரயில்களில் ஒன்றில் அவர் தப்பிச் சென்றிருந்தார்.

ரகசியமாகக் கேட்கும் மற்ற அனைவரையும் போலவே, அவரும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தில் கையெழுத்திட்டிருந்தார். போர்க்காலத்தில் தான் செய்த பணியின் ரகசியத்தை அவர் இறுதி வரை காப்பாற்றினார்.

எர்ன்ஸ்ட் லெடெரர்
படக்குறிப்பு, அந்த மாளிகையின் அடித்தளத்தில், முக்கிய உளவுத் தகவல்களைச் சேகரித்த "ரகசிய ஒட்டுக் கேட்பாளர்களில்" எர்ன்ஸ்ட் லெடெரரும் ஒருவர் (புகைப்படம்: ஹெலன் லெடெரர்).

"அவர் ஹோம் கார்டில் பணியாற்றுவதாக அவரது மனைவி நினைத்திருந்தார். ஆனால், உண்மையில் அவர் ட்ரென்ட் பார்க்கில் நீண்ட நேரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்" என்று தற்போது அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து திரைப்படத்துக்கான திரைக்கதையில் பணியாற்றி வரும் அவரது பேத்தி பிபிசியிடம் கூறுகிறார்.

" 'வார் ஹீரோ இன் மை ஃபேமிலி' என்ற சேனல் 5 ஆவணப்படத்தை நான் உருவாக்கியபோதுதான், அவர் என்ன செய்தார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அந்தத் தொடரில், பிரபலங்கள் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளின் ரகசியப் போர்க்கால பதிவுகளைத் தேடி கண்டறிந்தனர்.

ட்ரென்ட் பார்க்கில் பணியாற்றிய ரகசியமாகக் கேட்பவர்கள் யாருக்கும் குறியீடுகளை உடைக்கும் மையமான பிளெட்ச்லி பார்க் குறித்து தெரியாது. ஆனால், அவர்களது அதிகாரிகளுக்கு அது தெரிந்திருந்தது. போர் முழுவதும் இந்த இரு இடங்களுக்கும் இடையே உளவுத் தகவல்கள் பகிரப்பட்டன.

1941-ஆம் ஆண்டு ட்ரென்ட் பார்க்கில், "நிக்கெபெய்ன்" (வளைந்த கால்) என்று அழைக்கப்பட்ட வழிகாட்டுதல் கற்றைகள் கொண்ட ஓர் அமைப்பு குறித்து நடந்த உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது.

இந்த அமைப்பு இரவு நேரங்களில் பறக்கும் குண்டுவீச்சு விமானங்கள், பிரிட்டிஷ் ஆயுதத் தொழிற்சாலைகளைத் துல்லியமாகக் குறிவைக்க உதவும். இந்தத் தகவலை பிளெட்ச்லி பார்க்கில் இருந்த குறியீடு உடைப்பாளர்கள் உறுதிப்படுத்தினர். அவர்கள் விமானப்படை உளவுப் பிரிவுக்குத் தேவையான தகவல்களை வழங்கி, அந்தச் சமிக்ஞைகளைத் தடை செய்ய உதவினர்.

ஹாட்டன் ஹால்
படக்குறிப்பு, அந்த வளாகத்தில், செடிகளுக்கு மத்தியிலும் மரங்களுக்குப் பின்னாலும் பதிவு செய்யும் கருவிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன (புகைப்படம்: ஹாட்டன் ஹால்)

ட்ரென்ட் பார்க்கில் இருந்து கிடைத்த மிக முக்கியமான உளவுத் தகவல், ஜெர்மனியின் ரகசிய வி-ஆயுதத் திட்டம் தொடர்பான தகவல்கள்தான்.

இந்தத் திட்டத்தின் கீழ், லண்டன் போன்ற நகரங்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் வகையில், மிகப் பயங்கரமான சக்தி வாய்ந்த வெர்கெல்டுங்ஸ்வாஃபென் (பழிவாங்கும் ஆயுதங்கள்) உருவாக்கப்பட்டு வந்தன.

15 கி.மீ. உயரத்துக்கு ஏவக்கூடிய ஒரு ராக்கெட் குறித்து நடைபெற்ற உரையாடலும், உலகின் முதல் நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணையான வி2 ராக்கெட் இருப்பதை வெளிப்படுத்திய மற்றொரு உரையாடலும் ஒட்டுக்கேட்கப்பட்டன.

வி2 ராக்கெட்டின் செயல்பாட்டு வரம்பு 300 கி.மீ. (186 மைல்கள்).

இதன் விளைவாக, பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டேவில் அமைந்திருந்த ஜெர்மனியின் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளுக்கான முக்கிய ஆராய்ச்சி மற்றும் சோதனை மையம் மீது 1943-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குண்டுவீச்சு நடத்தப்பட்டது.

ஃப்ரை தனது புத்தகத்தில் குறிப்பிடுவது போல, அந்தத் தாக்குதலின் தாக்கத்தை மிகைப்படுத்திக் கூற முடியாது.

இதனால், லண்டன் மீது முதல் வி1 ராக்கெட் ஏவப்படுவது 1944-ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வரை தாமதமானது. இது டி-டே நடவடிக்கை நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நடந்தது.

அவை அதற்கு முன்பே ஏவப்பட்டிருந்தால், டி-டே நடைபெற்றிருக்காமல் போயிருக்கலாம்.

முதல் வி2 ராக்கெட் 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி வரை லண்டன் மீது விழவில்லை.

நாஜி அட்டூழியங்கள்

ட்ரென்ட் பார்க் குழுவினர், "ஹிட்லர் மேற்கொண்டிருந்த கொடூரச் செயல்களின் அளவு குறித்த தகவல்களையும் சேகரித்தனர். அந்தத் தகவல்கள் அப்போது பரவலாக அறியப்படவில்லை" என்கிறார் அல்பானோ.

எரிக் மார்க் போன்ற ரகசியமாகக் கேட்கும் யூதர்களுக்கு, இந்தத் தகவல்களை ஒட்டுக்கேட்பது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். 1943-ஆம் ஆண்டு ட்ரெப்ளின்காவில் அவரது சொந்த பெற்றோரும் விஷவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

2020-ஆம் ஆண்டு உயிரிழந்த மார்க், ஜெர்மானியர்கள் தாங்கள் செய்த கொடூரங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவதைக் கேட்டதை நினைவுகூர்ந்தார்.

"'நான் சுமார் 1,500 பேரை கொன்றுவிட்டேன்' என்பது போன்ற விஷயங்களை அவர்கள் கூறுவார்கள்"என அவர் குறிப்பிடுகிறார்.

 'ட்ரென்ட் பார்க் ரகசியங்களின் வீடு'
படக்குறிப்பு, அந்த இடம் இப்போது 'ட்ரென்ட் பார்க் ரகசியங்களின் வீடு' என்ற பெயரில் ஒரு அருங்காட்சியகமாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது. (புகைப்படம்: ரூத் போர்டு)

இருப்பினும், இந்தத் தகவல்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதை வெளிப்படுத்த நேரிடும் என்பதால், அது போர்க்குற்றத் தீர்ப்பாயங்களில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை.

"அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசு, இந்த நடவடிக்கையின் உத்திகள், தொழில்நுட்பம் அல்லது அதன் துணிச்சலான செயல்பாடு குறித்து பரவலாகத் தெரிய வேண்டாம் என்று விரும்பியது. குறிப்பாக, ரஷ்யாவுடனான பனிப்போரின் அச்சுறுத்தல் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இது முக்கியமாகக் கருதப்பட்டது" என்கிறார் அல்பானோ.

உண்மையில், கொடூரச் செயல்களைச் செய்ததை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டவர்கள் தண்டனையிலிருந்து தப்பியது ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் கசப்பான விஷயமாகும்.

ட்ரென்ட் பார்க், ஒட்டுக்கேட்கும் மையமாக 1945-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை செயல்பட்டது.

"ட்ரென்ட் பார்க் மற்றும் அதனுடன் இணைந்த அந்த இரண்டு இடங்களும், வேறு எவரும் கவனிக்காத அல்லது இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வகையில், பனிப்போருக்கு எங்களைத் தயார்படுத்தின" என்று கூறும் ஃப்ரை, "அதன் மரபின் அளவை மதிப்பிட முடியாது. அதை நாம் இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம்"என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு