முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி - நடப்பு சாம்பியனின் வெற்றிக்கான 5 காரணங்கள்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2026 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக நேற்று (மே 26) தரம்சாலாவில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.
நடப்பு சாம்பியனாக தொடருக்குள் நுழைந்த ஆர்சிபி, தொடர்ந்து 2வது சீசனாக முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.
முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 254 ரன்கள் விளாசியது. அந்த அணியி கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றின் மிகப் பெரிய ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக டாஸ் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. ஏனெனில், தரம்சாலாவில் நடந்த இரவு நேர போட்டிகளில் சேஸ் செய்வது எளிதாக இருந்தது. மேலும், இந்த இரு அணிகளுமே பவர்பிளேவில் பந்துவீச்சில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அணிகள் என்பதால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த சீசனில் தரம்சாலாவில் நடந்த 2 இரவு நேர போட்டிகளிலுமே 200+ ஸ்கோர்கள் வெற்றிகரமாக சேஸ் செய்யபப்ட்டிருந்தன. அதுமட்டுமல்ல, இவ்விரு அணிகள் இதற்கு முன் இந்த சீசனில் மோதிய 2 போட்டிகளிலுமே சேஸ் செய்த அணிதான் வெற்றி பெற்றிருந்தது.
இவை அனைத்துமே டாஸ் வென்று சேஸ் செய்யும் அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என்று உணர்த்தின. ஆனால், டாஸை தோற்றும், முதலில் பேட்டிங் செய்தும் ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது நடப்பு சாம்பியன். இது எப்படி சாத்தியமானது. அந்த வெற்றி சாத்தியப்பட்டதற்கான 5 காரணங்கள் என்ன?
1. ஆரம்பம் முதலே அதிரடி

பட மூலாதாரம், ANI
இந்த சீசனில் ஒவ்வொரு அணிக்கெதிராகவும் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். மொஹம்மது சிராஜ், ககிஸோ ரபாடா இருவருமே பெரும்பாலான போட்டிகளில் பவர்பிளேவின் 6 ஓவர்களையும் முடித்துக்கொண்டிருந்தார்கள். அனைவரையும் அச்சுறுத்திய அந்த பௌலர்களைக் கண்டு ஆர்சிபி பின்தங்கிவிடவே இல்லை.
முதல் பந்தில் இருந்தே தங்கள் அதிரடியைத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். போட்டியின் முதல் 4 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடித்தார் வெங்கடேஷ் ஐயர். அவர் இரண்டாவது ஓவரில் அவுட் ஆயிருந்தாலும், அதன்பிறகும் யாரும் வேகத்தைக் குறைக்கவில்லை. தேவ்தத் படிக்கல், விராட் கோலி இருவரும் அதே அணுகுமுறையைத்தான் கையில் எடுத்தார்கள்.
ரபாடா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர் விக்கெட் விழ, 7 ரன்கள் எடுக்கப்பட்டது. மற்ற 5 பவர்பிளே ஓவர்களிலுமே குறைந்தபட்சம் 10 ரன்களாவது எடுக்கப்பட்டன. அந்த 6 ஓவர்களில் மொத்தம் 12 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடித்தார்கள் ஆர்சிபி-யின் டாப் 3 பேட்டர்கள். அதில் மட்டுமே 60 ரன்கள்.
ஆர்சிபி-யின் இந்த அதிரடி ஆரம்பத்திலேயே குஜராத் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. எவ்வித தயக்கமோ, தடுமாற்றமமோ இல்லாமல் ஆர்சிபி பேட்டர்கள் ஆடியதால், தொடர்ந்து பல போட்டிகளாகக் கடைபிடித்துக்கொண்டிருந்த வழக்கத்தை மாற்றி, 5வது ஓவரில் ஜேசன் ஹோல்டரைப் பந்துவீச அழைத்தார் ஷுப்மன் கில். அங்கேயே உளவியல் ரீதியாக முதல் வெற்றியைப் பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ்.
ஹோல்டர் வீசிய 9வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தாலும், அதனால் ஆர்சிபி பின்தங்கிவிடவில்லை. அவர்களின் கேப்டன் ரஜத் பட்டிதார், குருனால் பாண்டியா இருவரும் அந்த அதிரடி அணுகுமுறையைத் தொடரவே செய்தார்கள். 11வது ஓவரில் இருந்தே அவர்கள் பவுண்டரி அடிக்க ஆரம்பித்தார்கள். 10வது ஓவரின் முடிவில் 9.9 ஆக இருந்த அந்த அணியின் ரன்ரேட், அந்த பார்ட்னர்ஷிப் உடைந்தபோது 11.61 ஆக இருந்தது. அவர்களின் அணுகுமுறை மிகப் பெரிய சாதகமாக அமைந்தது.
2. பட்டையைக் கிளப்பிய பட்டிதார்

பட மூலாதாரம், ANI
என்னதான் ஆர்சிபி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியிருந்தாலும் அவர்கள் மிகப் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டிய தேவை இருந்தது. முன்பே சொன்னதுபோல் தரம்சாலாவில் சேஸ் செய்வது எளிது. அதனால் பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த சூழ்நிலையில் எவ்வித நெருக்கடியையும் வெளிப்படுத்தாமல் ஆடினார் பட்டிதார்.
33 பந்துகளில் 99 ரன்கள் விளாசிய பட்டிதார் 5 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார். இந்த 33 பந்துகளில் அவர் ஆடியது ஒரேயொரு 'டாட் பால்' மட்டுமே. அதையும் கூட அவர் அடிக்க முயற்சி செய்தார். பந்து பேட்டில் படவில்லை என்றாலும் கூட 'பை' மூலம் ரன் எடுத்துவிட்டார். ஆக, அவர் சந்தித்த ஒரு பந்தில் கூட ஆர்சிபி அணிக்கு ரன் வராமல் இல்லை.
தொடர்ச்சியாக அவர் ரன் அடித்துக்கொண்டே இருந்ததால், எந்த இடத்திலும் ஆர்சிபி தேங்கிவிடவில்லை. அதுமட்டுமல்லாமல், பட்டிதார் களமிறங்கியதும் கில்லின் திட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பட்டிதார் ஸ்பின்னை மிகச் சிறப்பாக விளையாடுவார் என்பதால் ரஷீத் கானின் மூன்றாவது ஓவரைத் தாமதப்படுத்தியது. வேகப்பந்துவீச்சாளர்கள் வந்தபோது குருனால் பாண்டியாவும் சற்று எளிமையாக ஆடியதால், இரண்டு பக்கம் இருந்தும் ரன்கள் வரத் தொடங்கின.
அதேசமயம், கில் வேகப்பந்தை வைத்து பட்டிதாருக்கு எதிராக செயல்பட்டாலும், அதையும் மிகச் சிறப்பாகக் கையாண்டார் ஆர்சிபி கேப்டன். லெக் சைடில் மட்டுமல்லாமல், ஆஃப் சைடிலும் கூட வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பறக்கவிட்டார். 17வது ஓவரில் ரபாடா வீசிய பந்தை அவர் எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த ஷாட்டை வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி, ஆரோன் ஃபின்ச் போன்ற முன்னாள் வீரர்கள் பலரும் 'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த ஷாட்' என்று வர்ணித்தார்கள்.
அப்படியொரு ஃபார்மில் இருந்த பட்டிதார், கடைசி வரை ஒவ்வொரு பந்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி 254 என்ற பிரம்மண்டாமான ஸ்கோர் வருவதற்குக் காரணமாக அமைந்தார்.
3. குஜராத் டைட்டன்ஸின் ஃபீல்டிங்
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஃபீல்டிங் அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்தது.
13வது ஓவரில் இரண்டு முறை ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பட்டிதாருக்கு டாப் எட்ஜ் ஆகி கீப்பருக்குப் பின்னால் சென்றது. ஆனால், வெகுதூரம் ஓடிச் சென்ற கீப்பர் பட்லர் மற்றும் கெஜ்ரோலியா இருவராலும் பிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், ANI
அதே ஓவரின் மூன்றாவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ககிஸோ ரபாடா. அப்போது பட்டிதார் 20 ரன்கள் தான் எடுத்திருந்தார். அதன்பிறகு அவரை டைட்டன்ஸால் தடுக்க முடியவில்லை.
கேட்ச் வாய்ப்புகள் மட்டுமல்ல, பல தருணங்களில் பந்தைத் தடுப்பதிலும் கூட தவறுகள் செய்தனர். வாஷிங்டன் சுந்தர் ஓவர்த்ரோ மூலம் கூடுதலாக 4 ரன்கள் கொடுத்தார். குல்வந்த் கெஜ்ரோலியா தடுக்கவேண்டிய 2 பவுண்டரி வாய்ப்புகள் எல்லையைக் கடக்கவிட்டார். இவைபோல் நிறைய வாய்ப்புகளை ஃபீல்டிங்கில் தவறவிட்டது குஜராத் டைட்டன்ஸ்.
தோல்விக்குப் பிறகு பேசிய ஷுப்மன் கில் கூட ஃபீல்டிங் தங்கள் வாய்ப்புகளைக் கடினமாக்கியதைக் குறிப்பிட்டார். "12 அல்லது 13-வது ஓவர் வரை நாங்கள் நன்றாகவே விளையாடினோம் என்று நினைக்கிறேன். ஆனால், எங்கள் ஃபீல்டிங் சிறப்பாக இல்லை. ஓரிரு கேட்சுகளைக் கோட்டை விட்டோம். அதன் பிறகு, தரையோடு வந்த பந்துகளைத் தடுப்பதும் சரியாக அமையவில்லை. இதைப் பற்றி நாங்கள் கண்டிப்பாக அணி கூட்டங்களிலும், பயிற்சி ஆட்டங்களிலும் பேசத்தான் செய்கிறோம். ஆனால், நான் சொன்னது போல் இது எங்களுக்கான நாளாக அமையவில்லை. நல்ல உத்வேகம் இருந்தது, ஆனால் அழுத்தமான சூழ்நிலைகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை." என்றார் கில்.
4. பாதகமாய் அமைந்த டைட்டன்ஸின் முடிவு
இந்தப் போட்டியின்போது யாரும் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்தது குஜராத் டைட்டன்ஸ். அர்ஷத் கானுக்கு பதிலாக குல்வந்த் கெஜ்ரோலியா இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்டார். இதுவரை இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத கெஜ்ரோலியா, அர்ஷத் கானுக்குப் பதிலாக திடீரென்று குவாலிஃபயர் போட்டியில் சேர்க்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
13வது ஓவரில் முதல் முறையாகப் பந்துவீசிய கெஜ்ரோலியா அந்த ஓவரில் 3 ரன்கள் தான் கொடுத்தார். லென்த் மற்றும் வேகத்தை அவர் மாற்றிக்கொண்டே இருந்ததால், பட்டிதார், குருனால் இருவராலும் பெரிய ஷாட்கள் அடிக்க முடியவில்லை.
ஆனால், அவருடைய 2வது ஓவர் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றியது. அவர் 15வது ஓவரை வீசவந்தபோது ஆர்சிபி அணியின் ரன்ரேட் 10-ஆக இருந்தது. அந்த ஓவரில் 2 நோ பால்கள் வீசினார் கெஜ்ரோலியா. குருனால் 2 பவுண்டரிகளும், பட்டிதார் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடிக்க, அந்த ஓவரில் 28 ரன்கள் எடுக்கப்பட்டன. ஒரே ஓவரில் அந்த அணியின் ரன்ரேட் 11.2 ஆக உயர்ந்தது.
அதே உத்வேகத்தோடு ரஷித் கானின் அடுத்த ஓவரிலும் ஆர்சிபி பேட்டர்கள் 3 சிக்ஸர்கள் விளாசினார்கள். 16வது ஓவர் முடிவில் ரன்ரேட் 11.81 ஆக அதிகரித்தது. அதன்பின் அது குறையவே இல்லை. கெஜ்ரோலியாவின் அந்த ஓவர், ஆர்சிபி இன்னிங்ஸுக்குத் தேவையான எரிபொருளை அவர்களுக்குக் கொடுத்துவிட்டது.

பட மூலாதாரம், ANI
5. சாதகமாய் அமைந்த ஆர்சிபி-யின் முடிவு
குஜராத் எடுத்த முடிவு அவர்களுக்குப் பாதகமாக அமைய, ஆர்சிபி எடுத்த முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அவர்கள் தங்கள் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் ரொமாரியோ ஷெபர்ட்டுக்குப் பதிலாக ஜேக்கப் டஃபியை சேர்த்தார்கள். 3 வெளிநாட்டு வீரர்களை மட்டும் பிளேயிங் லெவனில் சேர்த்திருந்தார்கள். அதனால், 4 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் + குருனால் பாண்டியா என 5 பௌலிங் ஆப்ஷன்கள் அவர்கள் பிளேயிங் லெவனிலேயே இருந்தன.
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் பந்துவீசும்போது ஸ்பின்னர் (சுயாஷ் ஷர்மா) அல்லது வேகப்பந்துவீச்சாளர் (ரொமாரியோ ஷெபர்ட் அல்லது அபிநந்தன் சிங்) என யாரைவேண்டுமானாலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களால் சேர்க்க முடிந்திருக்கும்.
ஒருவேளை, பேட்டிங்கில் கூடுதலாக சில விக்கெட்டுகள் இழந்திருந்தாலும் ரொமாரியோ ஷெபர்டைக் களமிறக்கியலாம். அப்படியும் அவர்களுக்கு ஆறாவது பௌலிங் ஆப்ஷன் கிடைத்திருக்கும். இப்படியொரு முடிவை எடுத்ததன் மூலம் தரம்சாலா ஆடுகளத்துக்கு 4 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கியது ஆர்சிபி.
ஜேக்கப் டஃபி சாய் சுதர்ஷன் (எதேர்ச்சயாக ஹிட் விக்கெட் மூலம்) உள்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டஃபி சேர்க்கப்பட்டதால், சமீபமாக பந்துவீச்சில் பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தவறும் ஹேசில்வுட்டை அவர்களால் மிடில் ஓவர்களில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக அது அவர்களுக்கு நிறைய சாதகங்களை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























