You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மீதமிருப்பது பவுலர்கள் மட்டுமே' - தோல்வியின் விளிம்பிற்கு சென்ற லக்னௌவை மீட்ட முகுல் சௌத்ரி என்ன செய்தார்?
ஐபிஎல் 2026 தொடரின் 15வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னௌ அணியில் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் விளையாடினார்.
முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்கை கடைசி பந்தில் சேஸ் செய்தது லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அந்த அணியை வெற்றி பெற வைத்த இளம் வீரர் முகுல் சௌத்ரி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ரஹானே - ரகுவன்ஷி நல்ல அடித்தளம்
கொல்கத்தா அணியின் ஓப்பனர் ஃபின் ஆலன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே வெளியேறினார். பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தை அவர் தூக்கி அடிக்க, பந்து டாப் எட்ஜ் ஆகி தேர்ட் மேன் திசையில் நின்றிருந்த திக்வேஷ் ராத்தியிடம் கேட்ச் ஆனது. ஆலன் 9 ரன்களில் வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் மூன்றாவது முதல் ஐந்தாவது ஓவரில் அவர்கள் சற்று கவனமாகவே விளையாடினார்கள். இந்த ஓவர்களில் ஒரு பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்துவிட்டு மற்ற பந்துகளில் ஸ்டிரைக் ரொடேட் செய்தார்கள்.
பவர்பிளேவின் கடைசி ஓவரில் சற்று வேகம் காட்டி ரன் விகிதத்தை அதிகப்படுத்தினார் ரகுவன்ஷி. ஆவேஷ் கான் வீசிய அந்த ஓவரில் அவர் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார். பவர்பிளே முடிவில் கேகேஆர் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே முடிந்து சுழல் வந்த பிறகும்கூட அவர்கள் இருவரும் எப்படியும் ஓவருக்கு 9 ரன்களாவது வரும் வகையில் பார்த்துக்கொண்டார்கள்.
10 ஓவர்கள் முடிவில் 98/1 என்ற நல்ல நிலையில் இருந்தது கேகேஆர். இந்நிலையில், 11வது ஓவரில் ரஹானேவை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் திக்வேஷ். 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ரஹானே.
இந்த ஜோடி 8.4 ஓவர்களில் 84 ரன்கள் எடுத்தது.
டெத் ஓவரில் அதிரடி காட்டிய கேகேஆர்
12வது ஓவரில் ரகுவன்ஷியை வெளியேற்றினார் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த். ரகுவன்ஷி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு வந்த ரிங்கு சிங் ரன் எடுக்கவே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
11 முதல் 15 வரையிலான 5 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.
ரன் விகிதம் வெகுவாகக் குறைந்த நிலையில் கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் - ராவ்மன் பவெல் இருவரும் சற்று அதிரடி காட்டினார்கள்.
டெத் ஓவர்களில் ஓவருக்கு ஓரிரு பவுண்டரிகளாவது இருவரும் அடித்தார்கள். அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.
கேமரூன் கிரீன், ராவ்மன் பவெல் இருவரும் முறையே 32 மற்றும் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னௌ பௌலர்களில் எம்.சித்தார்த், ஆவேஷ் கான், திக்வேஷ் ராத்தீ, பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றியை நோக்கிப் பயணித்த கேகேஆர்
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் ஜோடி ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தது. இந்த இணை 4 ஓவர்களிலேயே 41 ரன்கள் எடுத்தது. ஆனால், ஐந்தாவது ஓவரில் 3 பந்துகள் இடைவெளியில் அவர்கள் இருவரையுமே வெளியேற்றினார் வைபவ் அரோரா.
அதன்பிறகு வந்த ரிஷப் பன்ட் (10 ரன்கள்), நிகோலஸ் பூரன் (13 ரன்கள்), அப்துல் சமத் (2 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். 13வது ஓவரில் 104/5 என்ற நிலைக்குச் சென்றது லக்னௌ.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஒருபக்கம் ஆயுஷ் படோனி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 34 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அனுகூல் ராய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 14.4 ஓவர்களில் 125/6.
மீதமிருந்தது, தன் மூன்றாவது ஐபிஎல் போட்டியில் ஆடும் முகுல் சௌத்ரியும் பௌலர்களும் மட்டுமே. அதனால் இந்தப் போட்டியில் நிச்சயம் கொல்கத்தா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
போட்டியை மாற்றிய முகுல் சௌத்ரி
லக்னௌ இந்தப் போட்டியை இழந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில், அனைத்தையும் மாற்றினார் முகுல் சௌத்ரி. 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் லக்னௌ அணியை அவர் வெற்றி பெறவைத்தார்.
எதிர்ப்புறம் ஆவேஷ் கானை வைத்துக்கொண்டு, பெரும்பாலான பந்துகளை தானே சந்தித்து, அதில் 2 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் விளாசினார் முகுல் சௌத்ரி.
கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் அதை அவர் சாத்தியப்படுத்தினார்.
இதன்மூலம் இந்த சீசனில் தங்கள் 2வது வெற்றியை லக்னௌ பதிவு செய்தனர். 4வது போட்டியில் விளையாடும் கேகேஆர் மூன்றாவது தோல்வியை சந்தித்தது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு