வாகனங்கள், இயந்திரங்களுக்கு உள்ளே தஞ்சம் அடையும் பாம்புகள் - என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம், ஹைதராபாத்தில் உள்ள ஓர் உணவு விடுதியில் இருந்த மீன் தொட்டிக்குள் சாரைப் பாம்பு இருப்பதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக்ஸ் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களை உதவிக்கு அழைத்தனர்.
கோடை வெப்பத்துக்கு நடுவில் இளைப்பாறுவதற்குக் குளிர்ச்சியான இடம் தேடி கட்டடத்துக்குள் நுழைந்த பாம்பு, மீன் தொட்டிக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று இந்தப் பாம்பை மீட்டது குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடந்த ஜனவரி மாதம் மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தரைத்தளத்தில், சாரைப் பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
அங்கிருந்த வாஷிங் மிஷினுக்குள் தஞ்சம் புகுந்திருந்த அந்தப் பாம்பு, நகர்ப்புற காட்டுயிர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இது தொடர்பாக வெளியான செய்தி கூறுகிறது.
இப்படியாக, வீடுகளில் உள்ள மறைவான சந்து, பொந்துகளில், வாஷிங் மிஷின் போன்ற இயந்திரங்களுக்குள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்குள், மீன் தொட்டியில், பயன்படுத்தப்படாமல் குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு அடியில் எனப் பல்வேறு இடங்களில் மக்கள் பாம்புகளைப் பார்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இப்படியான சூழ்நிலைகளில் அதைப் பார்க்கும் எவருக்குமே உடனடியாக அச்சம் தொற்றிக்கொள்ளும்.
எனவே, அந்த அச்சத்தைப் போக்கவும், இயற்கைச் சூழல் குறித்தான அடிப்படை புரிதலைப் பெறுவதற்கு, பாம்புகள் எதற்காக இப்படியான இடங்களுக்குள் வருகின்றன, அப்படி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மனித குடியிருப்புகளுக்குள் பாம்புகள் புகுவது ஏன்?
இந்த ஆண்டின் தொடக்கத்தில், காட்டுயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளையின் (WNCT) ஆய்வாளர்கள் வெளியிட்ட ஓர் ஆய்வில், வடக்கு கோயம்புத்தூரில் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பதிவான 2,318 பாம்பு மீட்பு சம்பவங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில், குப்பைக் குவியல்கள், உட்புற அறைகள், சேமிப்புக் கிடங்குகள், இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பான மறைவிடங்களை "புகலிடங்களாக" கருதி பாம்புகள் நாடுவதாகக் கண்டறியப்பட்டது.
ஆனால், அவை மக்களைத் "தாக்குவதற்காக" குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதில்லை என்றும், பெரும்பாலும் வாழ்விடம், பாதுகாப்பு, உணவு, ஈரப்பதம், பொருத்தமான வெப்பநிலை ஆகியவற்றை நாடியே இத்தகைய சூழலுக்குள் வந்து அவை சிக்கிக் கொள்வதாகவும் காட்டுயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், UGC
குறிப்பாக, கோடை வெப்பம், பருவமழை, வாழ்விடச் சீர்குலைவு போன்ற பல்வேறு காரணங்களால் சமீப காலங்களில் குடியிருப்புகளுக்குள் பாம்புகள் தென்படுவது அதிகரித்து வருகிறது.
வாகனங்களுக்கு அடியிலும், மீன் தொட்டிகளுக்கு அருகிலும், வாகன நிறுத்துமிடங்களிலும், விறகுக் குவியல்களுக்கு அடியிலும், குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பின்னாலும், வீடுகளின் ஒழுங்கற்ற மூலைகளிலும் பாம்புகள் அடிக்கடி காணப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் ஊர்வனவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாம்புகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் வேண்டுமென்றே ஊடுருவுவதில்லை என்று கூறும் காட்டுயிர் ஆர்வலரும் பாம்பு மீட்பு செயற்பாட்டாளருமான சாம்சன் கிருபாகரன், "அவை பொதுவாக மனிதர்களுடனான மோதலைத் தவிர்க்கவே விரும்புகின்றன" என்று வலியுறுத்துகிறார்.
காட்டுயிர் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவை தாங்கள் கவனிக்கப்படாமல் இருக்க ஏதுவான, மறைவான இடங்களையே விரும்புகின்றன.
ஆனால், அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் அருகி வருவதன் விளைவாகவும், அத்தகைய மறைவிடங்களை மனித குடியிருப்புகளில் இருக்கும் கட்டமைப்புகள் வழங்குவதாலும்தான் பாம்புகள் பெரும்பாலும் குடியிருப்புகளுக்குள் வருகின்றன என்று கூறுகிறார் சாம்சன் கிருபாகரன்.

பட மூலாதாரம், UGC
இதுகுறித்து மேலும் விரிவாக விளக்கிய அவர், "நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், மீன் தொட்டிகள் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் குளிர்ச்சியான இடங்கள், நிழலான மற்றும் மறைவான சூழலைத் தரும் சேமிப்புக் கிடங்குகள், ஒழுங்கற்ற நிலையில் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டுமானத் தளங்கள், தேங்காய் அல்லது குப்பைக் குவியல்கள் போன்றவை பாம்புகளுக்குத் தேவையான சிறந்த தங்குமிடங்களை உருவாக்குகின்றன.
இரைகள் கிடைக்கும் அளவு, தமக்கு ஏற்புடைய வாழ்விடச் சூழல், உடலுக்கு ஏதுவான வெப்பநிலை ஆகிய காரணிகளில், இத்தகைய இடங்கள் பாம்புகளுக்குச் சாதகமான சூழலை நல்குவதே, அவை இவற்றை நாடி வருவதற்கான காரணம்" என்றார்.
ஆய்வுகளின்படி, வெப்பம் மிகுந்த காலநிலையில், குளிர்ச்சியான மற்றும் நிழலான இடங்களையும், குளிர்ச்சியான காலங்களில் உடலுக்கு இதமான, சூடான இடங்களையும் பாம்புகள் நாடுகின்றன.
உணவு, மறைவான மற்றும் பாதுகாப்பான வாழ்விடச் சூழல் ஆகியவற்றுடன் சேர்த்து, இத்தகைய வெப்பநிலை சூழ்நிலைகளும் பாம்புகள் மனித குடியிருப்புகளைத் தேடி வருவதற்கான காரணங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகிறார் சாம்சன்.

பட மூலாதாரம், UGC
பாம்புகள் வாகனங்களின் உள்ளே புகுந்துவிடுவது ஏன்?
வாகனங்கள், பாம்புகள் தேடும் பல விஷயங்களை இயல்பாகவே வழங்குகின்றன. அதில் முதலாவதாக, வாகனங்களின் அடிப்பகுதி நிழலையும் இருளையும் வழங்குகிறது. வெப்பம் மிகுந்த பிற்பகல் நேரத்தில், ஒரு காருக்கு அடியில் உள்ள தரை, அதைச் சுற்றியுள்ள பரப்புகளைவிட சற்று குளிர்ச்சியாக இருக்கும். கடும் வெப்பத்தில் இருந்து தப்ப முயலும் பாம்புகளுக்கு இது ஏதுவான இடமாக அமைகிறது.
இரண்டாவதாக, நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் வேட்டையாடி உயிரினங்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படக்கூடிய இடையூறுகளில் இருந்து பாதுகாப்பு வழங்குகின்றன.
"யாரேனும் பார்த்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால், அருகிலுள்ள வாகனங்களின் உள்ளே உடனடியாகப் புகுந்துவிடுவது அவற்றின் இயல்பு. டயர்கள், அச்சுகள், இஞ்சின் பகுதிகளைச் சுற்றியுள்ள குறுகிய இடங்கள் அத்தகைய எதிர்கொள்ளலைத் தவிர்க்க உதவும் பாதுகாப்பான மறைவிடங்களை வழங்குகின்றன" என்கிறார் சாம்சன் கிருபாகரன்.
அதேபோல, எலி போன்ற இரை உயிரினங்களைத் தேடியும் வாகனங்களுக்குள் பாம்புகள் வரலாம் என்று விளக்கினார் அவர்.
எலி, பெருச்சாளி, தவளை போன்றவை பல பாம்பு இனங்களின் இரைப் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பிடிக்கின்றன. அவை பெரும்பாலும் வாகன நிறுத்துமிடங்கள், நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், சேமிப்புக் கிடங்குகள் ஆகிய பகுதிகளைத் தன்வசமாக்கிக் கொள்கின்றன. இதனால், தமக்கான இரைகளைத் தேடியும் வாகனங்கள், இயந்திரங்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களுக்குள் பாம்புகள் வருவதாகக் கூறுகிறார் சாம்சன்.
கோயம்புத்தூரில் காட்டுயிர் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை மேற்கொண்ட ஆய்விலும், குறிப்பிட்ட பருவங்களில் மீட்புப் பணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும், அவை பொதுவாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட வகையிலான தங்குமிடங்கள் மற்றும் இயந்திரப் பகுதிகளை நாடி, ஆக்கிரமித்துக் கொள்வதும் உறுதி செய்யப்பட்டது.
இப்படியான இடங்களை பாம்புகள் நாடி வருவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்றாக சாம்சன் குறிப்பிடுவது, வாழ்விடக் குறைபாடு. அதாவது, "இயற்கையான நிலப்பரப்புகள் குறைந்து வருவதும், அவை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்களாக, குடியிருப்புகளாக மாற்றப்படுவதும், பாம்புகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதுவும், மனித குடியிருப்புகளில் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு அவற்றைத் தள்ளுகின்றன," என்று அவர் விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
வாகனங்களில் பாம்பு புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி, இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலில் பீதி அல்லது பதற்றத்துக்கு ஆட்பட்டுவிடாமல் இருப்பதை ஒருவர் உறுதி செய்ய வேண்டும்.
பெரும்பாலான பாம்புக்கடி விபத்துகள் நிகழ்வதற்குக் காரணம், எதிர்பார்க்காத சூழ்நிலையில் பாம்புகளுக்கு இடையூறு விளைவிப்பது, அச்சத்தினாலோ அல்லது அதீத தைரியத்தில் ஆபத்தை உணராமலோ அவற்றை முறையின்றி கையாள்வது, கொல்ல அல்லது சீண்ட முயல்வது போன்றவையே என்கின்றனர் நிபுணர்கள். அதோடு, பாம்புகள் மனிதர்களைத் தாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்படுவதில்லை எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, "பாம்புக்கும் தங்களுக்கும் இடையே பாதுகாப்பான ஒரு தூரத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்," என்கிறார் பாம்பு மீட்பு நிபுணரான சாம்சன் கிருபாகரன்.
அதுமட்டுமின்றி, "பாம்பைத் தொடவோ, பிடிக்கவோ கட்டாயமாக முயலவே கூடாது. நஞ்சற்ற பாம்புகள்கூட அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படும்போது தற்காப்புக்காக கடிக்கக்கூடும். முறையான பயிற்சியற்ற நபர்கள் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது, அந்த ஆபத்து அதிகரிப்பதற்கே வித்திடும்.
மீட்பு நடவடிக்கைகளின்போது பொறுமையும் அமைதியான அணுகுமுறையும் அவசியம். எனவே, அதில் நிபுணத்துவம் பெற்ற பாம்பு மீட்பர்களை உதவிக்கு அழைக்க வேண்டும் அல்லது உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உடனடியாக பாம்பு இருக்கும் பகுதியைத் தனிமைப்படுத்தி, அங்கு யாரும் நெருங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்துகிறார் சாம்சன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































