298 தங்கக்கட்டிகள், ஆடம்பர வீடுகள்: அமெரிக்காவில் சுமார் ரூ.1,935 கோடி மோசடி செய்த உளவாளி

பட மூலாதாரம், Alexandria Sheriff's Office
- எழுதியவர், மேக்ஸ் மாத்ஸா
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தனது வீட்டில் நூற்றுக்கணக்கான தங்கக் கட்டிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரி, தற்போது அமெரிக்க அரசிடம் சுமார் 20 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,935 கோடி) மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
போலி ஒப்பந்தங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் இந்தப் பெரும் மோசடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
49 வயதான டேவிட் ரஷ், ஒப்பந்த நிபந்தனைகளின்படி அமெரிக்க அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய ஆடம்பர வீடுகள், கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதையும் ரஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விளக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக பிபிசி, டேவிட் ரஷ்-இன் வழக்கறிஞரைத் தொடர்புகொண்டது. ஆனால், அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
டேவிட் ரஷ் மீது ஆரம்பத்தில் அரசுப் பணத்தைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது அவர் 'வயர் ஃபிராட்' (Wire Fraud) எனப்படும் மின்னணு தகவல் தொடர்பு வழியிலான மோசடிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 298 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை "பணித் தேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக" தனக்கு வழங்கப்பட்டவை என்று ரஷ் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களில், மேலும் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டேவிட் ரஷ், வெளிநாட்டு அதிகாரி ஒருவரிடம் ரகசிய தகவல் ஆதாரம் ஒன்றின் இருப்பிடம் மற்றும் அடையாளம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், "இத்தகைய தகவல்கள் கசிவதால், அந்தத் தகவல் ஆதாரத்தின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் மட்டுமின்றி, அவருடன் பணியாற்றும் அமெரிக்க அரசு அதிகாரிகளின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். புதிய தகவல் ஆதாரங்களைத் தனது உளவு வலையமைப்பில் சேர்க்கும் அமெரிக்க அரசின் திறனும் பாதிக்கப்படலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
டேவிட் ரஷ் "தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்துள்ளார். தனது செயல்களுக்காக அவர் முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும்" என்று சிஐஏ இயக்குநர் ஜான் ரேட்க்ளிஃப் ஒரு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
எஃப்.பி.ஐ. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, 2025 நவம்பர் முதல் 2026 மார்ச் வரை, "பணித் தேவைகளுக்கான செலவுகள்" என்ற பெயரில் டேவிட் ரஷ் பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணியையும், கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும் மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் விவரங்களை விளக்கும் நீதிமன்ற ஆவணங்களின்படி, தெற்கு புளோரிடாவில் ஆடம்பர வீடுகளை வாங்குவதற்காக, மிகவும் ரகசியமான திட்டம் ஒன்று இருப்பதாக டேவிட் கூறியுள்ளார். ஆனால், அந்தச் சொத்துகளைப் பின்னர் விற்றுத் தனிப்பட்ட முறையில் லாபம் ஈட்டுவதே அவரது நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், "நிதியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறையில், ஒப்புதல் அளிக்கும் அதிகாரியாக டேவிட் ரஷ் செயல்பட்டுள்ளார்" என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், எவ்விதக் கண்காணிப்புமின்றி அமெரிக்க அரசின் பெருமளவிலான நிதியைச் செலவிட அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மோசடி மூலம் பெற்ற அரசுப் பணத்தைப் பயன்படுத்தி, தெற்கு புளோரிடாவில் அவர் ஆடம்பரச் சொத்துகளை வாங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 40,000 டாலர் மதிப்பிலான சமையலறை உபகரணங்களையும் வாங்கியதாக நீதிமன்ற ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு வழியிலான மோசடிக் குற்றச்சாட்டு, 2026 ஜனவரியில் அவர் மேற்கொண்ட 4.5 கோடி டாலர் பரிவர்த்தனையுடன் தொடர்புடையது. ரகசியத் தகவல்களைப் பெறுவதற்கான அனுமதியோ, அதிகாரபூர்வத் தேவையோ இல்லாத வெளிநாட்டு அரசு அதிகாரி ஒருவரிடம், 'டாப் சீக்ரெட்' என வகைப்படுத்தப்பட்ட ரகசியத் தகவல்களை டேவிட் ரஷ் பகிர்ந்துகொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், US Department of Justice
தங்கக் கட்டிகளைத் தவிர, டேவிட் ரஷ்-இடம் இருந்து 20 லட்சம் டாலர் ரொக்கப் பணமும், 35 ஆடம்பரக் கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
டேவிட், பணத்தை எளிதில் வாங்கவும் விற்கவும் கூடிய பொருட்களாக மாற்றி வந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பணத்தை மறைக்க அவர் முயன்றதற்கான "வலுவான ஆதாரங்கள்" இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
ஒப்பந்த நிபந்தனைகளின்படி, ரஷ் தனது 35 ஆடம்பரக் கடிகாரங்களையும் இரண்டு பிஎம்டபிள்யூ கார்களையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், 20 லட்சம் டாலர் ரொக்கப் பணத்தையும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3.9 கோடி டாலரையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
டேவிட்-க்கான தண்டனையை கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி பின்னர் தீர்மானிப்பார். இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், கூட்டாட்சிச் சட்டத்தின் கீழ் தண்டனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம், அமெரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி வில்லியம் ஃபிட்ஸ்பாட்ரிக், டேவிட்-இன் தொழில்முறைப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவர் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
"சட்ட அமலாக்க அமைப்புகளின் பிடியிலிருந்து அவர் எளிதில் தப்பித்துவிட முடியும்," என்று நீதிபதி குறிப்பிட்டார்.
நீதிமன்ற ஆவணங்களில், சிஐஏவில் டேவிட் ரஷ் ஆற்றிய பணிகள் குறித்து விரிவான தகவல்கள் இடம்பெறவில்லை. அவர் வர்ஜீனியாவில் உள்ள ஓர் அமெரிக்க அரசு அமைப்பின் முன்னாள் உயர் அதிகாரி என்றும், 'டாப் சீக்ரெட்' பாதுகாப்பு அனுமதியையும் ரகசியத் தகவல்களை அணுகுவதற்கான அதிகாரத்தையும் பெற்றிருந்தார் என்றும் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள், அவர் சிஐஏவில் பணியாற்றியதை உறுதிப்படுத்தியுள்ளன.
'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியின்படி, டேவிட் ரஷ் சிஐஏவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்ககத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றினார். அதிநவீன உளவு உபகரணங்களை உருவாக்குவது இந்தப் பிரிவின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.
இதற்கு முன்பும் டேவிட் ரஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அமெரிக்கக் கடற்படையில் இருந்து கௌரவமாக ஓய்வுபெற்றதாகப் பொய்யாகக் கூறி, ஊதியத்துடன் கூடிய ராணுவ விடுப்பைப் பெற்றதாகவும், 2009-ஆம் ஆண்டு வேலைக்கு விண்ணப்பித்தபோது தனது கல்வித் தகுதிகள் மற்றும் ராணுவச் சேவை குறித்துத் தவறான தகவல்களை வழங்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பல்வேறு நிறுவனங்களிடம் தன்னை ஒரு கடற்படை விமானி என்று பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் தொடர்பான ஆவணத்தில், "டேவிட்-இன் ராணுவ மற்றும் கல்விசார் சாதனைகள் குறித்த இந்தக் கூற்றுகளும், அவர் தெரிவித்த பிற தகவல்களும் பொய்யானவை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தும், டேவிட் ரஷ் எவ்வாறு பின்னணிச் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியின்படி, சிஐஏ அதிகாரிகள் பலர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். ரஷ் எவ்வாறு பின்னணிச் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற்றார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கணக்கில் வராத பெருந்தொகை ஒன்று இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டேவிட் ரஷ்-இன் வழக்கறிஞர் இந்தக் கூற்றை மறுத்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






























