அமெரிக்கா தனது ஆயுதங்களை சீனாவுக்கு ஏன் விற்பனை செய்வதில்லை?

பட மூலாதாரம், Kevin Dietsch/Getty Images
சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்ட்யூ, கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து முன்மொழிந்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ்-க்கு அளித்த பேட்டியில் டேவிட் பெர்ட்யூ இதைத் தெரிவித்தார். கடந்த வாரம் அமெரிக்கா வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் பேசியபோது, உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாகவும், சீனாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து சில ஆயுதங்களை வாங்குவதில் விருப்பம் உள்ளதா என்று கேட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், டேவிட் பெர்ட்யூவின் இந்தப் பேட்டிக்குப் பிறகு, சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்காவுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.
சீனாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை அமெரிக்கச் சட்டம் தடை செய்துள்ளதாகவும், சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆயுத விற்பனை முன்மொழிவுக்கும் தைவானுக்கும் உள்ள தொடர்பு

பட மூலாதாரம், Getty Images
பெர்ட்யூவின் பேட்டிக்குப் பிறகு, தைவானுக்கான 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தற்காப்புக்காக தைவானுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ளது.
ஆனால், அமெரிக்கச் சட்டத்தின்படி சீனாவுக்கு ஆயுதங்களை வழங்க முடியாத நிலையில், சீனாவுக்கே ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூற்றை அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
சீனா, தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவது சீனாவுக்கு நீண்டகாலமாக கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. இதற்கு சீனா பலமுறை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்காவை நம்பியிருப்பது அல்லது ராணுவ நடவடிக்கையின் மூலம் சுதந்திரம் பெற முயற்சிப்பது "முற்றுச்சந்துக்குச் செல்வது போன்றது" என்று தைவானை சீனா எச்சரித்தது.
ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்தின் தகவல்படி, கடந்த டிசம்பரில் டிரம்ப் தைவானுக்கு 11.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், மேலும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முடிவை நிறுத்தி வைத்துள்ளார்.
சீனாவுடன் பேரம் பேசுவதற்கான "முக்கியமான நடவடிக்கை" என்று டிரம்ப் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
பிரிட்டனின் கார்டியன் நாளிதழ், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கா தைவானை பாதுகாக்குமா என்ற கேள்வியில், அமெரிக்கா நீண்டகாலமாக "மூலோபாயத் தெளிவின்மை" என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள தைவான் உறவுகள் சட்டத்தின்படி, தைவானின் தற்காப்புக்குத் தேவையான போதுமான ராணுவ உபகரணங்களை அமெரிக்கா வழங்க வேண்டும்.
கடந்த வாரம் வாஷிங்டனில் டிரம்பை சந்தித்தபோது, "தைவான் (தனிநாடாக) சுதந்திரம் பெறுவதை" எதிர்க்க வேண்டும் என்று டிரம்பிடம் ஜின்பிங் வலியுறுத்தினார்.
பெர்ட்யூவின் பேட்டிக்கு முன்னதாக, தைவானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் சென் மிங்-சி, சீனாவிடம் இருந்து நிலவும் தீவிரமான ராணுவ அச்சுறுத்தல் குறித்து பேசியிருந்தார்.
தைபேயில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தைவான் நீரிணையின் நிலைமை தீவிரமாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து கொண்டிருக்கலாம். ஆனால், தனது ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்காக சீனா தொடர்ந்து அதிக வளங்களை செலவிட்டு வருகிறது. இத்தகைய சூழலில், எங்களது தற்காப்புத் தேவைகளை அமெரிக்கா நன்கு புரிந்துகொண்டுள்ளது." என்றார்.
சீனாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தடை தொடர்பான சட்டம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தியானன்மென் சதுக்கத்தில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீதான சீன அரசு நடவடிக்கையைத் தொடர்ந்து, சீனாவுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் தடை விதித்தார்.
அதன் பின்னர், அமெரிக்க நாடாளுமன்றம் இந்தக் கட்டுப்பாடுகளை நிரந்தரமாகச் சட்டமாக்கியது. 1990ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுச் சட்டம் ( PL) 101-246 சட்டத்தின் பிரிவு 902 மூலம் அதன் வரம்பையும் விரிவுபடுத்தியது.
இந்தச் சட்டத்தின்கீழ், அமெரிக்காவின் அமெரிக்க ஆயுதத் தளவாடப் பட்டியலில் (US Munitions List) இடம்பெறும் பாதுகாப்பு சார்ந்த பொருட்கள் மற்றும் பாதுகாப்புச் சேவைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, குற்றத் தடுப்பு உபகரணங்கள் மற்றும் சில செயற்கைக்கோள்களுக்கும் இந்தத் தடை பொருந்துகிறது.
உலகின் மிகப்பெரிய ஆயுத விற்பனை நாடு அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
சிஎன்என் செய்தியின்படி, அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது. அமெரிக்க ஆயுதங்களுக்கு ஐரோப்பா மிகப்பெரிய சந்தையாக உள்ளது.
"2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 43 சதவிகிதமாக இருந்தது. உலகின் இரண்டாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளரான பிரான்ஸின் பங்கை விட இது நான்கு மடங்குக்கும் அதிகம்" என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய தரவுகளை மேற்கோள் காட்டி சிஎன்என் தெரிவித்துள்ளது.
2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 43 சதவிகிதமாக இருந்தது. உலகின் இரண்டாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளரான பிரான்சை விட இது நான்கு மடங்குக்கும் அதிகமாகும்.
SIPRI அறிக்கையின்படி, 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 35 சதவிகிதமாக இருந்தது.
கடந்த பத்தாண்டுகளில் ஐரோப்பா அமெரிக்க ஆயுதங்களைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளதையும் இந்த அறிக்கை காட்டுவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், (குறிப்பாக 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா யுக்ரேனை தாக்கியதைத் தொடர்ந்து), ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகள் இறக்குமதி செய்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை.
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த விகிதம் பாதிக்கும் சற்று அதிகமாக இருந்தது.
இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக, அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியில் மத்திய கிழக்கைக் காட்டிலும் ஐரோப்பிய பிராந்தியத்துக்குச் சென்ற ஆயுதங்களின் அளவே அதிகமாக இருந்தது என்று SIPRI தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, யுக்ரேன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்து பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்கியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































