'10 நிமிட பேச்சு, காத்திருந்த இளைஞர்கள்' - திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலுடன் பிரசாரமும் செய்த விஜய், தி.மு.க, பா.ஜ.க என இரண்டையும் விமர்சித்துப் பேசினார்.
கடும் வெயிலில் த.வெ.க தலைவரைப் பார்ப்பதற்கு மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.
களத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?
இந்தத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய், சென்னையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
மார்ச் 30 ஆம் தேதியன்று பெரம்பூரில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் விஜய்.
கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
அங்கிருந்து கொளத்தூருக்கு அவர் செல்ல முயன்றபோது அதிகளவில் மக்கள் திரண்டதால் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வில்லிவாக்கத்திலும் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் 'விஜயின் பிரசாரத்தில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் வாகனங்களை தடையின்றி செல்வதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் காவல்துறை எடுக்கவில்லை' எனக் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையத்தில் தவெக புகார் அளித்தது.

'கட்டுப்பாடுகள்'
இந்தநிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப்ரல் 2-ஆம் தேதியன்று த.வெ.க தலைவர் விஜய் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
விஜய் வருகையையொட்டி திருச்சிக்கு பிபிசி தமிழ் சென்றது. மாநகர் முழுவதும் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
த.வெ.க தலைவர் விஜயின் வாகனம் வரும் பாலக்கரை பிரதான சாலையின் இருபுறமும் மக்கள் அதிகளவில் கூடியிருந்தனர். பிரசாரக் கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் வேலையில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
சில இடங்களில் வழிகள் அடைக்கப்பட்டு தடுப்பரண்கள் போடப்பட்டிருந்தன. இதனால் பிரசார இடத்தை நெருங்க முடியாமல் மக்கள் தவித்ததை நேரில் பார்க்க முடிந்தது.


'விஜய் தான் முக்கியம்.. வெயில் அல்ல'
சுமார் 11.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு த.வெ.க தலைவர் விஜய் வந்தார். அடுத்து, அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த மரக்கடை எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் உள்ள தெருக்களில் த.வெ.க தொண்டர்களும் பொதுமக்களும் அதிகளவில் கூடிவிட்டனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்த சம்பவத்துக்குப் பிறகு த.வெ.க நடத்தும் பிரசாரக் கூட்டங்களுக்கு காவல்துறை தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 'குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் யாரும் கூட்டத்துக்கு வரவேண்டாம்' என த.வெ.க தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அதையும் மீறி திருச்சி கூட்டத்துக்கு குழந்தைகளுடன் சிலர் வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
"குழந்தைகளை அழைத்து வருவது சரியா?" என அவர்களிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"தலைவரைப் பார்ப்பதே பெரிய விஷயம். அவரைப் பார்ப்பது முக்கியமாக இருப்பதால் வெயில் பொருட்டாக தெரியவில்லை. தவிர, ஒருநாள் வெயிலைத் தாங்குவதால் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் கூறினார், திருச்சியை சேர்ந்த ஷர்மிளா.
"குழந்தைகளைக் கூட்டி வரக்கூடாது எனக் கூறியுள்ளனர். குழந்தைகளும் விஜயைப் பார்க்க விரும்புகின்றனர். இங்கு பாதுகாப்பு இருப்பதால் பயமில்லாமல் கூட்டி வந்துள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
பிரசாரக் கூட்டம் நடக்கும் இடத்தில் குடிநீர் உள்பட போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் ஷர்மிளா கூறினார்.

மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை முன்பாக சுமார் 12.30 மணியளவில் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், காலை எட்டு மணிக்கே இந்த இடத்துக்கு தான் வந்துவிட்டதாகக் கூறுகிறார், திருச்சி சமயபுரத்தில் வசிக்கும் சிநேகா.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அவர் என்ன பேசுவார் என்பதைக் கேட்க வந்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என விஜய் கேட்கிறார். இதுவரை எத்தனையோ பேர் ஆட்சி செய்துள்ளனர். இவர் என்ன செய்யப் போகிறார் என்பது முக்கியமானது" என்கிறார்.

'மரக்கிளையில் ஏறிய தொண்டர்கள்'
திருச்சி கிழக்கு தொகுதியில் வசிக்கும் ஹரிபிரசாத், "எங்களுக்காக விஜய் அரசியலுக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் தான் எனக்கு ஓட்டு. இந்தமுறை அவருக்கு ஓட்டுப் போடப் போகிறேன்" எனக் கூறுகிறார்.
திருச்சி உறையூரில் வசித்து வரும் கவிதா, விஜயைப் பார்ப்பதற்காகவே பிரசார இடத்துக்கு வந்துள்ளார்.
"தேர்தலில் விஜய்க்கு யாரும் போட்டியில்லை. அவர் திருச்சி கிழக்கில் போட்டியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், இந்தத் தொகுதியில் எனக்கு ஓட்டு இல்லை. அதில் வருத்தம் தான்" என்கிறார்.
பிரசார இடத்துக்கு த.வெ.க தலைவர் விஜய் வருவதற்கு முன்னதாக கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறை பெரிதும் சிரமப்பட்டது.
விஜயை அருகில் இருந்து பார்க்கும் ஆர்வத்தில் சிலர் மரக் கிளைகளில் ஏறினர். பாழடைந்த கட்டடத்தின் மீதும் ஏற முயன்றனர்.
அவர்களை காவல்துறை எச்சரித்து வெளியேற்றியது. சிலர் தீயணைப்பு வாகனத்தின் மேல் ஏறுவதற்கு முயற்சித்தனர். அவர்களை தீயணைப்புத் துறை அலுவலர்கள் வெளியேற்றினர்.
வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு பிரசார இடத்துக்கு விஜய் வந்தபோது அவருடன் ஏராளமான த.வெ.க தொண்டர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்டம் அதிகப்படியான முன்னேறியதால் அங்கிருந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்வதற்கு பலரும் சிரமப்பட்டனர். இதன்பிறகு பிரசார வேனில் நின்றபடி சுமார் 10 நிமிடங்கள் வரை விஜய் பேசினார்.

பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு

பிரசாரத்தில் விஜய் பேசியது என்ன?
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு மத்திய மாநில அரசுகள்தான் காரணம் என அவர் விமர்சித்தார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அறிவித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள் என ஒரு பட்டியலை வாசித்தார்.
அமைச்சர் கே.என்.நேருவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய விஜய், "இங்கு ஒரு மந்திரி இருக்கிறார். நகராட்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்துள்ளார்" எனக் கூறினார்.
"100 சதவீதம் நியாயமான ஓர் ஆட்சியை நாங்கள் கொடுப்போம்" எனக் கூறிய அவர், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன்?" எனக் கூறினார்.
கரூர் சம்பவம், தனது படமான ஜனநாயகன் வரை பல சூழ்ச்சிகள் நடந்ததாகப் பேசிய விஜய், "உங்களுடன் சேர்த்து எனக்கும் நீதி வேண்டும்" என குறிப்பிட்டார்.
தனது பேச்சில் தி.மு.க, பா.ஜ.க என இரண்டு கட்சிகளையும் அவர் விமர்சித்தார். "தி.மு.கவையும் நம்ப வேண்டாம். பா.ஜ.கவையும் நம்ப வேண்டாம். இருவரும் வேறு வேறு கூட்டணிகள் கிடையாது. இருவரும் ஒரே கூட்டணிதான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" எனப் பேசினார்.
அவர் பேசி முடித்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் சிலர் மயக்கமடைந்ததாகக் கூறி ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர்களைப் பற்றிய விவரம் எதுவும் வெளியாகவில்லை. சிலர் காணாமல் போய்விட்டதாகவும், சிலரின் செல்போன்கள் காணாமல் போனதாகவும் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது.
பிரசார இடத்தில் ஏராளமான காலணிகளும் காலி குடிநீர் பாட்டில்களும் சிதறிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்களும் த.வெ.க தொண்டர்களும் ஈடுபட்டனர்.
விஜயின் பேச்சு குறித்து பாலமுருகன் என்ற நபரிடம் பிபிசி தமிழ் பேசியது. "இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் த.வெ.க தலைவர் உறுதியாக இருக்கிறார். தி.மு.க, அ.தி.மு.க மாறி மாறி ஆட்சியமைந்தாலும் எதுவும் மாறவில்லை. இந்தமுறை மாறும் என நம்புகிறோம்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































