டெல்லி போலீஸ் போராட்டக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்

 பல்வேறு இடங்களில் ஏராளமான போராட்டக்காரர்கள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
படக்குறிப்பு, சிஜேபி போராட்டங்களின்போது டெல்லி காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எழுதியவர், வினீத் பல்லா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிராக அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அதையொட்டி, முன்கூட்டியே டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது. ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, பல டெல்லி மெட்ரோ நிலையங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும், பல்வேறு இடங்களில் ஏராளமான போராட்டக்காரர்கள், தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன.

சட்டவிரோத காவல், காவல்துறையினரின் அத்துமீறல்கள், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் பொதுப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவை குறித்து மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகளுக்கான காரணங்களை டெல்லி காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.

காவல்துறை கூறியது என்ன?

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக, ஜூலை 20 முதல் அக்டோபர் 6-8ஆம் தேதி வரை நடந்த சிஜேபி போராட்டங்கள் குறித்து டெல்லி காவல்துறை பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

கடுமையான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், கூட்டத்தினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான காவலர்கள் காயமடைந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் மற்றும் தலைவர்களிடம் நடத்தப்பட்ட விதம் குறித்தும் காவல்துறை தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளது.

மேலும், இணைய சேவையை முடக்கியது, ரயில்களை ரத்து செய்தது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடியது ஆகியவற்றுக்கான காரணங்களையும் மத்திய உள்துறைச் செயலாளர், ரயில்வே துறை மற்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளன.

 டெல்லியில் நடந்த சிஜேபி போராட்டம்
படக்குறிப்பு, இந்தப் புகைப்படம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடந்த சிஜேபி போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது.

1. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

ஜூலை 20ஆம் தேதி நடந்த சிஜேபி போராட்டத்தில், கலவரம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பங்கேற்றதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.

சுமார் 30,000 பேர் கொண்ட கும்பல் காவல்துறையினரைத் தாக்கியதாகவும், அவர்களின் தலைக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கழற்றியதுடன், கற்கள் பதிக்கப்பட்ட சாலையில் அவர்களை இழுத்துச் சென்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தை கும்பல் வன்முறை மற்றும் கும்பல் படுகொலை என விவரித்துள்ள டெல்லி காவல்துறை, இந்தக் காலகட்டத்தில் 240க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகவும் கூறுகிறது.

2. 'சுயாதீன பத்திரிகையாளர்' என்ற பெயரில் வந்தவர்கள் மீது காவல்துறை சுமத்திய குற்றச்சாட்டுகள்

அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை நடந்த போராட்டங்களின்போது, சுயாதீன பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் சிலர் கூட்டத்தினரைத் தூண்டிவிட்டதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.

அவர்கள் காவல்துறையினரைத் தள்ளிவிட்டதுடன், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது. இந்தச் சம்பவங்களில் பெண் காவலர்கள் உள்படப் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

3. தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்?

போராட்டம் நடந்த இடங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தலைவர்கள் காவலில் வைக்கப்படவில்லை எனவும், காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிகளான காவல் ஆய்வாளர்களின் (SHO) தனி அறைகளில் அவர்கள் அமர வைக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைவர்களின் பதவிக்குரிய கண்ணியம் காக்கப்படுவதை உறுதி செய்ய, அவர்களுக்கு "தேநீர், காபி, உணவு மற்றும் பிற சிற்றுண்டிகள்" வழங்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

தலைவர்களின் பதவிக்குரிய கண்ணியம் காக்கப்படுவதை உறுதிசெய்ய, அவர்களுக்கு “தேநீர், காபி, உணவு மற்றும் பிற சிற்றுண்டிகள்” வழங்கப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.

4. போராட்டக்காரர்களில் காவலில் எடுக்கப்பட்ட பொது மக்கள் எங்கு வைக்கப்பட்டனர்?

போராட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்கள்கூட சிறையில் அடைக்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை கூறுகிறது.

தடை உத்தரவுகளை மீறியவர்கள் தற்காலிகத் தடுப்புக் காவல் மையங்களில் இரண்டு முதல் ஆறு மணிநேரம் வரை மட்டுமே வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களுக்கு "சூடான, புதிய மற்றும் தரமான உணவு" வழங்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.

5. ரைசினா ஹில் பகுதியில் 24 மணிநேரம் மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது ஏன்?

ரைசினா ஹில்லில் இருந்து நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் 24 மணிநேரம் மொபைல் இணைய சேவையை முடக்க அரசு ஒப்புதல் அளித்ததாக மத்திய உள்துறைச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்டோபர் 9ஆம் தேதி இரவு 10 மணி முதல் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 10 மணி வரை மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது. பொது அமைதியைப் பராமரிப்பதற்காக எடுக்கப்பட்ட "சூழ்நிலைக்கு ஏற்ற நடவடிக்கைகள்" என உள்துறைச் செயலாளர் இதை விவரித்துள்ளார்.

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை இணைய இணைப்புகள் வேண்டுமென்றே முடக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

6. எத்தனை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன?

அக்டோபர் 9ஆம் தேதி மாலை 4 மணி முதல் அக்டோபர் 10ஆம் தேதி இறுதி வரை, டெல்லி வழியாகச் செல்லும் அல்லது டெல்லியில் பயணத்தை முடிக்கும் சுமார் 200 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தவிர, அக்டோபர் 10ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்கு வந்த 41 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதில், புதுடெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த 29 ரயில்கள், நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்த ஒன்பது ரயில்கள் மற்றும் திலக் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வந்த மூன்று ரயில்கள் அடங்கும்.

புதுடெல்லி ரயில் நிலையத்துக்கு வந்த 29 ரயில்கள், நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு வந்த ஒன்பது ரயில்கள் மற்றும் திலக் பிரிட்ஜ் ரயில் நிலையத்துக்கு வந்த மூன்று ரயில்கள் அடங்கும்.
படக்குறிப்பு, தனது உத்தரவின் பேரில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் 25 மணிநேரம் மூடப்பட்டதாக டெல்லி காவல்துறை உறுதி செய்துள்ளது.

7. 25 மணிநேரத்திற்கு 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தது ஏன்?

டெல்லி காவல்துறையின் உத்தரவின்பேரில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் 25 மணிநேரம் மூடப்பட்டிருந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி இரவு 9 மணி முதல் அக்டோபர் 10ஆம் தேதி இரவு 10 மணி வரை இந்த நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறையின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கட்டுக்கடங்காத கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை நோக்கிச் செல்வதைத் தடுப்பதே" இதன் நோக்கம் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

8. வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்களா?

வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில்முறைப் பணியாளர்கள் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி காவல்துறை, "யாரும் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. எந்தவொரு தொழில்முறைப் பணியாளரும் தங்களது தொழில்முறைப் பணிகளைச் செய்வதில் இருந்து எந்த வகையிலும் தடுக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறியவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் அருகில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் காவல்துறை கூறுகிறது.

"உச்ச நீதிமன்றம் போன்ற மதிப்புமிக்க வளாகத்தைப் போராட்டம் நடத்தும் இடமாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அதன் கண்ணியம் அனைத்து சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

9. மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசலுக்கு காங்கிரஸ் போராட்டங்கள் காரணமாக இருந்தனவா?

அக்டோபர் 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணியால் மத்திய டெல்லியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.

இந்தப் போராட்டங்களால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், பலர் தங்கள் விமானங்கள் மற்றும் ரயில்களைத் தவறவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

10. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் காவல்துறை பேருந்துகளைச் சேதப்படுத்தினார்களா?

அக்டோபர் 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு காவல்துறை பேருந்துகளில் ஏற்றப்பட்டவர்கள், வாகனங்களின் டயர்களை கிழித்ததுடன், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்ததாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டுகிறது. இவற்றை "வெளிப்படையான வன்முறைச் சம்பவங்கள்" என்று காவல்துறை விவரித்துள்ளது.

11. காவல்துறைக்கு எத்தகைய உளவுத் தகவல்கள் கிடைத்தன?

அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் பொது அமைதி தொடர்பாகப் பெரிய அளவிலான பிரச்னை ஏற்படக்கூடும் என்ற குறிப்பிட்ட உளவுத் தகவல்கள் கிடைத்ததாக டெல்லி காவல்துறை கூறுகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வக் கடமையை நிறைவேற்றும் வகையில் "நல்லெண்ணத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை" என டெல்லி காவல்துறை தனது செயல்பாட்டை விவரித்துள்ளது.

அந்த நேரத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பொது அமைதி தொடர்பான பெரிய சம்பவம் எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அப்போதைய சூழலுக்கு இது பொருத்தமானதாக இருந்தது என்றும் காவல்துறை கூறுகிறது.

அக்டோபர் 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேரணியால் மத்திய டெல்லியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதாக டெல்லி காவல்துறை கூறுகிறது.
படக்குறிப்பு, இந்த உத்தரவுகள் அமலில் இருந்த பகுதிகளில் மட்டுமே மக்கள் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

12. எந்தெந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன?

பல காவல் நிலையங்கள், பிஎன்எஸ்எஸ் (BNSS) பிரிவு 163ஆவது பிரிவின்கீழ் தடை உத்தரவுகளைப் பிறப்பித்ததாக டெல்லி காவல்துறை கூறுகிறது. ஜந்தர் மந்தர் அமைந்துள்ள காவல் நிலையத்தின் எல்லைக்குள் மட்டுமே இந்த உத்தரவுகள் வரையறுக்கப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த உத்தரவுகளை காவல்துறை ஆவணங்களாகச் சமர்ப்பிக்கவில்லை. எந்தெந்த காவல் நிலையங்கள் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தன என்பதையும் குறிப்பிடவில்லை. இந்த உத்தரவுகள் நடைமுறையில் இருந்த பகுதிகளில் மட்டுமே மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில், புதுடெல்லி காவல் துணை ஆணையர் (டிசிபி), புதுடெல்லி மாவட்டத்தில் இத்தகைய உத்தரவுகள் நடைமுறையில் இருப்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மற்ற எந்தெந்த பகுதிகளில் இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தன அல்லது இன்னும் நடைமுறையில் உள்ளன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

இந்தப் போராட்டம் நடந்தது ஏன் ஜூலை மாத சம்பவத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, சிஜேபி (CJP) மற்றும் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் டெல்லியில் 7,500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு மறுநாள், ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் அனுபவமும் இருந்ததாக டெல்லி காவல்துறை கூறுகிறது. வினாத்தாள் கசிவு மற்றும் அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு எதிராக சிஜேபி போராட்டம் நடத்தியது. அப்போது போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றனர்.

அந்தப் போராட்டத்தின்போது தடுப்புகள் உடைக்கப்பட்டதாகவும், அரசாங்க சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், காவல்துறையினர் தாக்கப்பட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையில், போராட்டக்காரர்கள், குறிப்பாகப் பெண்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றம் சாட்டினார்.

அப்போது கலவரத்தில் ஈடுபடுதல், அரசு மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்துதல், பணியில் இருந்த அரசு ஊழியர்களைத் தாக்குதல் ஆகியவை தொடர்பான பிரிவுகளின்கீழ் காவல்துறை ஐந்து முதல் தகவல் அறிக்கைகளைப் (FIR) பதிவு செய்திருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு