இரான் போருக்கு பிறகு மதிப்பு உயர்ந்த மற்றும் வீழ்ந்த நாணயங்கள் - இந்திய ரூபாயின் நிலை என்ன?

இரான் போரின் போது, சில நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, மற்றவை நிலையாக இருந்துள்ளன

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ & ஜூலியா ப்ரான்
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிப்ரவரி இறுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் வெடித்தபோது, அதன் பாதிப்பை மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்தது.

இந்த மோதல் வணிகக் கப்பல் போக்குவரத்தையும், உலகம் முழுவதுமான சரக்குகளின் புழக்கத்தையும் பாதித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இது பணவீக்கத்தை அதிகரித்ததுடன், உலகளாவிய சந்தைகளையும் அதிர வைத்தது.

நிச்சயமற்ற காலங்களில் பொதுவாக நடப்பதைப் போலவே, சில முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சந்தைகளில் இருக்கும் அதிக ஆபத்துள்ள முதலீடுகளில் இருந்து பின்வாங்கினர். பாரம்பரியமாக பாதுகாப்பான புகலிடமாகக் கருதப்படும் அமெரிக்க டாலரில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர்.

இது பல நாட்டு நாணயங்களின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாணயங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, மற்றவை நிலையற்ற தன்மையுடன் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. சில நாணயங்கள் வலுவடைந்துள்ளன.

எண்ணெய் விலை உயர்வு "அனைவரையும் பாதிக்கும் அதே வேளையில்... நாணய மதிப்பு மாறுபாடுகள் அந்தப் பாதிப்பை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யக்கூடும்" என்று ஏபிசிஇ ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான பிரேசிலியப் பொருளாதார அறிஞர் ஆண்ட்ரே பெர்பெயிட்டோ கூறுகிறார்.

அப்படியென்றால், பொருளாதாரத்தைப் பாதிக்கும் பிற காரணிகளுடன் இத்தகைய நாணய மதிப்பு மாறுபாடுகளும் இணையும்போது, தனிப்பட்ட நாடுகளுக்கும் அவற்றின் குடிமக்களுக்கும் இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

பாதிப்பை சந்தித்த நாணயங்கள்

இரான் போர், இந்திய ரூபாய் மதிப்பு, உலக நாணயங்களின் மதிப்பு

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ஒரு நாணயத்தின் மதிப்பு, உணவு போன்ற அன்றாடப் பொருட்களின் விலையைப் பாதிக்கக்கூடும்.

தங்கள் தேவைக்கான பெரும்பாலான ஆற்றலை, குறிப்பாகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளின் நாணயங்கள் தான் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் அடங்கும். இவை அனைத்தும் உயர்ந்த எரிபொருள் விலைகள் மற்றும் தொடர்ச்சியான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையால் மீண்டும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை அமெரிக்க டாலருக்கு மாற்றியதால், இந்த நாடுகளின் நாணயங்களுக்கான தேவை குறைந்து, அவற்றின் மதிப்பு பலவீனமடைந்துள்ளது. இது டாலர் மதிப்பில் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான செலவை மேலும் அதிகரிக்கிறது.

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியதால் பாதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகளும் பொதுவாக டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

ஒரு நாட்டின் நாணய மதிப்பு வீழ்ச்சியடையும் போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஒப்பீட்டளவில் அதிக விலை கொண்டதாக மாறுகின்றன. இது எரிசக்தி துறை முதல் பிளாஸ்டிக் மற்றும் உரங்கள் வரை அனைத்தையும் பாதிக்கிறது. இது கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாடப் பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் 5% வீழ்ச்சி அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்திய ரூபாய் மதிப்பு அடுத்தடுத்து வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது.

இந்த மோதலுக்கு முன்பே இந்திய நாணயத்தின் மதிப்பு ஏற்கெனவே பலவீனமடைந்து வந்த நிலையில், தற்போதைய போரின் பாதிப்பு அந்த சரிவை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சில நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியிருப்பதுடன், தங்களது நாணயங்களின் மதிப்பைத் தக்கவைப்பதற்காகத் தங்களிடம் உள்ள அமெரிக்க டாலர் கையிருப்பில் ஒரு பகுதியை விற்று வருகின்றன.

இந்தோனீஷிய மத்திய வங்கி, டாலரை தொடர்ந்து விற்பனை செய்வது மற்றும் தனது சொந்த நாணயமான ருபியாவின் தேவையை அதிகரிப்பதற்காக அதை வாங்குவது என இரண்டு வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வட்டி விகிதங்கள் உயரும் போது, மக்கள் தங்களது சேமிப்புக்கு அதிக லாபம் பெறுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதேநேரத்தில், அது வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான மாதாந்திரத் தவணைத் தொகையையும் உயர்த்துகிறது.

நிலையற்ற தன்மை மற்றும் உயர்வு கண்ட நாணயங்கள்

இரான் போர், இந்திய ரூபாய் மதிப்பு, உலக நாணயங்களின் மதிப்பு

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ரஷ்யா ஒரு முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்பதால், இரான் போர் வெடித்ததிலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகராக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நாணயங்களில் ஒன்றாக ரஷ்ய ரூபிள் இருந்து வருகிறது.

மற்றொரு பிரிவைச் சேர்ந்த நாணயங்கள் இரு திசைகளிலும் கடுமையான ஏற்ற இறக்கங்களுடன், அதிக நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளன.

தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, சிலி மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் இந்த வகையின் கீழ் வருகின்றன.

இந்த நாணயங்கள் பெரும்பாலும் உலகளாவிய சந்தையின் போக்குக்கு ஏற்ப வலுவாக எதிர்வினையாற்றுகின்றன. முதலீட்டாளர்கள் டாலர் போன்ற பாதுகாப்பான புகலிடங்களை நோக்கிச் செல்லும்போது இவை பலவீனமடைகின்றன, ஆனால் பொருட்களின் விலைகள் உயரும்போதோ அல்லது சந்தையில் முதலீட்டு அபாயங்களை எதிர்கொள்ளும் ஆர்வம் திரும்பும்போதோ இவை விரைவாக மீண்டெழுகின்றன.

பிரேசில் மற்றும் மலேசியா உள்ளிட்ட எரிசக்தி ஏற்றுமதி செய்யும் சில நாடுகள், உயர்ந்த கச்சா எண்ணெய் விலையால் ஓரளவுக்குப் பயனடைந்துள்ளன. இது அவர்களின் ஏற்றுமதி வருவாயை அதிகரித்துள்ளதுடன், முதலீட்டாளர்களின் ஆர்வத்தையும் தக்கவைத்துள்ளது.

கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட வங்கிகள், ஏப்ரல் மாதத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய அறிக்கைகளில், பிரேசில் நாட்டு அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளுக்கான வலுவான தேவையை முன்னிலைப்படுத்தின. இதில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் வளர்ந்து வரும் சந்தைகளில் பிரேசிலைத் தனது முதன்மைத் தேர்வாகக் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும், சர்வதேச நிதி நிறுவனத்தின் லத்தீன் அமெரிக்க ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் மார்ட்டின் காஸ்டெல்லானோ கூறுகையில், "எரிசக்தி விலை உயர்வது பிரேசிலில் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும், இது வட்டி விகிதக் குறைப்பைத் தாமதப்படுத்துவதுடன் மூலதனப் புழக்கத்தையும் பாதிக்கும்" என்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை பிரேசில் இறக்குமதி செய்வதால், அது உள்நாட்டில் எரிபொருள் செலவுகளை உயர்த்துகிறது.

இரான் போர், இந்திய ரூபாய் மதிப்பு, உலக நாணயங்களின் மதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரேசிலிய ரியால் நாணயம் வலுவடைந்திருப்பதற்கு காரணம் ஓரளவுக்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலையே ஆகும்.

கூடுதலாக, அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, "நாணய மாற்று விகிதத்தில் அபாயத்தை அதிகரிக்கும்" என்று பிரேசிலின் முதலீட்டு மேலாண்மை நிறுவனமான எக்ஸ்பி -இன் பொருளாதார நிபுணர் லூயிசா பினேசி சமீபத்திய அறிக்கை ஒன்றில் எழுதியுள்ளார்.

வேறு சில காரணங்களால் மற்றொரு தனிப்பிரிவைச் சேர்ந்த நாணயங்கள் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் நிலைத்து நின்றுள்ளன.

சீனாவின் நாணயம் ஒப்பீட்டளவில் நிலையானதாகவே இருந்து வருகிறது.

கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தும் மூலதனக் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியிலான தலையீடுகள் இதற்கு ஓரளவுக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

நாட்டுக்குள் பணம் வருவதையும் வெளியேறுவதையும் கட்டுப்படுத்துதல் மற்றும் யுவானின் மாற்று விகிதத்தை நெருக்கமாக நிர்வகிக்க மத்திய வங்கி மேற்கொள்ளும் நேரடித் தலையீடுகள் ஆகியவை இதில் அடங்கும்.

இரான் போர் வெடித்ததில் இருந்து டாலருக்கு நிகராக மிகச்சிறப்பாக செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரஷ்ய ரூபிள் நாணயமும், அதிக எரிசக்தி வருவாய் மற்றும் கடுமையான மூலதனக் கட்டுப்பாடுகளால் ஆதாயமடைந்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் தங்களது வெளிநாட்டு வருவாயை ரூபிள்களாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் மற்றும் நாட்டிலிருந்து பணம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

வளர்ந்த நாடுகளின் நிலை என்ன?

இரான் போர், இந்திய ரூபாய் மதிப்பு, உலக நாணயங்களின் மதிப்பு

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியா முக்கியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், குறிப்பாக இரும்புத் தாதுவை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்பதால், ஆஸ்திரேலிய டாலர் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கங்களையே சந்தித்துள்ளது.

முதலீட்டாளர்கள் பாதுகாப்பை நாடியதால், இந்த நெருக்கடியின் தொடக்கத்தில் பாரம்பரியமான பாதுகாப்பான புகலிடமாக கருதப்பட்ட நாணயங்கள் வலுவடைந்தன.

அமெரிக்க டாலர் மற்றும் சுவிஸ் ஃபிராங்க் ஆகிய இரண்டும் உச்சத்தைத் தொட்டு, பின்னர் போருக்கு முன்பு இருந்த நிலைக்கு நிகராகக் குறைந்து நிலைபெற்றன. நார்வேயின் குரோன் போன்ற எண்ணெயுடன் தொடர்புடைய நாணயங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வால் கணிசமான ஆதாயம் பெற்றுள்ளன.

இருப்பினும், ஜப்பானிய யென் ஒரு பொதுவான பாதுகாப்பான புகலிட நாணயத்தைப் போலச் செயல்படாமல் பலவீனமடைந்தது. ஜப்பான் தனது ஆற்றல் தேவைக்காக இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருப்பது தான் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய், எரிவாயு, உலோகங்கள், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி போன்ற பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், அந்த நாடுகளின் டாலர் மதிப்பும் பயனடைந்துள்ளது.

இருப்பினும், உலகளாவிய வளர்ச்சி மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் குறித்த கவலைகள் அந்த ஆதாயங்களைக் கட்டுப்படுத்தியுள்ளன.

அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள், கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் நிலவும் மந்தமான வளர்ச்சி குறித்த கவலைகளால், யூரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஆகிய நாணயங்களும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன.

அடுத்தது என்ன?

இரான் மீதான ஆரம்பக்கட்ட வான்வழித் தாக்குதல்கள் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான சொத்துகளை நோக்கித் திருப்பியதோடு, டாலரையும் வலுப்படுத்தியது.

எனினும், அதன் பிறகு அமெரிக்க நாணயத்தின் மதிப்பு பலவீனமடைந்துள்ளது, இது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு உதவக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

"பலவீனமான டாலர் என்பது பொதுவாக எளிதான பணவியல் சூழலையும், வளரும் நாடுகளில் வட்டி விகிதக் குறைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளையும், முதலீட்டு அபாயங்களைக் கண்டு பின்வாங்கும் போக்கு குறைவதையும் குறிக்கிறது. இவை அனைத்தும் வளர்ந்து வரும் சந்தைகளுக்குச் சாதகமானவை" என்று பிரிட்டனின் உலகளாவிய முதலீட்டு நிறுவனமான அலையன்ஸ் பெர்ன்ஸ்டீன் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பெரும்பாலான கடன்கள் அமெரிக்க டாலரில் பெறப்படுவதாலும், முக்கியப் பொருட்கள் டாலரிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும் டாலரின் பங்கு தொடர்ந்து முக்கியமானதாகவே உள்ளது.

எனவே, டாலரின் மதிப்பு குறைவது அவற்றின் எதிர்கால கண்ணோட்டத்தை மேம்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இரான் போரினால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள், உலகப் பொருளாதாரத்தை மந்தமான வளர்ச்சி மற்றும் அதிக பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்ட "நெருக்கடியான" சூழ்நிலையை நோக்கித் தள்ளுவதாக சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் மாதத்தில் எச்சரித்தது.

எண்ணெய் விலை அதிகமாக இருந்து, பணவீக்கம் நிலையற்றதாகி, நிதி நிலைமை இறுக்கமடையும் இந்தச் சூழ்நிலையில், உலகளாவிய வளர்ச்சி 2.5% ஆகக் குறையக்கூடும் மற்றும் பணவீக்கம் 5.4% ஆக உயரக்கூடும்.

தற்போதைய கணிப்பு 3.1% வளர்ச்சியையும் 4.4% பணவீக்கத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய வளர்ச்சி 2.0% ஆகக் குறைந்து, பணவீக்கம் 6%ஐத் தாண்டும் என்ற மிகக் கடுமையான மற்றொரு சூழ்நிலையையும் ஐஎம்எஃப் கோடிட்டுக் காட்டியுள்ளது. இது ஜூலை மாதத்தில் தனது கணிப்புகளை மீண்டும் புதுப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு