You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போர் நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இந்தியாவுக்கு ஒரு பின்னடைவா?
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான இரண்டு வார கால போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தானுக்கு இருந்த பங்கு பற்றி இந்தியா எதுவும் குறிப்பிடவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில், "போர் நிறுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதியை நிலைநாட்ட உதவுமென்று நம்புகிறோம். நாங்கள் முன்பே கூறியது போல, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, ராஜதந்திர நடவடிக்கைகள் ஆகியவை அவசியமானவை," என்று தெரிவித்துள்ளது.
இந்தப் போர் ஏற்கெனவே கடுமையான சேதங்களை ஏற்படுத்தி இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளதுடன், வர்த்தக அமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "எண்ணெய் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல முடியுமென நாங்கள் நம்புகிறோம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பல உலகத் தலைவர்கள், பதற்றத்தைத் தணிக்க உதவியதற்காக பாகிஸ்தானை பாராட்டியுள்ளனர். ஆனால், இஸ்லாமாபாத்தில் இரான், அமெரிக்கா இடையிலான சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியா மௌனம் காத்து வருகிறது.
சர்வதேச பாராட்டுகளைப் பெறும் பாகிஸ்தான்
இந்தப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தத்தை அறிவிக்கும் போது பாகிஸ்தானை குறிப்பிட்டார். ஷெபாஸ் ஷெரீஃப், அசிம் முனீர் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
அப்பாஸ் அராக்சியும் பாகிஸ்தானின் முயற்சிகளைப் பாராட்டினார். "இரான் சார்பாக, எங்கள் நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு, இந்தப் பகுதியில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமரும், பாகிஸ்தான் உள்பட மத்தியஸ்தர்களின் பங்கைப் பாராட்டியுள்ளார். "பதற்றங்களைத் தணிப்பதற்கான பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முயற்சிகளுக்கும் நாங்கள் எங்கள் நன்றியையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும், மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானின் பங்குக்கு நன்றி தெரிவித்தார்.
மொத்தத்தில், பதற்றத்தைக் குறைக்க உதவியதற்காக பாகிஸ்தானை பல நாடுகள் வெளிப்படையாகப் பாராட்டி வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தானின் பங்கு குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருக்கத் தேர்வு செய்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
வெளியுறவுக் கொள்கை குறித்த கேள்விகள்
இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள், நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்தும், குறிப்பாக சர்வதேச அரசியலில் பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் பெறுவதாகக் கருதப்படுவது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன.
எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த ரஷீத் அல்வி, போர் நிறுத்தம் குறித்துப் பேசியபோது, "இந்தியா செய்திருக்க வேண்டியதைத்தான் பாகிஸ்தான் செய்துள்ளது. ஆனால் பிரதமர் மோதி இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டும்போது, அவரால் எப்படி போர் நிறுத்தம் குறித்து பேச முடியும்?" என்று விமர்சித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இந்த மோதலை நிறுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்க வேண்டும், ஆனால் இஸ்ரேல் உடனான பிரதமர் மோதியின் நெருக்கமான நிலைப்பாடு, இந்தியா ஒரு நடுநிலையான சமாதானத் தூதராகச் செயல்படுவதைக் கடினமாக்குகிறது.
காங்கிரஸ் கட்சியும் நரேந்திர மோதியின் தலைமைத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "பாகிஸ்தான் ஆற்றிய பங்கும், அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தமும் மோதியின் தனிப்பட்ட ராஜதந்திர பாணிக்கு ஒரு பெரும் அடியைக் கொடுத்துள்ளது," என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர், "இரானிய ஆட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இலக்கு வைத்துக் கொல்லப்பட்டதன் மூலம் பிப்ரவரி 28ஆம் தேதி இந்த மோதல் தொடங்கியது. பிரதமர் மோதியின் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இஸ்ரேல் பயணம் முடிவடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வுகள் நடந்தன. இந்தப் பயணம் இந்தியாவின் உலகளாவிய நம்பகத்தன்மையையும் நற்பெயரையும் குறைத்துவிட்டது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எளிதாகக் கூறுவதெனில், மோதியின் இஸ்ரேல் பயணத்திற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள், உலகம் இந்தியாவை பார்க்கும் விதத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அதோடு, "வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக செயல்படும் அளவுக்குத் திறன் கொண்டதில்லை என்று நிராகரித்திருந்தார். ஆனால் இப்போது தன்னைத் தானே உலகத் தலைவர் என்று கூறிக் கொண்டவர் முழுமையாக அம்பலமாகியுள்ளார். தன்னை வலிமையான தலைவராகக் காட்டிக் கொண்டவர் தற்போது பலவீனமாகத் தெரிகிறார்," என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் முந்தைய வலுவான கூற்றுகள் இப்போது கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை இது உணர்த்துவதாக அவரது விமர்சனம் கூறுகிறது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா ஒரு நம்பகமான மத்தியஸ்தராக சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், பாஜக அரசின் தவறுகளால், சண்டையிடும் தரப்பினரிடையே மத்தியஸ்தராக செயல்படும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்தது," எனக் கூறியுள்ளது.
இருப்பினும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த விமர்சனத்தை ஏற்கவில்லை. சிவ சேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் பக்கத்தில், "அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான எந்தவொரு பேச்சுவார்த்தை மேடையிலும் இந்தியா ஏன் இடம்பெற வேண்டும்? இந்த விமர்சனங்கள் எனக்குப் புரியவில்லை, ஏனெனில் இது நமது சண்டை அல்ல. பாகிஸ்தானை பொறுத்தவரை, 'அது பலம் வாய்ந்ததாக, திறன் வாய்ந்ததாக இல்லாதபோதிலும், தன்னால் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என்பது போலக் காட்டிக் கொள்கிறது' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மிகச் சரியாகக் குறிப்பிட்டிருந்தார்," என்று எழுதியுள்ளார்.
அவரது கூற்றுப்படி, ஒவ்வொரு சர்வதேச மோதலிலும் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும், பாகிஸ்தானின் பங்களிப்பை அவர் கேள்விக்கு உள்ளாக்கியும் உள்ளார்.
உமர் அப்துல்லாவும் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், "போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் மூலம் 'ஹோர்மூஸ் நீரிணை' மீண்டும் திறக்கப்பட்டுள்ளது, போருக்கு முன்பு எவ்வித தடையுமின்றி எளிதாகப் பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்த அதே நீரிணைதான் இது. அப்படியெனில், இந்த 39 நாட்கள் போரின் மூலம் அமெரிக்கா சாதித்தது என்ன?" என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: மத்தியஸ்தரா அல்லது தூதரா?
இரான் போரின் காரணமாக ராஜதந்திரத்தில் பாகிஸ்தான் இந்தியாவைவிட ஒரு சாதகத்தைப் பெற்றுள்ளதா என்பதே தற்போது விவாதிக்கப்படும் கேள்வியாக உள்ளது. இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பாகிஸ்தான் சில சாதகங்களைப் பெற்றுள்ளதாக ஒப்புக்கொள்கின்றன. ஆனால், நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதுகுறித்துக் கலவையான கருத்துகள் நிலவுகின்றன.
சர்வதேச விவகாரங்களில் நிபுணரான ஹர்ஷ் பந்த், பாகிஸ்தானின் பங்கை "குறுகிய கால ராஜதந்திரம்" என்று மட்டுமே விவரிக்கிறார். அவர் பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, "இந்த மோதலில் செய்தி பரிமாற்றம் என்கிற வகையில்தான் பாகிஸ்தான் பங்காற்றியுள்ளது. ஒரு மத்தியஸ்தரை போல, அதன் விளைவைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு அடையாளமோ அல்லது பங்கோ அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மத்தியஸ்தத்தின் இறுதி விளைவு இன்னும் அறியப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஓர் ஊடகமாக மாறி, போர் நிறுத்தத்தை சாத்தியமாக்கி, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்றது என்பது உண்மைதான். ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் விளைந்ததாகத் தெரியவில்லை," என்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, இரு நாடுகளுக்கும் இடையே செய்திகளைப் பரிமாற பாகிஸ்தான் உதவியது, இது போரைத் தற்காலிகமாக நிறுத்த உதவியிருக்கலாம். ஆனால், இறுதி விளைவை வடிவமைக்கக்கூடிய ஓர் உண்மையான மத்தியஸ்தரை போல் அதுவொரு சக்திவாய்ந்த, தீர்க்கமான பங்கை ஆற்றவில்லை என்கிறார்.
அதோடு, பாகிஸ்தான் இதைச் செய்வது ஏன் என்ற முக்கியமான கேள்வியையும் அவர் எழுப்புகிறார். அவரது கூற்றுப்படி, 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பிறகு, பாகிஸ்தான் அமெரிக்காவுடன் தனது உறவை மேம்படுத்த முயன்று வருகிறது.
டொனால்ட் டிரம்புக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்குவதைக்கூட பாகிஸ்தான் ஆதரித்ததாக அவர் கூறுகிறார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு சென்றபோது, அரிய வகை கனிமங்களை விற்பது குறித்து பாகிஸ்தான் விவாதித்தது. எனவே, முன்னர் முக்கியத்துவம் குறைந்திருந்த அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தான் மீண்டும் தனது முக்கியத்துவத்தை அதிகரிக்க முயல்கிறது. இந்த மத்தியஸ்த முயற்சியை அந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா மேனன் ராவும் இதேபோன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். பாகிஸ்தானின் பங்கு ஒரு மத்தியஸ்தரின் பங்கல்ல, மாறாக செய்திகளை அனுப்புவதற்கும், காலக்கெடுவை நீட்டிப்பதற்கும், சில தகவல் தொடர்புகளைத் திறந்து வைப்பதற்குமான ஊடகமாகவே செயல்பட்டது என்று அவர் எழுதினார்.
ஹர்ஷ் பந்த் போலவே, இவரும், இதுவொரு பாரம்பரிய மத்தியஸ்தம் அல்ல என்று நம்புகிறார். ஆனாலும் இதைப் புறக்கணிக்கக் கூடாது எனவும் குறிப்பிடுகிறார்.
அவரது கூற்றுப்படி, இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூற வேண்டும். "இந்தியா போர் நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும், முக்கியமான கடல் வழிகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த மோதலில் எந்தவொரு தரப்பும் அதிக சக்தி வாய்ந்ததாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்."
"இது மௌனமாக இருக்க வேண்டிய நேரமல்ல. இது புத்திசாலித்தனமாகவும் அறிவார்ந்த முறையிலும் பேசவேண்டிய நேரம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்திற்கு உதவுவதில் பாகிஸ்தானின் பங்கு, அது அமெரிக்கா மற்றும் இரான் மட்டுமின்றி சீனாவின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறுகிறார்.
பாகிஸ்தான் கடந்த காலத்திலும் இதுபோன்ற செயல்களைச் செய்துள்ளதாக ஹர்ஷ் பந்த் நினைவூட்டுகிறார். 1970களில் பனிப்போரின்போது, அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான தகவல் தொடர்புக்கு பாகிஸ்தான் உதவியது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் தனது முக்கியத்துவத்தை அதிகரிக்க பாகிஸ்தான் இதுபோன்ற வாய்ப்புகளை அடிக்கடி பயன்படுத்தியுள்ளது எனவும், சில நேரங்களில் அது பலனளித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அதேவேளையில், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசாங்கம் அமையவிருந்தபோது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று இந்தியாவில் பலர் உணர்ந்தனர். ஆனால் பின்னர், தாலிபன்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். அதோடு பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனவே வெளியுறவுக் கொள்கையை குறுகிய கால நிகழ்வுகளின் அடிப்படையில் மதிப்பிடக்கூடாது, நீண்டகால நோக்கில் பார்க்க வேண்டும் என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார்.
'இந்திய வெளியுறவுக் கொள்கை நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளது'
சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலர், இந்தப் போரின்போது இந்தியா மிகுந்த பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்ததாகக் கூறுகின்றனர்.
பிபிசி ஹிந்தியின் 'தின்பார்' என்ற பாட்காஸ் நிகழ்ச்சியில் பேசிய பிபிசி ஹிந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவா, இதற்கான ஒரு முக்கியக் காரணத்தை விளக்கினார்.
"இரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் தொடங்கியபோது, இந்தியாவின் ராஜதந்திர நிலை மிகவும் நுட்பமான ஒரு சூழலில் இருந்தது. ஏனெனில், இந்தியா நீண்ட காலமாக அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. அதில் பல சிக்கல்கள் இருந்தன.
முதலில் வரி விகிதம் 25 சதவிகிதமாக இருந்தது, பின்னர் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்குக் கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது. இரான் போர் மூண்ட அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் பணியின் நடுவில் இருந்தது," என்று அவர் விளக்கினார்.
மேலும் அவர், "இரானுடனான இந்தியாவின் உறவுகள், மக்கள் அளவிலான தொடர்புகளில் மிகவும் சிறப்பாக இருந்து வருகின்றன. இந்தியா, இரான் இடையே பெரிய அளவிலான இறக்குமதி-ஏற்றுமதி வர்த்தகமும் நடைபெறுகிறது. பாஸ்மதி அரிசி உள்படப் பல பொருட்கள் இந்தியாவில் இருந்து இரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மறுபுறம், இரானில் இருந்து பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றில் கனிமங்கள் தவிர, எரிவாயுக் குழாய் இணைப்புத் திட்டம் போன்றவையும் அடங்கும். இந்தத் திட்டத்தில் இந்தியா கணிசமாம முதலீடு செய்துள்ளது," என்று தெரிவித்தார்.
போர் தொடங்குவதற்குச் சற்று முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, போர் மூண்டபோது இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்தன.
இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியா உடனடியாக எவ்வித எதிர்வினையையும் ஆற்றவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி புதுடெல்லியில் உள்ள இரான் தூதரகத்திற்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டார்.
ஆரம்பத்தில் இருந்தே, இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டுமென்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அது தவிர்த்து, இந்த மோதலில் இந்தியா நேரடியாக எந்தவொரு பங்கையும் வகிக்கவில்லை. அதன் பிறகு, பிரதமர் மோதியும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இரான் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களை நடத்தினர்.
பின்னர், "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் அது ஒரு வெற்றியை அடைந்தது. இரானுடன் பேசி, அவர்களின் ஒப்புதலுடன், இந்தியாவுக்கு வந்த எண்ணெய் கப்பல்கள் இந்திய கடற்படையின் மேற்பார்வையில் ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டன. இந்தியாவே நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் இது நிகழ்ந்தது.பிரதமர் மோதி நாடாளுமன்றத்தில் கவலைக்குரிய நிலைமை குறித்துப் பேசியிருந்தார்," என்று நிதின் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
அவரைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மிகுந்த நிதானம் கடைபிடிக்கப்பட்டு, பெரும் வெற்றியும் அடையப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு