'போராட்ட களத்தை அடையும் முன்பே காவலில் எடுப்பு' – காக்ரோச் ஜனதா கட்சியின் உத்தி குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

- எழுதியவர், ஷிவாங்கி ஜெய்ஸ்வால் & ஷுபாங்கி மிஷ்ரா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்கு காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு செல்ல முயன்ற அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டனர்.
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகளான அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் டெல்லி வந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்பே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. ஒருபுறம், டெல்லி காவல்துறையின் செயல்பாட்டை சிஜேபி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். மறுபுறம், தங்களது முழு பயணத் திட்டத்தையும் சிஜேபி ஏன் வெளிப்படையாக அறிவித்தது என்ற கேள்வியும் எழுந்தது.
சமூக ஊடகங்களில், இருப்பிடத்தை ரகசியமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் மாணவர் தலைவர் நேஹா போராவின் உத்தியுடன் சிஜேபி தலைவர்களின் அணுகுமுறை ஒப்பிடப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
'அரசுக்கு எதிராக வெளிப்படையாக நிற்பதே ஒரு உத்தி'
சிஜேபியின் போராட்ட அழைப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா கருத்து தெரிவித்தார்.
அவரின் பார்வையில், டெல்லி நோக்கிச் செல்லும் சாதாரண போராட்டக்காரர்களையே அரசு முன்கூட்டியே கண்காணித்து தடுத்து வைக்கும் சூழலில், சிஜேபி தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை ரகசியமாக வைத்திருப்பது எளிதானதோ அவசியமானதோ அல்ல.
"அரசு தங்களை ஒடுக்க முயற்சிக்கும் அளவுக்கு, அதனால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்பதை சிஜேபி புரிந்துகொண்டுள்ளது," என்று அவர் கூறுகிறார்.
மற்றொரு மூத்த பத்திரிகையாளரான ஹேமந்த் அத்ரி, சிஜேபியின் திட்டமிடல் சில கேள்விகளை எழுப்பியிருந்தாலும், இது இப்போதுதான் ஆரம்பித்திருக்கிற இயக்கம் என்பதால் அதனை முழுமையாக மதிப்பிடுவது சரியானதாக இருக்காது என்கிறார்.
"போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகள், சிஜேபியைப் பற்றி அரசுக்கு அச்சம் இருந்ததை காட்டுகின்றன," என அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
திட்டமிட்ட குழப்பமா?
போராட்டத்தின் தேதி, இடம் குறித்து சிஜேபி தெளிவாக அறிவித்திருந்தபோதும், போராட்டம் எந்த நேரத்தில் துவங்கும், ஒருங்கிணைப்பு எவ்வாறு இருக்கும் போன்ற விவரங்கள் தெளிவாக இல்லாததால் ஆதரவாளர்கள் குழப்பமடைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளித்த அரசியல் ஆய்வாளர் சஞ்சய் குமார், சில தகவல்களை வேண்டுமென்றே தெளிவில்லாமல் விட்டிருப்பதும் இயக்கத்தின் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிறார்.
"நாடு முழுவதிலிருந்தும் வரும் போராட்டக்காரர்கள் ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் திரள்வது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தங்களை போராட விடப்போவதில்லை என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். எப்படியும் அரசு அவர்களை கண்டுபிடித்திருக்கும்," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சிஜேபி மீது முன்வைக்கப்பட்ட மற்றொரு விமர்சனம், அதன் முக்கிய தலைவர்கள் நேரடியாக களத்தில் நின்று காவல்துறையின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவில்லை என்பதாகும்.
இதற்கு அரசியல் விமர்சகர் சஞ்சய் சிங், "எந்த அமைப்பிலும் மூத்த தலைவர்கள் திட்டமிடும் பணியைச் செய்கிறார்கள். செயல்படுத்தும் பொறுப்பு வேறு குழுக்களிடம் இருக்கும். ஒரு தலைவர் களத்தில் இருந்தாரா இல்லையா என்பதின் அடிப்படையில் மட்டும் அவரை மதிப்பிட முடியாது," என்றார்.

பட மூலாதாரம், X/Reuters
முந்தைய போராட்டத்திற்குப் பிறகு சிஜேபி எவ்வளவு பக்குவமடைந்துள்ளது?
மூத்த பத்திரிகையாளர் சபா நக்வி, சமீபத்திய போராட்டங்களிலிருந்து சிஜேபி பல பாடங்களை கற்றுக்கொண்டதாகக் கருதுகிறார்.
"சிஐஏ, ஆம் ஆத்மி கட்சி அல்லது பாஜகவின் மறைமுக அமைப்பு என சிஜேபியை சித்தரித்த சதி கோட்பாடுகள் தவறானவை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. சிஜேபியின் செல்வாக்கைக் கருத்தில் கொண்டே அரசு நடவடிக்கை எடுத்தது. போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தருக்குச் சென்று அமர்ந்து போராட்டம் நடத்துவதைத் தடுப்பதே அதன் நோக்கம்," என்று அவர் கூறினார்.
''சிஜேபி மிகக் குறுகிய காலத்தில் தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்திய வேகமும், இளைஞர்களிடையே அதற்குக் கிடைத்துவரும் ஆதரவும் குறிப்பிடத்தக்கவை.'' என்கிறார் பத்திரிகையாளர் ஷரத் குப்தா.
சிஜேபி தன்னை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல் அழுத்தக் குழுவாக சித்தரிக்க முயல்கிறது. இருப்பினும், இளைஞர்களிடையே அது வேகமாக ஆதரவைப் பெற்றிருப்பதாக ஷரத் குப்தா கருதுகிறார்.
சபா நக்வியின் கருத்துப்படி, எதிர்காலத்தில் சிறிய நகரங்களிலும் சிஜேபி தனது ஆதரவு வலையமைப்பை உருவாக்கக் கூடும். அதன் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி இப்போது உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், அது எதிர்பாராத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் அணுகுமுறை
சஞ்சய் குமார், போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தருக்கு செல்லவே முடியாத வகையில் அரசு செயல்பட்டது, உண்மையில் அரசு தற்காப்பு நிலையில் இருப்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார்.
"சில மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்திருந்தால், அங்கு பெருமளவில் மக்கள் திரண்டிருந்தால், அந்தக் கூட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா என்பதை அரசால்கூடக் கணிக்க முடியாமல் இருந்திருக்கும்." என்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் சபா நக்வி, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் அரசின் ஆதரவாளர்களிடம்கூட அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
இதற்கிடையில், ஷரத் குப்தா, "எப்போதும் பாதுகாப்புப் படைகளை நிறுத்தி வைத்து, மெட்ரோ மற்றும் ரயில்களை மூடி வைத்து போராட்டத்தைத் தடுக்க முடியாது. இதே அணுகுமுறையை அரசு தொடர்ந்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்" என்று கூறுகிறார்.
ஹேமந்த் அத்ரியின் கருத்துப்படி, "ஜந்தர் மந்தரில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய போவதில்லை. மும்பையில் அனுமதித்தது போல டெல்லியிலும் அனுமதி வழங்கியிருக்கலாம். அரசு கடுமையான அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தது அரசின் பயத்தையே காட்டுகிறது" என்கிறார்
அரசியல் ஆய்வாளர் கில்ஸ் வெர்னியர்ஸ், "உள்நாட்டு அரசியலில் இது வலிமையைக் காட்டுவதாகத் தோன்றலாம். ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தடுத்து வைப்பது, இந்த இயக்கம் குறித்து அரசுக்கு அச்சம் இருப்பதை வெளிப்படுத்துகிறது," என்கிறார்.
மேலும், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற தனது பிம்பத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், சர்வதேச அளவில் எந்தச் செய்தியை அனுப்புகிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்," என்றும் அவர் கூறுகிறார்.

ஞானேஷ் குமார் விவகாரம் இளைஞர்களைத் தொடர்ந்து இணைக்குமா?
ஞானேஷ் குமார் விவகாரம் எவ்வளவு காலம் அரசியல் விவாதமாக நீடிக்கும் என்பது பற்றியும் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கிறார்கள்.
ஷரத் குப்தாவின் பார்வையில், கல்வி அல்லது நீட் தேர்வு போன்ற பிரச்னைகளைப் போல தொலைதூர பகுதிகளிலுள்ள இளைஞர்களை இந்த விவகாரம் நேரடியாக ஈர்க்காது.
ஆனால், "வாக்கு திருட்டு" குறித்த குற்றச்சாட்டுகள் தற்போதைய ஆட்சிக்கு எதிரான ஒரு நீடித்த அரசியல் பிரச்னையாக உருவாகும் சாத்தியம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
சனிக்கிழமை பெருமளவில் மக்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைப் பற்றி அதிதி ஃபட்னாவிஸ், 1990-ஆம் ஆண்டில் நடந்த ஓர் அரசியல் சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
1990 அக்டோபர் 23-ஆம் தேதி, எல்.கே. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, பிகாரின் சமஸ்திபூரில் கைது செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.
அவர் தங்கியிருந்த இடத்திலிருந்தே லாலு பிரசாத் யாதவ் அரசு அவரை கைது செய்தது.
"ரத யாத்திரை தொடர்ந்தால் மாநிலத்திலும் நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று லாலு அஞ்சியதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த கைது, போராட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. இறுதியாக பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. சில சமயங்களில் போராட்டங்களைத் தடுக்க எடுக்கப்படும் கடுமையான, ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பல நேரங்களில் அந்த இயக்கத்தை மேலும் பெரிதாக்கிவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































