முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம்பெறும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்? விசிக, முஸ்லிம் லீக் நிலை என்ன?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றபோது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 16-ஆம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்.
"காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோரை தமிழ்நாடு அமைச்சரவையில் இணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்," என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினரின் ஆதரவை தவெக பெறக்கூடாது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.
கடந்த திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தவெக ஆட்சி அமைப்பதற்காக மட்டும் தான் ஆதரவு நல்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சி, மறு தேர்தல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துவிட்ட சூழலில் இரண்டே இடங்களில் விசிகவால் ஆட்சி அமையாமல் போய்விட்டது என்கிற குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆதரவு தெரிவிக்கிறோம் எனக் கூறிவிட்டேன். திமுக கூட்டணியில் தொடர்கிறோம், வெளியிலிருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம்." என்றார்.
அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு - ஆதவ் அர்ஜுனா

இந்தச் சூழலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார். சமூக நீதி அடிப்படையில் இயங்கக்கூடிய தலைவர்களும் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். வெளியில் இருந்து ஆதரவு என்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். அமைச்சரவையில் பங்கு பெற விசிகவை அழைக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அது தான். முஸ்லிம் லீக் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என அழைக்கிறோம். இடதுசாரி கட்சிகளும் வர வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். குடும்பமாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்." என்று கூறினார்.
அதிமுக உறுப்பினர்கள் இணைவார்களா என்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் திமுக - அதிமுக உடன் இணைந்து சூழ்ச்சி செய்தது. திமுகவை எதிர்க்க தான் அதிமுக தொடங்கப்பட்டது. அதிகாரத்துக்காகவும் அமைச்சரவைக்காகவும் ஆதரவு தரவில்லை என சிவி சண்முகம் கூறியிருக்கிறார். தோழமையுடன் தான் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்கள். யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமை. அவர்களின் அடுத்த செயல்திட்டத்தை அவர்களே அறிவிப்பார்கள். சட்ட சிக்கல் வந்தால் அவர்கள் சந்திப்பார்கள்." என்று கூறினார்.
"முடிவு நாளை அறிவிக்கப்படும்" - முஸ்லிம் லீக்
இந்த நிலையில் தவெகவின் அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், அது தொடர்பாக ஆலோசனை செய்து நாளை காலை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், K.Selvaperunthagai/FB
தவெகவிடமிருந்து வெளிப்படையாக அழைப்பு வந்ததை உறுதிப்படுத்திய விசிக தலைவர் திருமாவளவன், "ஆதவ் அர்ஜுனாவின் அழைப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலே அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி தோழர்கள் பேசினார்கள். அப்போதைக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறினோம். தற்போது அழைப்பு வந்துள்ள நிலையில் அதனை ஏன் ஏற்கவில்லை என்கிற கேள்வி எழக்கூடும். முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி அறிவிப்போம்." என்றார்.
திருமாவளவன் கூறியது என்ன?
அதன் பின்னர் அசோக் நகரில் இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "அதிமுகவின் ஒரு பிரிவுக்கு அமைச்சரவையிலே ஆதரவு தரப்படுமானால் எங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்று 2, 3 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தேன்.
தற்போது அத்தகைய முயற்சிகள் இல்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அமைச்சரவையில் அதிமுக இடம்பெற வாய்ப்பில்லை என தவெக தரப்பிலிருந்து தனக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் அமைச்சரவை தொடர்பாக பேசினர்.
அப்போது பேசிய வீரபாண்டியன் இடதுசாரிகள் மற்றும் விசிக வெளியிலிருந்து ஆதரவு என்கிற ஒரே முடிவை எடுத்திருந்தோம், "மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு, இன்னொரு தேர்தல் திணிக்கப்படக்கூடாது, குறிப்பாக ஆளுநர் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் ஆதரவு தெரிவித்தோம். எங்கள் ஆதரவே அவர்களுக்குப் போதும். வேறு சிந்தனைகள் தேவையில்லை. இது குறித்து முதலமைச்சர் தான் சிந்திக்க வேண்டும்." என்றார்.
