'புற்றுநோயால் 18 வயதில் கருப்பை திசுவை உறையவைத்தேன், 44 வயதில் குழந்தைக்கு தாயாகியிருக்கிறேன்'

23 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருப்பைத் திசு
படக்குறிப்பு, கடந்த மாதம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த கசாண்ட்ரா பேகன் (வலது), தனது தாயுடன் (இடது)
    • எழுதியவர், ரெபக்கா தார்ன்
    • பதவி, க்ளோபல் ஹெல்த்
    • எழுதியவர், சல்மா நூர்முகமது
    • பதவி, நியூஸ் ஹவர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

17 வயதில், அரிய வகை ரத்தப் புற்றுநோயான ஹாட்ஜ்கின் லிம்ஃபோமா (Hodgkin's lymphoma) இருப்பது கண்டறியப்பட்டபோது, கசாண்ட்ரா பேகனுக்கு ஆரம்ப கட்ட கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. அது முதலில் வெற்றிகரமாக இருந்தது. ஆனால், ஓர் ஆண்டுக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டது. இந்த முறை நோய் தீவிரமாக இருந்ததால், உடனடியாக கடுமையான கீமோதெரபி சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

பிபிசி உலக சேவையின் நியூஸ்ஹவர் நிகழ்ச்சியிடம் பேசிய பேகன், "அப்போது நான் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தேன். அதே சமயத்தில் பள்ளி இறுதித் தேர்வுகளும் நடந்து கொண்டிருந்தன. அத்தகைய சூழலில் இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது," என்று கூறினார்.

இளம் வயதில் இருந்தபோதும், சிகிச்சையின் நீண்டகால விளைவுகள் மற்றும் எதிர்காலத்தில் தாயாகும் வாய்ப்பை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பேகன் சிந்திக்கத் தொடங்கினார்.

கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாக்க மாதவிடாய் சுழற்சிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் அவரிடம் இல்லை. எனவே அப்போது பரிசோதனை நிலையில் இருந்த மாற்று முறையான கருப்பைத் திசு சேமிப்பு மற்றும் மீள் பொருத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பேகனின் கருப்பையிலிருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகள் 23 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டன. பின்னர், 44 வயதில் அந்தத் திசுக்கள் மீண்டும் அவரது உடலில் பொருத்தப்பட்டன. அதன் விளைவாக, கடந்த மாதம் அவர் லாண்டன் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருப்பைத் திசுவை மீண்டும் பொருத்திய பிறகு பிறந்த முதல் குழந்தை இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தனது பதின்பருவத்தை நினைவுகூரும் பேகன், தாயாக வேண்டும் என்ற ஆசை எப்போதும் தன்னிடம் இருந்ததாகக் கூறுகிறார். இயற்கையாக குழந்தை பெற முடியாமல் போகலாம் என்ற அச்சத்தை எதிர்கொண்டபோது, அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

"இயற்கையாக கருவுற முடியாமல் போனால், எனக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை என்னால் ஏற்க முடியவில்லை," என்று அவர் கூறினார்.

இயற்கையாகக் கருத்தரிக்க முடியாமல் போகும் வாய்ப்புள்ள பெண்களுக்குக் கருமுட்டைகளை உறையவைத்துச் சேமிப்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையாகும். ஆனால், இந்த நடைமுறையில் கருமுட்டைகளைச் சேகரிப்பதற்கு முன்பு பல வாரங்களுக்குத் தொடர்ச்சியாக ஹார்மோன் ஊசிகளைச் செலுத்த வேண்டும். அதற்கான அவகாசம் தனக்கு இல்லை என்று மருத்துவர்கள் பேகனிடம் தெரிவித்திருந்தனர்.

சிகிச்சை தொடங்குவதற்கு முன், கருப்பைத் திசுவின் ஒரு பகுதியை அகற்ற வேண்டும் என்று தனது மருத்துவர்களை அவர் சம்மதிக்க வைத்தார். பின்னர், பிரிட்டனில் இத்தகைய சிறப்பு அறுவைச் சிகிச்சையில் பயிற்சி பெற்ற சில மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சாரா மேத்யூஸை அவர் அணுகினார்.

மேத்யூஸ், பேகனின் கருப்பையிலிருந்து நான்கு திசு மாதிரிகளை எடுத்தார். எனினும், அவை ஒருநாள் குழந்தைப் பிறப்புக்கு வழிவகுக்கும் என்பதற்கு அப்போது எந்த உத்தரவாதமும் இல்லை.

23 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருப்பைத் திசு
படக்குறிப்பு, ஒருநாள் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் நம்பிக்கையில், பேகன் கருப்பை முட்டைச்சுரப்பி திசு மாற்று அறுவைச் சிகிச்சையை நாடினார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பேகனின் உயிரைக் காப்பாற்றிய சிகிச்சையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையும் , தீவிர கீமோதெரபியும் இடம்பெற்றன. சிகிச்சை வெற்றியடைந்ததால் அவர் மீண்டும் புற்றுநோய் இல்லாத நிலைக்குத் திரும்பினார். ஆனால் மருத்துவர்கள் எதிர்பார்த்ததுபோல, கடுமையான சிகிச்சை அவரது கருப்பைகளுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, 33 வயதிலேயே அவர் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்த நிலையை எட்டினார்.

குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரான நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட தனது ஆரோக்கியமான திசுக்களை மீண்டும் உடலில் பொருத்தித் தரக்கூடிய மருத்துவரைத் தேடும் பத்து ஆண்டு போராட்டத்தை அவர் தொடங்கினார்.

பேகன் கருப்பைத் திசுவை அகற்றியபோது, அந்த நடைமுறைக்கான சட்ட விதிமுறைகள் பிரிட்டனில் அமல்படுத்தப்படவில்லை. இதனால், பின்னர் திசுவை மீண்டும் பொருத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இருக்கவில்லை.

இந்த நீண்ட பயணத்தின் முழுவதும் டாக்டர் சாரா மேத்யூஸ் அவருக்கு துணையாக இருந்தார். இறுதியில், இந்த சிகிச்சையை மேற்கொள்ளத் தயாராக இருந்த இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையை அவர் கண்டுபிடிக்க உதவினார்.

அதன்படி, திசுக்கள் இஸ்ரேலின் ரமாத்கான் நகரில் உள்ள ஷீபா மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து காஸாவில் போர் வெடித்ததால், பேகன் பல ஆண்டுகளாக எதிர்நோக்கியிருந்த சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது.

"எனக்கிருந்த ஒரே நம்பிக்கையும் அழிந்துவிடுமோ என்று அப்போது நினைத்தேன்," என்று அவர் பின்னர் தெரிவித்தார்.

2024 மே மாதத்தில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக, பேகன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பாதுகாப்பாக அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது. அவர் பிரிட்டன் திரும்பும் விமானத்தில் ஏறிய சில மணி நேரங்களிலேயே அந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.

"இது ஒரு நாவலில் வரும் சம்பவம் போல இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

23 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருப்பைத் திசு
படக்குறிப்பு, பேகனின் முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் சாரா மேத்யூஸ், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

கருப்பைத் திசு மாற்றுச் சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது?

இந்த முறையில், அறுவைச் சிகிச்சை மூலம் கருப்பைத் திசுவின் சிறு பகுதிகள் அகற்றப்படுகின்றன. அவை ஆய்வகத்தில் உறைநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. பின்னர் நோயாளர் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராகும்போது, அந்தத் திசுக்கள் மீண்டும் உடலில் பொருத்தப்படுகின்றன.

இது தோல் மாற்று அறுவைச் சிகிச்சையைப் போன்றது. கரையவைக்கப்பட்ட திசு மீதமுள்ள கருப்பை அருகே பொருத்தப்படும்போது, அது சுற்றியுள்ள ரத்த நாளங்களுடன் மீண்டும் இணைகிறது. அதன் பின்னர் கருப்பை வழக்கம்போல் மாதந்தோறும் கருமுட்டைகளை வெளியிடத் தொடங்கும்.

2024-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, இச்சிகிச்சைக்குப் பிறகு 94 சதவீதம் வரை பெண்களின் இனப்பெருக்கச் சுழற்சி மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளது. 2022-ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்வின்படி, கருப்பைத் திசு மாற்றுச் சிகிச்சைகளில் சுமார் 28 சதவீதம் உயிருடன் குழந்தை பிறப்பதற்கு வழிவகுத்துள்ளன.

2016-ஆம் ஆண்டு, துபையை சேர்ந்த 24 வயதான மொஅசா அல் மட்ரூஷி, பருவமடைவதற்கு முன்பே உறையவைக்கப்பட்ட கருப்பைத் திசுவைப் பயன்படுத்திக் குழந்தை பெற்ற முதல் நபராகக் கருதப்பட்டார்.

உலகளவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருப்பைத் திசு மாற்றுச் சிகிச்சையின் மூலம் பிறந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

"எனக்கு நானே நன்றி சொல்ல வேண்டும்"

23 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருப்பைத் திசு

2024-ஆம் ஆண்டு திசு மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்ட சில மாதங்களிலேயே, பேகனுக்கு மீண்டும் மாதவிடாய் தொடங்கியது. தனது துணையுடன் இயற்கையாக கருவுற முயன்றும் வெற்றி பெறாததால், மருத்துவர்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையைப் பரிந்துரைத்தனர்.

தம்பதியினர் மூன்று முறை அந்த சிகிச்சை மேற்கொண்டனர். இறுதியாக, 2025-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில், பேகன் தான் கர்ப்பமாக இருப்பதை பரிசோதித்து தெரிந்துக் கொண்டார்.

"இளம் வயதில் மிகவும் ஆரோக்கியமாக இருந்த என் உடல்தான், இந்த வயதில் எனக்குப் புதிய வாழ்க்கையைத் திருப்பிக் கொடுத்தது," என்று அவர் கூறுகிறார்.

பேகனின் மகன் லாண்டன் இந்த ஆண்டு செப்டம்பரில் பிறந்தார். இதனுடன், பேகன் புற்றுநோயிலிருந்து விடுபட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தனது கதையைப் பகிர்ந்த பிறகு, அதனால் ஊக்கமடைந்த பல பெண்களிடமிருந்து செய்திகள் வந்ததாக அவர் கூறுகிறார்.

இந்நிலையில், குழந்தைப் பருவப் புற்றுநோய்களின் குணமடையும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதால், இளம் புற்றுநோய் நோயாளிகளுக்கான கருவுறுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக டாக்டர் மேத்யூஸ் தெரிவித்தார்.

"இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி, இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அந்த இயல்பான வாழ்க்கையின் முக்கியமான பகுதி, ஒரு குடும்பத்தை உருவாக்கும் திறனாகும்," என்றார்.

தனது கதையைக் கேட்போர் பலரைப் போலவே, இளம் வயதில் தான் காட்டிய உறுதியை நினைத்துப் பேகனும் இன்று ஆச்சரியப்படுகிறார்.

"18 வயதில் நான் இருந்த நிலைக்கு என்னை மீண்டும் கொண்டு சென்று பார்க்க முயல்கிறேன். அந்த வயதில் நான் எப்படி இவ்வளவு விடாமுயற்சியுடன் இருந்தேன்? எப்படி இவ்வளவு உறுதியுடன் போராடினேன்? என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்தப் போராட்டத்தை நினைத்து இன்று எனக்கே நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு