விமானத்திற்குள் நுழைந்து ஒருவரை காவல்துறை கைது செய்ய முடியுமா? ஆணை பெண் காவலர் கைது செய்யலாமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சனிக்கிழமை, டெல்லி விமான நிலையத்தில் விமானத்திற்குள் இருந்த 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
தீப்கே வெளியிட்ட காணொளியில், "இந்த நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். இந்திரா காந்தி கூட செய்யாத வகையில், நாங்கள் விமானங்களில் தடுத்து வைக்கப்படுகிறோம். இது சர்வாதிகாரம், ஆனால் நாங்கள் அவர்களுக்கு அஞ்சவில்லை." என்று கூறியிருந்தார்.
தன்னைக் காவலில் எடுக்க வந்த காவல்துறையினரிடம் அபிஜித் தீப்கே, "நான் உங்களுக்கு அஞ்சவில்லை, நாங்கள் கைது செய்யப்படத் தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.
அபிஜித், சௌரவ் மற்றும் அசுதோஷ் ஆகியோரைக் காவலில் எடுக்க பெண் காவலர்கள் முன்வந்தனர். அப்போது, ஆண் காவலர்களை அனுப்ப வேண்டும் என்று தீபக்கும் அவரது சகாக்களும் வலியுறுத்தினர்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' நடத்தவிருந்த போராட்டத்திற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் காவல் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
"அபிஜித் தீப்கே, அசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் அக்டோபர் 10 அன்று இந்திய தண்டனைச் சட்டத்தின் (BNSS) பிரிவு 126/170-ன் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அனைத்து சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, அக்டோபர் 11 அன்று அவர்கள் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்," என்று டெல்லி காவல்துறை 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டது.
விமானத்திற்குள் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
"அமைதி மற்றும் நன்னடத்தையைப் பேணுதல் என்ற நிபந்தனையின் பேரில், ஓராண்டு காலத்திற்கு ரூ. 50,000 மதிப்பிலான பிணைப் பத்திரத்தை சமர்ப்பித்த பிறகு, சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்."
புது தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானத்திற்குள் அபிஜித் தீப்கே மற்றும் அவரது சகாக்களை டெல்லி காவல்துறை தடுத்து வைத்தபோது, இந்த காவல் நடவடிக்கை தொடர்பான காணொளியை பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, "விமானத்திற்குள் காவலர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர் மற்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்திடம் ஏர் இந்தியா விளக்கம் கோரியுள்ளது."
காவலர்கள் ஒரு விமானத்திற்குள் நுழைந்து ஒருவரைக் கைது செய்ய முடியுமா? இதற்கான விடையை அறிய நாங்கள் முன்னாள் மூத்த காவல் அதிகாரிகளிடம் பேசினோம்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் பாண்டே பிபிசியிடம் கூறுகையில், "இந்தியாவிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறை அல்லது விசாரணை அமைப்புகளுக்கு உண்டு என்று நாட்டின் சட்டம் கூறுகிறது. பிஎன்எஸ் (இந்திய நீதிச் சட்டம்), பிஎன்எஸ்எஸ் (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்) மற்றும் பிஎஸ்ஏ (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றின் கீழ் அவர்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன," என்றார்.
மேலும் அவர், "நாங்கள் கார்கள், ரயில்கள் அல்லது வீடுகளிலிருந்து நபர்களைக் கைது செய்கிறோம். விமானம் இந்திய மண்ணில் இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்திலும் நிலைமை வேறுபட்டதல்ல," என்று குறிப்பிட்டார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார் கூறுகையில், "ஏதேனும் சர்வதேச விதிகள் அல்லது உள்ளூர் அறிவுறுத்தல்கள் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் விவகாரம் இந்தியாவிற்குள் இருக்கும்போது, காவல்துறை எங்கு வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "ஒரு குற்றம் நடைபெறக் கூடும் என்ற தகவல் காவல்துறைக்குக் கிடைத்தால், அவர்கள் சும்மா இருக்க முடியாது," என்று தெரிவித்தார்.
"காவல்துறையினர் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் குற்றத்தைத் தடுப்பதற்கோ, குற்றவாளியைப் பிடிப்பதற்கோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கையாகவே அமைகிறது."

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
விதிகள் என்ன சொல்கின்றன?
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 'விமான (பாதுகாப்பு) விதிகள், 2023'-ஐ அறிவித்துள்ளது. 'இந்திய விமானச் சட்டம், 2024' பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான கடமைப் பகிர்வை வரையறுக்கிறது.
விமானப் பாதுகாப்பு விதிகளின் விதி 22-ன் படி, செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டுகள் கொண்ட விமானப் பயணிகள், பார்வையாளர்கள் (நுழைவுச் சீட்டுகளுடன்) அல்லது சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகத்தின் தலைமை இயக்குநர் அல்லது மத்திய அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பெயரை வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், சனிக்கிழமை விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய காவல்துறை அதிகாரிகளுக்குச் சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
விமான நிறுவன அதிகாரி ஒருவர் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' இதழிடம் கூறுகையில், "விமானம் புறப்படுவதற்கு முன் கதவுகள் மூடப்படும் நேரத்திலிருந்து, விமானம் நிறுத்தப்பட்ட பிறகு கதவுகள் திறக்கப்படும் வரை, அது 'பறக்கும் நிலையில்' இருப்பதாகக் கருதப்படுகிறது. இக்காலகட்டத்தில், விமானத்தை இயக்கும் முதன்மை விமானிக்கு முழு அதிகாரம் உள்ளது," என்று கூறினார்.
தீவிரமான சூழல்களில், கதவுகள் திறக்கப்பட்ட பிறகு எந்தவொரு பாதுகாப்பு அமைப்பும் விமானத்திற்குள் நுழைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டபோது எழுப்பப்பட்ட மற்றொரு கேள்வி என்னவென்றால், ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து விமானப் பயணிகளின் பட்டியலைக் காவல்துறை கேட்க முடியுமா என்பதுதான்.
இதுகுறித்து அருண் குமார் கூறுகையில், "விசாரணை அமைப்பானது தேவைப்படும் போதெல்லாம் இத்தகைய தகவல்களைக் கோரலாம். பல வழக்குகளில் நாங்கள் இதைக் கண்டறிந்துள்ளோம். ரயிலாக இருந்தாலும் சரி, விமானமாக இருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான வழக்குகளில் காவல்துறை ரயிலுக்குள்ளோ அல்லது விமான நிலையத்திலோ கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது," என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "இதற்காக ஒரு நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் காவல்துறை இத்தகைய தகவல்களைக் கோரலாம்," என்றும் கூறினார்.
ஆண்களை பெண் காவலர்கள் தடுத்து வைக்க முடியுமா?
விமானத்திற்குள் பெண் காவலர்கள் இருந்தது குறித்தும் அபிஜித் தீப்கே கேள்விகளை எழுப்பினார்.
ராஜேஷ் பாண்டே கூறுகையில், "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) காவல்துறை என்பது ஆண் அல்லது பெண் என்று பிரிக்கப்படவில்லை. மாநில அரசுகள், மனித உரிமை அமைப்புகள் அல்லது நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி, அவ்வப்போது பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல வழக்குகளில் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்."
"காவல்துறை அல்லது புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் சமூகத்தின் பரந்த நலன் கருதி, அசாதாரணமான சூழலைக் கையாள அல்லது குற்றங்களைத் தடுக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கை பெண் அதிகாரி ஒருவர் விசாரிக்கும்போது, அவர் குற்றம் சாட்டப்பட்ட ஆணைக் கைது செய்யமாட்டாரா?"
இது குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் குமார் கூறுகையில், "இவ்விஷயத்தில் சட்டமானது காவல்துறையை ஆண் அல்லது பெண் என்று பார்க்காமல், வெறும் காவல்துறையாகவே பார்க்கிறது. ஒருவேளை அப்படிப் பார்க்கத் தொடங்கினால் - இந்தியாவில் பெண்களின் மக்கள் தொகை சுமார் 50 சதவீதமாக இருக்கும் நிலையில், பெண் காவலர்களின் எண்ணிக்கை வெறும் 13 சதவீதமாக மட்டுமே உள்ளது - அப்படியென்றால் காவல்துறை எவ்வாறு செயல்பட முடியும்?"
மேலும் அவர் கூறுகையில், "எந்தவொரு விசாரணை தொடர்பாகவும் ஆண் அல்லது பெண் காவலர் யாரையும் கைது செய்யலாம் மற்றும் விசாரிக்கலாம். பெண்களைப் பொறுத்தவரை, இரவு நேரத்தில் பெண் காவலர் யாரும் இல்லாத சூழலில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சூழ்நிலையை காவல்துறை விளக்க வேண்டியிருக்கும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































