"முஸ்லிம் ஒற்றுமை" : அமெரிக்கா - இரான் இடையே பாகிஸ்தானின் மத்யஸ்தம் குறித்து உலக நாடுகள் கூறுவது என்ன?

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"நீங்கள் எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த மிகப் பெரிய ராஜதந்திர வெற்றி."

இப்படியான பல கருத்துக்கள் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது நிபந்தனைகளுடன் கூடிய தற்காலிக போர்நிறுத்தமாக இருந்தாலும் கூட அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இந்தப் பதிவுகளில் பாகிஸ்தான் பாராட்டப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஒரு முழு நாகரிகத்தையும் அழிப்பேன்" என்று விதித்திருந்த காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் அறிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, அமெரிக்காவுடனான 10 அம்சத் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 நாட்களுக்கு இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியது.

பாகிஸ்தான் மூலமாகவே தனது 10 அம்சத் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்ததாக இரான் கூறியுள்ளது.

இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது அறிக்கையில், "இரான் சார்பாக, பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர அயராத முயற்சி எடுத்த நமது நட்பு நாடான பாகிஸ்தான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்டு மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரைப் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட செய்தியில், வரும் நாட்களில் இன்னும் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரான் மற்றும் அமெரிக்கா இந்த போர்நிறுத்தத்தை முழு உலகிற்கும், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வாகக் கருதுகின்றன.

அதே நேரத்தில், சர்வதேச பார்வையாளர்கள் இதனை பாகிஸ்தானின் ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கிறார்கள் மற்றும் மோதலைத் தடுத்ததில் இஸ்லாமாபாத்தின் பங்கைப் பாராட்டுகிறார்கள்.

பிரிட்டன் உயர் ஆணையர் சொன்ன 'நன்றி பாகிஸ்தான்'

பாகிஸ்தானுக்கான பிரிட்டன் உயர் ஆணையர் ஜேன் மேரியட், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிர்ந்த போர்நிறுத்த அறிவிப்பைப் பகிர்ந்து, "இந்த முக்கியமான போர்நிறுத்தத்தை உறுதி செய்ய அமைதியாகவும், திறமையாகவும் ராஜதந்திர ரீதியாகவும் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் விடுத்த செய்தியில், "இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மோதலைக் குறைப்பதில் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்களின் பங்கினை ஆஸ்திரேலியப் பிரதமரும் பாராட்டியுள்ளார்.

"பதற்றத்தைக் குறைக்க முயற்சி எடுத்த பாகிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் செளதி அரேபியா உள்ளிட்ட அனைத்துப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவிப்பதோடு அவர்களை ஆதரிக்கிறோம்" என்று அவர் எழுதியுள்ளார்.

நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே-வும் போர்நிறுத்தத்தை வரவேற்று பாகிஸ்தானைப் புகழ்ந்துள்ளார். "

இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்கிறேன். உலகம் ஒரு ஆபத்தான பதற்றத்தின் விளிம்பில் நின்றபோது, இது ராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது, என்று 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்

"துருக்கி மற்றும் எகிப்து நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைக்காகத் தொடர்ந்து முயற்சி செய்த பாகிஸ்தானைப் பாராட்டுகிறேன்".

அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சியின் வெளியுறவு விவகாரக் குழுவின் மூத்த உறுப்பினர் கிரிகோரி மேக்ஸ், இந்தப் போர்நிறுத்தத்தால் அமெரிக்க வீரர்கள் மற்றும் இருதரப்பிலும் பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளார். "இந்த முடிவை எட்டுவதில் பாகிஸ்தான் ஆற்றிய பங்கினைப் பாராட்ட விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸும் போர்நிறுத்தத்தை வரவேற்று, ஒத்துழைப்பு வழங்கிய பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் முயற்சிகளைப் பாராட்டினார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லயனும் மத்தியஸ்த முயற்சிகளுக்காகப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.

மலேசியப் பிரதமர், எந்தவித அச்சமோ மிரட்டலோ இன்றி அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பாகிஸ்தானின் முயற்சி, முஸ்லிம் ஒற்றுமை மற்றும் சர்வதேசப் பொறுப்பின் மிக உயர்ந்த பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது, என்று கூறினார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்தின் அறிக்கைகள்

அமெரிக்கா - இரான் போர்நிறுத்தம் குறித்து பாகிஸ்தானின் அண்டை நாடுகளான இந்தியாவும் வங்கதேசமும் அறிக்கை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இரண்டு நாடுகளுமே பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நாங்கள் போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீண்ட கால அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம். நாங்கள் ஏற்கனவே கூறியது போல, இந்த மோதலை விரைவாக முடிக்கப் பதற்றத்தைக் குறைப்பதும், பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் அவசியமானவை" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "இந்த மோதல் ஏற்கனவே மக்களுக்குப் பெரும் துயரத்தை அளித்துள்ளது மற்றும் உலகின் எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக வலையமைப்பை சீர்குலைத்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய வர்த்தகம் தடையின்றித் தொடரும் என்று நம்புகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கதேச வெளியுறவு அமைச்சகமும் தற்காலிக போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளது.

"மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வங்கதேசம் வரவேற்கிறது. இது பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைப்பதற்கான ஒரு நேர்மறையான படியாக வங்கதேசம் கருதுகிறது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் போர்நிறுத்தத்தை மதித்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு நிலையான மற்றும் நீடித்த தீர்வை நோக்கிச் செயல்படுவார்கள் என வங்கதேசம் நம்புகிறது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறுகையில், "போர்நிறுத்தத்தைச் சாத்தியமாக்கியதில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரின் ராஜதந்திர முயற்சிகளையும் வங்கதேசம் பாராட்டுகிறது. அனைத்துப் பிணக்குகளையும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும், தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் வங்கதேசம் மீண்டும் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்தது.

'ஆசிமும் ஷெபாஸும் உலகைக் காப்பாற்றிவிட்டனர்'

மறுபுறம், ஆய்வாளர்களும் பார்வையாளர்களும் இந்த போர்நிறுத்தத்தைப் பாகிஸ்தானின் மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதுகின்றனர்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சதானந்த் தூமே 'எக்ஸ்' தளத்தில், "நீங்கள் எப்படிப் பார்த்தாலும், இது பாகிஸ்தானுக்கு ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றி" என்று எழுதியுள்ளார்.

உலகளாவிய பேரழிவைத் தடுப்பதில் ஒரு பொறுப்பான நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளதாக முக்கிய நாடுகள் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வாளர் மைக்கேல் குகெல்மேன் எழுதுகையில், "இன்று இரவு, பாகிஸ்தான் பல ஆண்டுகளில் இல்லாத தனது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்திற்கு இத்தகைய சிக்கலான பணிகளைச் செய்யும் திறன் இல்லை என்று கூறிய விமர்சகர்களின் வாதங்களை இது பொய்யாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

காஷ்மீரில் பிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் மிர்சா வஹீத், இந்தப் போர்நிறுத்தம் ஒரு புதிய உலகச் சூழலின் முன்னோடி என்றும், பொதுவாகப் புறக்கணிக்கப்படும் ஒரு நாடு அமைதியை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய பத்திரிகையாளர் சிரில் அல்மெய்டா, "ஆசிம் மற்றும் ஷெபாஸ்.. உலகைக் காப்பாற்றிவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்குப் பதிலளித்த பாகிஸ்தான் அதிபரின் ஆலோசகர் முர்தசா சோலாங்கி, "வெள்ளிக்கிழமை ஏன் முக்கியமானது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மற்றும் இரானிய பேச்சுவார்த்தைக் குழுக்களை வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வருமாறு பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூடான் நாளிதழான 'தி பூட்டனீஸ்' (The Bhutanese) ஆசிரியர் டென்சிங் லாம்சாங் கூறுகையில், பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஃபீல்டு மார்ஷல் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரச் சாதனையைப் படைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு