ஹோர்மூஸ் நீரிணை அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதல் - இரானின் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இயன் ஐக்மேன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களின் மூலம் அப்பட்டமான போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது.
திங்கள் அன்று தெற்கு இரானில் நடைபெற்ற தாக்குதல்களை "தற்காப்பு தாக்குதல்கள்" என்று கூறும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்), கண்ணிவெடிகளை வைக்கும் முயற்சியில் இருந்த இரானிய ஏவுகணை தளங்கள் மற்றும் படகுகளை இலக்கு வைத்ததாக கூறியுள்ளது.
ஹோர்மோஸ்கான் பகுதியில் நிகழ்ந்த இந்த "ஆக்ரோஷமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கைகளின்" விளைவுகளுக்கு அமெரிக்காவைத் தான் பொறுப்பு ஆக்குவதாக இரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையின் கரையை ஒட்டி இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த முக்கியமான நீர்வழித்தடத்தை இரான் முடக்கியுள்ளதால் உலகம் முழுவதும் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.
மோதலை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளின் மீது இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் தெளிவு இல்லை.
"சந்தேகத்திற்கு இடமின்றி, இரான் இஸ்லாமியக் குடியரசு எந்த விதமான தீங்கிற்கும் பதில் அளிக்காமலும் இருக்காது மற்றும் இரானிய தேசத்தைக் காப்பதற்கும் தயங்காது," என இரான் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இரானின் அதி உயர் தலைவர் கொல்லப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட அழிவுகரமான தாக்குதல்கள் மூலம் பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கியது.
சண்டை பல வாரங்கள் நீடித்த பிறகு ஏப்ரல் 8-ஆம் தேதி போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டது. மே மாதத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு தாக்குதல் நீங்கலாக போர்நிறுத்தம் பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்ட்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரானிய படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நம்முடைய படைகளைக் காப்பாற்ற தெற்கு இரானில் இன்று அமெரிக்கப் படைகள் தற்காப்பு தாக்குதல்கள் நடத்தின." என்று தெரிவித்திருந்தது.
இந்த தாக்குதல்கள் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய தகவல்கள் அறிக்கையில் இல்லை.
இந்த நிலையில் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் பந்தர் அப்பாஸ் அருகில் ஓர் இடம் இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையில் அமைந்துள்ள இந்த தெற்கு துறைமுக நகரம் இரானிய கடற்படை தளத்தின் இருப்பிடமாகவும் உள்ளது.
வெடிப்புச் சத்தங்கள் கேட்ட பிறகு உள்ளூர் அதிகாரிகள் விசாரித்து வருவதாக இரானிய அரசு ஊடகங்கள் முன்னர் தெரிவித்திருந்தன.
அமெரிக்க டிரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதோடு தங்களின் வான்பரப்பில் நுழைந்த போர் விமானத்தை நோக்கி சுட்டதாகவும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) கூறியுள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்பது பற்றி குறிப்பிடவில்லை.
மோதலை முடிவுக்கு கொண்டு வரும் இறுதி நோக்கத்துடன் தற்போதைய போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து ஓர் ஒப்பந்தம் சாத்தியம் எனக் கூறும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, அதற்கு "சில நாட்கள் ஆகும்" என்றும் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக கூறிய டொனால்ட் டிரம்ப், பின்னர் 'ஒப்பந்தத்திற்கு அவசரப்பட வேண்டாம்' என பேச்சுவார்த்தை நடத்துபவர்களிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகங்களின்படி, சாத்தியமான ஒப்பந்தம் என்பது இறுதி தீர்வு அல்ல. மாறாக 60 நாள் போர்நிறுத்த நீட்டிப்பு, ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் இரானின் அணுசக்தி திட்டங்கள் மீதான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக திங்கள் அன்று தெரிவித்த இரான், ஒப்பந்தம் "உடனடியாக இல்லை" என்றும் குறிப்பிட்டது.
வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள இரானின் நிதிகளை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மையப்படுத்தியே முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானால் மத்தியஸ்தம் செய்யப்பட்டன.
எனினும் இரானிய பேச்சுவார்த்தைக் குழுவினர் கத்தார் மத்தியஸ்தர்களுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக விவாதிக்க திங்கள் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரான் மத்திய வங்கியின் ஆளுநர் கலந்து கொண்டதாக அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் விவாதங்கள் பெரும்பாலும் இரான் வசம் உள்ள மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையை மையப்படுத்தியே இருந்தது.
இந்த மோதல் தொடங்கியதில் இருந்து உலக எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்து நிகழும் முக்கிய கப்பல் வழித்தடத்தை இரான் முடக்கியுள்ளது.
ஆணு ஆயுதம் தயாரிப்பதற்காக இரான் யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது என அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பல மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்தத் திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே என இரான் தொடர்ந்து கூறி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