விசிகவுக்கு அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பாக பதிலளித்த பெ.சண்முகம், "நாங்கள் கூட்டாக சேர்ந்து தான் முடிவெடுத்திருக்கிறோம். ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்கிற யோசனை விசிகவுக்கு இருந்தால் அவர்களுக்கு தான் முடிவு செய்ய வேண்டும். கண்டிப்பாக எங்களிடம் கலந்தாலோசிப்பார்கள், எங்களின் முடிவையே அவர்களும் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அவர்கள் நினைத்தால் அதில் தவறில்லை." என்றார்
அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்வோம் என முன்னர் அறிவித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூட்டாக தெரிவித்தனர்.
அதிமுகவின் ஒரு தரப்பு எம்.எல்.ஏக்கள் தவெக அமைச்சரவையில் இணைவது பற்றிய ஊகங்கள் நிலவி வரும் சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ-வான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "அதிமுகவின் வளர்ச்சிக்கு அவர் எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ளவில்லை. தன்னுடைய சுயநலத்திற்காக, சுய லாபத்துக்காக யாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டோமா அவர்களுடன் இணைந்து இன்று அமைச்சர் பதவி என்கிற சுகத்துக்காக இந்த இயக்கத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்." எனத் தெரிவித்தார் .
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், "அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுக - அதிமுகவைத் தொடர்புப்படுத்தி முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுக்கிறோம்." எனத் தெரிவித்தார்.
"மூன்று கட்சிகளுக்கும் இது சவாலான சூழல்" மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்
தற்போதைய சூழல் அனைத்து தரப்பினருக்கும் சவாலான ஒன்றாக இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தவெகவிற்கு நிலையான ஆட்சி தேவைப்படுகிறது. அதனால் ஆதரவு தெரிவித்த கட்சிகள் வெளியில் இருப்பதைவிட அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்கும் என விஜய் எண்ணியிருக்கலாம்.
அதிகாரப் பகிர்வு என்பது விசிகவிற்கு நீண்டகால லட்சியமாக இருக்கிறது. அதனால் அவர்கள் இதை வரவேற்க வேண்டிய சூழலை காலம் ஏற்படுத்தியிருக்கிறது. அப்படியே இருந்தாலும், மத்திய பாஜக அரசை விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார், கூட்டணி கட்சிகள் அதை எவ்வாறு அணுகப் போகிறார்கள் என்பதைப் பொருத்தே எதிர்கால கூட்டணி அமையும்," என்றார்.
அதிமுக உறுப்பினர்கள் இணைவதில் உள்ள சிக்கல்களை விளக்கிய அவர், "அதிமுக உறுப்பினர்களின் எதிர்காலம் பேரவைத் தலைவரிடம்தான் உள்ளது. அவர் முன் இரண்டு மனுக்கள் உள்ளன. அவர் எப்போது, என்ன முடிவெடுக்கப் போகிறார், அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிமன்றத்தை அணுகும் சூழல் உருவானால் அப்போது என்ன நடக்கும் என பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்த சிக்கல்கள் தீராமல் அமைச்சரவையில் இணைப்பது பற்றி யோசிக்க தயங்குவார்," என்று குறிப்பிட்டார்.
திமுகவிற்கான சவால்களைக் குறிப்பிட்ட மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "மறுபுறம் அமைச்சரவையில் இணைந்தால் விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர முடியாது. தற்போதைய தோல்வி மற்றும் கூட்டணி கட்சிகளின் விலகலை திமுக எவ்வாறு கையாளப் போகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். இது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்குத்தான் சவால். அடுத்த தேர்தலுக்குள் திமுக என்ன செய்யப் போகிறது என்பதைப் பொருத்தே கூட்டணி கணக்குகள் அமையும்," எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































