11 வயதில் வரலாறு படைத்த போதனா சிவானந்தன் - உலகின் இளம் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனது எப்படி?

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில்தான் போதனா முதன்முதலில் செஸ் விளையாடத் தொடங்கினார்
படக்குறிப்பு, கொரோனா பொதுமுடக்கக் காலத்தில்தான் போதனா முதன்முதலில் செஸ் விளையாடத் தொடங்கினார்
    • எழுதியவர், ஃப்ளோரன்ஸ் ஃப்ரீமேன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த 11 வயது செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற உலகின் மிகக் குறைந்த வயதுடைய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

வடமேற்கு லண்டனைச் சேர்ந்த போதனா சிவானந்தன், உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியபோது, பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான மூன்றாவது மற்றும் இறுதி 'நார்ம்' தகுதியைப் பெற்றார். பட்டத்திற்குத் தேவையான தரத்திலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரமே 'நார்ம்' எனப்படுகிறது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே தெரிவித்துள்ளது.

ஃபிடேவிடம் பேசிய போதனா சிவானந்தன், இந்தச் சாதனை குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் தொடர்ந்து "வரலாறு படைக்க விரும்புவதாகவும்" தெரிவித்தார்.

ஏற்கெனவே பிரிட்டனின் மிகக் குறைந்த வயது பெண் செஸ் சாம்பியன் என்ற சாதனையைப் படைத்துள்ள இந்தப் பள்ளி மாணவியின் சதுரங்கப் பயணத்தில் இது மற்றுமொரு முக்கியமான சாதனையாகும்.

மேலும், எந்தவொரு விளையாட்டிலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகக் குறைந்த வயதுடைய நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் செஸ் விளையாடும் போதனா சிவானந்தன் முழுநேரமாகப் பள்ளிப் படிப்பையும் மேற்கொள்கிறார்
படக்குறிப்பு, சர்வதேச அளவில் செஸ் விளையாடும் போதனா சிவானந்தன் முழுநேரமாகப் பள்ளிப் படிப்பையும் மேற்கொள்கிறார்

மேலும் ஒரு படி முன்னேற்றம்

ஹாரோ பகுதியைச் சேர்ந்த போதனா சிவானந்தன், இங்கிலாந்து அணியின் டாப் போர்டில் அதாவது அணியின் சிறந்த வீரருக்காக ஒதுக்கப்படும் இடத்தில், அனைத்து 11 சுற்றுகளிலும் விளையாடினார். அவர் போட்டியை மொத்தம் எட்டு புள்ளிகளுடன் நிறைவு செய்தார்.

பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான 2,300 ரேட்டிங் புள்ளிகள் என்ற வரம்பை, மூன்றாவது மற்றும் இறுதி நார்ம் பெறுவதற்கு முன்பே அவர் கடந்துவிட்டார்.

வரலாறு படைத்தது குறித்து ஃபிடேவிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், "இதைச் செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இத்துடன் நின்றுவிடாமல் தொடர்ந்து முன்னேறி, தொடர்ந்து வரலாறு படைக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்காகவும் விளையாடிய கதெரினா லாக்னோ, இதற்கு முன்பு பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற மிகக் குறைந்த வயதுடைய வீராங்கனை என்ற சாதனையை வைத்திருந்தார். அவர் 12 வயதில் அந்தப் பட்டத்தைப் பெற்றார்.

சீனாவைச் சேர்ந்த ஹோவ் யிஃபானும் 12 வயதில் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். அதே நேரத்தில், 'ஓபன்' கிராண்ட்மாஸ்டர் என்ற உயர்ந்த பட்டத்தைப் பெற்ற மிகக் குறைந்த வயதுடைய பெண் என்ற சாதனை அவரிடமே உள்ளது. அந்தப் பட்டத்தை அவர் 14 வயதில் பெற்றார்.

பெண் கிராண்ட்மாஸ்டர் என்பது பெண் வீராங்கனைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் செஸ் பட்டங்களில் உயர்ந்ததாகும். இந்தப் பட்டம் ஒருமுறை வழங்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

போதனா சிவானந்தன் பெற்ற வெற்றி, அவருக்கு இரண்டாவது சர்வதேச மாஸ்டர் நார்மையும் பெற்றுத் தந்துள்ளது. இதன் மூலம் அவர் அடுத்த உயர்ந்த பட்டத்திற்கான பயணத்தில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளார்.

சர்வதேச மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கு பொதுவாக மூன்று தகுதி நார்ம்களையும், குறைந்தது 2,400 ரேட்டிங் புள்ளிகளையும் வீரர்கள் பெற வேண்டும். போதனா தற்போது இரண்டு சர்வதேச மாஸ்டர் நார்ம்களைப் பெற்றுள்ளார்.

பாலின வேறுபாடின்றி ஆண், பெண் என இருபாலரும் பெறக்கூடிய சர்வதேச மாஸ்டர் பட்டம், போதனா தற்போது பெற்றுள்ள பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் பெண் சர்வதேச மாஸ்டர் பட்டங்களைவிட உயர்ந்ததாகும்.

செஸ் மீதான தனது ஆர்வம் குறித்து ஃபிடேவிடம் பேசிய அவர், "எனக்கு பயணம் செய்வது பிடிக்கும். அதே நேரத்தில், நான் முழுநேரப் பள்ளிப் படிப்பையும் படித்து வருகிறேன். செஸ் பள்ளியில் உள்ள பல பாடங்களுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது" என்று கூறினார்.

சர்வதேச அளவில் செஸ் விளையாடும் போதனா சிவானந்தன் முழுநேரமாகப் பள்ளிப் படிப்பையும் மேற்கொள்கிறார்

கொரோனா காலத்தில் செஸ் விளையாடக் கற்றுக்கொண்டார்

போதனாவின் தந்தை சிவா, தனது மகளுக்கு இந்த செஸ் திறமை எங்கிருந்து வந்தது என்பது தனக்குத் தெரியாது என்று ஏற்கெனவே பிபிசியிடம் தெரிவித்திருந்தார். அவரும் அவரது மனைவியும் பொறியியல் பட்டதாரிகள் என்றாலும், இருவருக்குமே செஸ் விளையாட்டில் அவ்வளவு திறமை இல்லை.

செஸ் விளையாட்டில் போதனாவின் முன்னேற்றம் மிக வேகமாக இருந்தது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தானாகவே செஸ் விளையாடக் கற்றுக்கொண்ட அவர், 2021 ஜூலையில் ஹாரோ செஸ் கிளப்பில் நடைபெற்ற தனது முதல் போட்டியில் பங்கேற்றார்.

அதற்கு ஓராண்டுக்குப் பிறகு, ஏழு வயதில், ஐரோப்பிய பள்ளிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 24 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார்.

2023-ஆம் ஆண்டு, குரோஷியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், கிராண்ட்மாஸ்டர் ஒருவருக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடையாமல் முடித்த மிகக் குறைந்த வயதுடைய நபர் என்ற சாதனையைப் படைத்தார்.

அடுத்த ஆண்டு, ஒன்பது வயதில், புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஒன்பது வயதில் அவர் இங்கிலாந்து அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம், எந்தவொரு விளையாட்டிலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிகக் குறைந்த வயதுடைய நபர் என்ற சாதனையைப் படைத்ததாக இங்கிலாந்து செஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.

கடந்த ஆண்டு, 10 வயதில், பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பீட்டர் வெல்ஸைத் தோற்கடித்தபோது, கிராண்ட்மாஸ்டர் ஒருவரை வீழ்த்திய மிகக் குறைந்த வயதுடைய பெண் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

இந்த ஆண்டு ஜூலையில், பிரான்சில் நடைபெற்ற டோல் ஓபன் போட்டியில் தனது முதல் சர்வதேச மாஸ்டர் நார்மை பெற்றார். 11 வயது மற்றும் நான்கு மாதங்களில் இதைப் பெற்றதன் மூலம், சர்வதேச மாஸ்டர் நார்ம் பெற்ற மிகக் குறைந்த வயதுடைய சிறுமி என்ற சாதனையையும் படைத்தார்.

மேலும், கிராண்ட்மாஸ்டர் மார்க்-ஆன்ட்ரியா மவுரிஸியைத் தோற்கடித்தார். இதன் மூலம், கிளாசிக்கல் முறையிலான செஸ் ஆட்டத்தில் 2,600-க்கும் அதிகமான ரேட்டிங் பெற்ற வீரரை வீழ்த்திய மிகக் குறைந்த வயதுடைய பெண் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு