You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்தை இரான் ஏன் ஒரு வெற்றியாக கருதுகிறது?
- எழுதியவர், கஷாயர் ஜொனைதி
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் அரசும் அரசு ஊடகங்களும் போர் நிறுத்தத்தை ஆட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகச் சித்தரிக்கின்றன.
இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போரில் இரான் தனது இலக்குகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் அடைந்துவிட்டதாகவும், ''எதிரி ஒரு வரலாற்றுத் தோல்வியை'' சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மற்றும் இரான் தன்னை வெற்றியாளராகக் காட்டிக் கொள்ளும் சூழலுக்கு மத்தியில், இரான் அரசுக்கு மிகவும் முக்கியமான மற்றொரு விஷயம் உள்ளது.
இந்தப் போர் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதிகள் கொலையுடன் தொடங்கியது.
இது அந்த ஆட்சிக்கு ஒரு வாழ்வா சாவா போராட்டமாக, ஒரு இருப்புக்கான போராக இருந்தது.
எனவே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் 30 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போரில் தப்பிப்பிழைத்ததையே அவர்கள் வெற்றியாகக் கருதுவார்கள்.
இரான் மக்கள் நிலைமை என்ன?
இரானியர்களுக்கு ஒரு நீண்ட இரவாக இருந்தது. டொனால்ட் டிரம்ப் மிரட்டியதைப் போலவே, மின் உற்பத்தி நிலையங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் மீது அமெரிக்கா கடும் குண்டுவீச்சு நடத்தும் என்று பலரும் நினைத்தனர்.
தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 03:00 மணி என்ற அந்த இறுதி காலக்கெடுவுக்காக அனைவரும் காத்திருந்தனர்.
தெஹ்ரான் நேரப்படி நள்ளிரவு 01:00 மணியளவில் போர்நிறுத்த அறிவிப்பு வந்தது. ஆனால் தாக்குதல்கள் நடக்குமோ என்று அஞ்சி பல மக்கள் விழித்திருந்தனர்.
அங்கு கலவையான எதிர்வினைகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக மக்கள் மளிகைப் பொருட்கள், உணவு மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கிச் சேமித்து வந்தனர். மின்சாரம் இருக்காது என்ற பயத்தில் தண்ணீரையும் சேமித்து வைத்தனர்.
தற்போது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்படப் போவதில்லை என்பதால் அவர்களுக்கு ஒருவித நிம்மதி ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த ஆட்சிக்கு எதிராக இருந்த பல மக்கள், இந்தப் போரின் கொடூரங்கள் மற்றும் சேதங்களுக்கு மத்தியிலும், இது ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை.
இப்போது அவர்கள் இந்தப் போரினால் காயமடைந்த, பொருளாதாரம் சரிந்து போன ஒரு ஆட்சியைத்தான் மீண்டும் எதிர்கொள்ளப் போகிறார்கள்.
அந்த ஆட்சி இப்போது அதிக கோபத்தில் இருக்கிறது, மக்கள் அதை மீண்டும் சந்திக்க வேண்டும்.
செளதி அரேபியா கூறுவது என்ன?
இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தச் செய்திக்கு எதிர்வினையாற்றியுள்ள செளதி அரேபியா, இந்த அறிவிப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
"பல தசாப்தங்களாக நிலவி வரும் பாதுகாப்பின்மை மற்றும் உறுதியற்ற தன்மைக்குக் காரணமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடையக்கூடிய ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பாகிஸ்தான் எடுத்து வரும் சமரச முயற்சிகளுக்கு ஆதரவை இந்த அரசு உறுதிப்படுத்துகிறது" என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
"அதே வேளையில், எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஹோர்மூஸ் நீரிணை திறந்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு வலியுறுத்துகிறது."
இந்தப் போர்நிறுத்தம் "பிராந்தியத்தின் பாதுகாப்பை" மேம்படுத்தும் என்றும், மத்திய கிழக்கின் பிற நாடுகள் மீதான தாக்குதல்கள் "நிறுத்தப்படும்" என்றும் செளதி அதிகாரிகள் நம்புவதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
வளைகுடா அரபு நாடுகளான செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் போன்றவை இரான் மீதான போருக்கு ஆதரவளிக்க மறுத்த போதிலும், இரானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் கிட்டத்தட்ட தினமும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன.
போரில் 'வெற்றி' பெற்றதாக கூறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
போர் தொடங்கியதில் இருந்து இரானின் வழக்கமான தாக்குதல்களைச் சந்தித்த பிறகு, தனது நாடு "வெற்றி பெற்றுள்ளதாக" ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"துரோகத்தனமான தாக்குதலுக்குகு எதிராக, இறையாண்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாத்ததோடு, எங்களது சாதனைகளையும் பாதுகாத்த ஒரு தேசப் பாதுகாப்பின் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம்" என்று அன்வர் கர்காஷ் கூறுகிறார்.
"இன்று, ஒரு சிக்கலான பிராந்திய சூழலை அதிக செல்வாக்குடனும், கூர்மையான நுண்ணறிவுடனும், எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வலுவான திறனுடனும் கையாள நாங்கள் முன்னோக்கிச் செல்கிறோம்."
போர் தொடங்கியதிலிருந்து இடைமறிக்கப்பட்ட இரானியத் தாக்குதல்கள் குறித்த வழக்கமான அறிவிப்புகளை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் பின்வரும் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 2221 டிரோன்கள், 26 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 520 பாலிஸ்டிக் ஏவுகணைகள் என்ற எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஓமன் வெளியுறவு அமைச்சரும் இந்த போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளார்.
ஓமன் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானின் பணியைப் பாராட்டியுள்ளது. ஆனால் நிரந்தர போர்நிறுத்தத்தை நோக்கி "முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன்" முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு