இரு அணிகளாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்தது - சி.வி.சண்முகம் நிலை என்ன?

இரு அணியாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்து - சி.வி.சண்முகம் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என இரு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக தற்போது ஒன்றிணைந்துள்ளது.

இன்று (மே 27) எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினர். பின்னர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட இருதரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்க கோரி கடிதம் வழங்கினர்.

மேலும், கொறடா விவகாரம் தொடர்பாக இருதரப்பும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கிய கடிதத்தையும் திரும்பப் பெற்றனர். ஆனால், இந்த நிகழ்வுகளில் எஸ்.பி. வேலுமணி தரப்பின் முக்கிய முகமாக இருந்த சி.வி. சண்முகம் கலந்துகொள்ளவில்லை.

இது குறித்து எஸ்.பி. வேலுமணியிடம் கேட்டபோது, சி.வி. சண்முகம் தங்களுடன் தான் இருப்பதாக கூறினார்.

அத்துடன் எஸ்.பி. வேலுமணி மற்றும் சில அதிமுக சட்டபேரவை உறுப்பினர்கள் சி.வி. சண்முகத்தை நேரில் சந்திக்க சென்றுள்ளனர்.

இதற்கிடையே, "கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை" என அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இரு அணியாக உடைந்த அதிமுக ஒன்றிணைந்து - சி.வி.சண்முகம் நிலை என்ன?

எஸ்.பி. வேலுமணி பேசியது என்ன?

"சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தோல்விக்கான காரணங்களை கண்டறிய வேண்டும், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தோம். இதனை பரிசீலித்து செயல்படுத்துவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்," என்று சட்டப்பேரவை தலைவர் உடனான சந்திப்புக்கு பிறகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி வேலுமணி கூறினார்

"எங்களுக்கு இருந்தது கருத்து வேறுபாடுதான்; பிளவு இல்லை. இன்று அந்த கருத்து வேறுபாடு நீங்கியுள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று பொதுச்செயலாளரும் கேட்டுக்கொண்டார். பதவிக்காக ஆசைப்படுகிறோம் என்று பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன. அதனை ஆளும் கட்சி தரப்பே மறுத்துள்ளது. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருங்கிணைந்துள்ளோம். அதன்படி, நாங்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் வழங்கிய இரண்டு மனுக்களையும் திரும்பப்பெற்றுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

முன்பு நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதனால், சட்டப்பேரவை மற்றும் கட்சி நிர்வாகம் என இரு நிலைகளில் அதிமுக சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது.

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை விடுத்தது. மேலும், ஆதரவு அளித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

ADMK, TVK, VIjay, CV Shanmugam, SP velumani, Thangamani

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, சி வி சண்முகம் அலுவலகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் ஒரு பகுதியினரை சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்

விஜய் ஆட்சியில் என்ன நிலை?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது.

ஆனால், ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாததால் அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் த.வெ.கவுக்கு ஆதரவளித்தன. இதன்மூலம் த.வெ.க அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க அரசுக்கு ஆதரவளித்தனர்.

இரு இடங்களில் போட்டியிட்ட முதல்வர் விஜய், ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

இந்தநிலையில் அதிமுகவை சேர்ந்த மதுராந்தகம் சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யபாமா, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கிமுத்து ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினர்.

இந்த 4 தொகுதிகளுக்கும், முதல்வர் விஜய் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு