தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? 5 முக்கிய விஷயங்கள்

மதுராந்தகம், தாராபுரம், இடைத்தேர்தல், தவெக, திமுக, அதிமுக
படக்குறிப்பு, இடைத்தேர்தலில் தவெக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் விஜய்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவின் மூலம் தவெக-வின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆக(சட்டப்பேரவைத் தலைவர் தவிர) உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால், ஆளும் கூட்டணியின் பலம் 117 ஆக உயரும்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 5 மாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஆளும் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

இடதுசாரிக் கட்சிகளுடனான உறவில் மாற்றம் ஏற்படுமா? இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய மேலும் ஐந்து தொகுதிகளில் இந்த முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா? மற்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெகவில் இணைவது இனிவரும் காலத்தில் அதிகரிக்குமா? போன்ற கேள்விகள் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.

1. சட்டப்பேரவையில் தவெக கூட்டணி பலம் உயர்வு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்தது. இரு தொகுதிகளில் வென்ற விஜய் ஒரு தொகுதியில் பதவி ராஜினாமா, சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகரன் தேர்வு ஆகியவற்றுக்குப் பிறகு சட்டப்பேரவையில் தவெக கூட்டணியின் பலம் 115ஆக இருக்கிறது.

தலா இரு எம்எல்ஏக்களை கொண்ட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை வெளியில் இருந்து ஆதரிக்கின்றன. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமமுக சார்பில் மன்னார்குடியில் வெற்றி பெற்றிருந்த காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அடுத்தபடியாக, அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைய, சட்டப்பேரவையில் மொத்தம் 7 இடங்கள்(விஜய் ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி உள்பட ) காலியாயின.

தற்போதைய இடைத்தேர்தல் முடிவு மூலம் தவெகவின் பலம் சட்டப்பேரவையில் 108-ஆக (சட்டப்பேரவைத் தலைவர் தவிர்த்து) உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ஆளும் தவெக கூட்டணியின் பலம் 117-ஆக அதிகரிக்கும்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு தவெகவுக்கு உணர்த்துவது என்ன?
படக்குறிப்பு, இடைத்தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் தவெக தொண்டர்கள்

2. தவெக கூறியது என்ன?

இடைத்தேர்தல் முடிவை தவெக அரசு தனது ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரமாக முன்வைக்கிறது. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த வெற்றி தவெக அரசின் நல்லாட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் என்றார்.

தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், இந்த வெற்றியை மக்கள் தந்த அங்கீகாரமாகக் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த பொதுத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, 'கூட்டணி அரசு' என்கிற தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைப்பாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

3. மேலும் பல எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவார்களா?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு மற்ற கட்சிகளைச் சேர்ந்த மேலும் பல எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்ட தவெகவில் இணைய வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி இந்து நாளிதழின் மூத்த செய்தியாளர் கோலப்பன், தாராபுரத்தில் தொடக்கத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலை பெற்றது கவனிக்கத்தக்கது என்றார்.

"அதிமுக முற்றிலும் ஆதரவை இழந்துவிடவில்லை என்பதை இது காட்டியது. இடைத்தேர்தல்களில் பொதுவாக இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் இருக்காது. ஆளும் கட்சிதான் தொடக்கத்திலிருந்தே முன்னிலையில் இருக்கும்," என்று அவர் கூறினார்.

"தாராபுரத்தில் அதிமுகவுக்குச் சாதகமாக முடிவுகள் வந்தபோது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்து தவெகவில் இணையும் போக்கு தடைபடும் என்று நினைத்தேன். ஆனால், இப்போது அந்த நடவடிக்கை மேலும் வேகமடையலாம் என்று கருதுகிறேன்," என்றார் கோலப்பன்.

டெக்கான் கிரானிக்கிள் நாளிதழின் அரசியல் ஆசிரியர் பாபு ஜெயக்குமார் இடைத்தேர்தல் முடிவு பற்றி பிபிசி தமிழிடம் பேசுகையில், இந்த முடிவுகள் மக்கள் தவெக மீதும் விஜய் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார். அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் காணப்பட்ட போக்கு அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

4. இடதுசாரிக் கட்சிகளுடனான உறவில் என்ன மாற்றம் ஏற்படும்?

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு தவெகவுக்கு உணர்த்துவது என்ன?
படக்குறிப்பு, இடதுசாரி தலைவர்களுடன் விஜய்

தவெக கூட்டணியின் பலம் அதிகரிக்கும் நிலையில், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடனான அரசியல் உறவு எவ்வாறு தொடரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய கோலப்பன், இடைத்தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்திய போதே தவெகவுக்கு அவை அளித்து வந்த ஆதரவு நடைமுறையில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார்.

அதேநேரத்தில், இந்தியா கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், தவெகவுடனான உறவு முற்றிலும் முடிவுக்கு வந்துவிடும் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

5. ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா?

தமிழக சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில், தற்போதைய முடிவுகளின் தாக்கம் அதில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இந்த இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் இதே நிலை ஏற்படும் என்று கூற முடியாது என பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார் பிபிசி தமிழிடம் பேசினார்.

இந்த முடிவுகள் மக்கள் தவெக மீதும் விஜய் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காட்டினாலும் இந்த போக்கு அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடரும் என்று உறுதியாகக் கூற முடியாது என்பது அவரது கருத்து.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு