அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் கடும்போக்கு இரானியர்களை கோபப்படுத்தியது ஏன்?

    • எழுதியவர், கஸ்ரா நாஜி
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரான் நகரத்தை நிர்வகிக்கும் இஸ்லாமியக் குடியரசு கடும்போக்குவாதிகள், இரான் தலைநகரின் மிகவும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றில் ஒரு மாபெரும் பேனரை வைத்தனர்.

"ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும்" என்று அது அறிவித்தது.

கடந்த மாதம் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பொதுவெளியில் காணப்படாத இரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா காமனெயி இடமிருந்து வந்த ஒரு கட்டளையை இது உணர்த்துவதாக இருந்தது.

ஆனால், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கும், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் இரான் ஒப்புக்கொண்ட பிறகு இப்போது அந்த பேனரை அகற்ற வேண்டியிருக்கும்.

தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றும், இரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போருக்கு நிரந்தர முடிவு வேண்டும் என்றும் இரான் பலமுறை கூறி வந்த நிலையிலும் இது நடந்துள்ளது.

கடும்போக்குவாதிகள் கூறியது என்ன?

இரானின் கடும் போக்குவாதிகள் மகிழ்ச்சியாக இல்லை. ஹோர்மூஸ் நீரிணையை மூடி, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் இரானின் திறனால் அவர்கள் உற்சாகமடைந்திருந்தனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இரான் ''மேலோங்கிய நிலையில் இருந்ததால் போரைத் தொடர்ந்திருக்க வேண்டும்'' என்பது அவர்களின் நிலைப்பாடு.

செவ்வாய்க்கிழமை போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கொடிகளை எரித்ததாக தெஹ்ரானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பாசிஜ் தன்னார்வப் படை வீரர்கள் குழு ஒன்று, இந்த முடிவை எதிர்த்து நள்ளிரவில் வெளியுறவு அமைச்சகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றது.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, கடும்போக்குவாத நாளிதழான 'கெய்ஹான்' ஆசிரியர், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது "எதிரிக்கு வழங்கப்பட்ட ஒரு பரிசு. இது அவர்கள் மீண்டும் ஆயுதங்களைச் சேகரித்து போரைத் தொடர அனுமதிக்கும்'' என்று எழுதினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் கோரிக்கையை ஏற்கும் முடிவு, அதி உயர் தலைவருக்குக் கீழ் இயங்கும் இரானின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் (எஸ்என்எஸ்சி) எடுக்கப்பட்டது.

இந்த அமைப்பிற்கு மிதவாத அதிபர் மசூத் பெசெஷ்கியான் தலைமை தாங்குகிறார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என எஸ்என்எஸ்சி அறிவித்தது.

தனது நெருங்கிய கூட்டாளியான இரானை, பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் சீனா முக்கிய பங்கு வகித்ததாக செய்திகள் கூறுகின்றன.

தற்காலிக நிம்மதியா?

40 நாள் போரில் இரான் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் பெரிய அளவிலான இறப்புகளையும் அழிவுகளையும் ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியிருந்தார்.

கடும்போக்குவாதிகள் மத்தியில்கூட, இரானின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மேலும் அழிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

போர்நிறுத்த அறிவிப்பு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, கடும்போக்குவாத தலைமை நீதிபதி கோலம் ஹொசைன் மொஹ்சேனி எஜெய், இரான் அரசு தொலைக்காட்சியில், ''இரான் தனது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டே போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக'' தெரிவித்தார்.

மிதவாதியான நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க இதழான 'ஃபாரின் அஃபையர்ஸ்' கட்டுரையில் எழுதியிருந்ததையே இவரும் மேலோட்டமாகத் திரும்பக் கூறினார்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரானின் வெற்றியாக எஸ்என்எஸ்சி சித்தரித்துள்ளதுடன், ஆட்சி ஆதரவாளர்களை ஒற்றுமையுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இரான் ஊடகங்களின்படி, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் இரானியக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். மேலும் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அமெரிக்காவுடன் நேரடியாக பேச தடை இருந்தது

இது கடும்போக்குவாதிகளின் வழக்கமான பாணியிலிருந்து மற்றொரு விலகலாகும்.

அமெரிக்காவுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னாள் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி எப்போதும் தடை விதித்திருந்தார். அவர் போரின் தொடக்கத்தில் அவரது வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த நேரடித் தொடர்பு, அவரது மகனான புதிய தலைவரால் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

போர்நிறுத்தம் ஏற்பட்ட போதிலும், இரானும் அமெரிக்காவும் ஒரு நிலையான அமைதியிலிருந்து இன்னும் வெகு தொலைவில் உள்ளன.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் போர் மீண்டும் தொடங்கலாம். இந்த ஆட்சியை அகற்றுவதற்கான ஒரு வழியாகப் போரைப் பார்த்த சில இரானியர்கள் அந்த வாய்ப்பை எதிர்பார்க்கக்கூடும்.

ஆனால் மற்ற பலருக்கு, இந்த போர்நிறுத்தம் தங்களைச் சுற்றியுள்ள மரணம் மற்றும் அழிவிலிருந்து மிகவும் தேவையான நிம்மதியை அளிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு