'அண்ணன் சீர்' திட்டம் 'வரதட்சணையை' நினைவூட்டுகிறதா? ஆதரவுடன் எதிர்ப்பும் எழுவது ஏன்?

அண்ணன் சீர், ஒரு சவரன் தங்க நாணயம், பட்டுப்புடவை, அரசாணை, தமிழ்நாடு அரசு
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'அண்ணன் சீர்' திட்டத்தின்கீழ் ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்குவதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அக்டோபர் 5ஆம் தேதி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணத்தின்போது 'அண்ணன் சீர்' வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், த.வெ.க தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளுக்கு மாற்றாக திட்டத்தை அறிவித்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 'அண்ணன் சீர்' என்ற திட்டம் இடம்பெற்றிருந்தது.

மகளிர் நலன் என்ற தலைப்பில், 'ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கமும் ஒரு பட்டுச் சேலையும் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நிறைவேற்றும் வகையில் அக்டோபர் 5 ஆம் தேதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கு நிர்வாக அனுமதியை வழங்குவது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசாணையில் என்ன உள்ளது?

அரசாணையில், 'தமிழர் மரபில் திருமணத்தின்போது அண்ணன் வழங்கும் சீர் என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

'தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகிறது. மணப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை கொண்டு 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்க வேண்டும் என்பது அரசின் தொலைநோக்குத் திட்டமாக உள்ளது' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாட்டில் 2.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளது.

திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும் இதற்கான தொகையாக நடப்பு நிதியாண்டில் முதற்கட்டமாக 812 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000இன்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயமும் பட்டுப்புடவையும் கொள்முதல் செய்யப்படும்.

தங்க நாணயத்தின் கொள்முதல் விலை என்பது கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாளன்று காலை ஐபிஜேஏ (India Bullion and Jewellers Association) அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

அண்ணன் சீர் திட்டம் தொடர்பான அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து நடைபெறும் திருமணங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

திட்டம் தொடர்பாக இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

தவிர, அண்ணன் சீர் திட்டத்துக்கான தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியே வெளியிடப்பட உள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் அதற்கான இணையதளப் பக்கம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

'அண்ணன் சீர்' திட்டம் 'வரதட்சணையை' நினைவூட்டுகிறதா? ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?

'வாக்குறுதியை மீறிய தவெக'

'அண்ணன் சீர்' திட்டத்தை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. த.வெ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த விவரங்களுக்கு மாற்றாக அரசின் அறிவிப்பு இடம்பெற்றுள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தேர்தல் களத்தில் ஓட்டுக்காக ஒரு வேடமும் அதிகாரத்தில் அமர்ந்த பிறகு இன்னொரு வேடமும் என தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் ஏமாற்றி வருவதாக அறிக்கையில் அவர் சாடியுள்ளார்.

த.வெ.க தேர்தல் அறிக்கையில் 'அண்ணன் சீர்' திட்டத்துக்கான ஆண்டு வருமானம் 5 லட்சமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசாணையில் 2.5 லட்சமாக ஆண்டு வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளதை நயினார் நாகேந்திரன் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆண்டு வருமானத்தை 2.5 லட்சம் எனப் பாதியாகக் குறைத்து நடுத்தர குடும்பத்து பெண்களின் நம்பிக்கையில் த.வெ.க அரசு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

இதே கருத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அ.தி.மு.க எம்.பி இன்பதுரை, 'அண்ணன் சுருக்குத் திட்டம்' என விமர்சித்துள்ளார்.

"தேர்தல் நேரத்தில் வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் இருப்பது மோசடியாகவே பார்க்கப்படும். மக்கள் வாக்களித்த பிறகு வாக்குறுதியை சுருக்குவதை ஏற்க முடியாது" எனக் கூறுகிறார் இன்பதுரை எம்.பி.

"ஆண்டு வருமானம் 2.5 லட்ச ரூபாய் எனக் குறைக்கும்போது அதற்கு மேல் ஊதியம் பெறும் குடும்பங்களுக்கு பலன் கிடைக்காமல் போகும். அதுவே 5 லட்ச ரூபாயாக இருந்தால் பலருக்கும் தங்கம் கிடைக்கும்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'அண்ணன் சீர்' திட்டம் 'வரதட்சணையை' நினைவூட்டுகிறதா? ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?

த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சத்தியகுமாரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தமிழ்நாடு அரசின் கடன் சுமை பத்து லட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டிவிட்டது. அரசிடம் நிதி இல்லை என்பதால் ஆண்டு வருமானத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

முதற்கட்டமாக ஆண்டு வருமானம் 2.5 லட்சம் உள்ளவர்களுக்கு எட்டு கிராம் தங்கம் கொடுக்கப்பட உள்ளதாகக் கூறும் அவர், " எதிர்காலத்தில் இதற்கான வரையறையை மாற்றியமைக்கும் வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டார்.

இதனை மறுத்துப் பேசும் இன்பதுரை எம்.பி, "அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டே தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும்போது நிபுணர்களிடம் கலந்து ஆலோசிப்பார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை மீறுவது சரியானதல்ல" எனக் கூறுகிறார். அதேநேரம், மகளிர் மத்தியில் கலவையான உணர்வுகளை அண்ணன் சீர் திட்டம் ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அண்ணன் சீர், ஒரு சவரன் தங்க நாணயம், பட்டுப்புடவை, அரசாணை, தமிழ்நாடு அரசு

அண்ணன் சீர் திட்டம் - மகளிர் கூறுவது என்ன?

"அண்ணன், தம்பி இல்லாத பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டம் முக்கியமானதாக உள்ளது. திருமணத்தின்போது தங்கமே இல்லாத குடும்பங்களில் ஒரு சவரன் தங்கம் கிடைப்பது நம்பிக்கையை ஏற்படுத்தும்" எனக் கூறுகிறார், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசிக்கும் ஆசைகனி.

உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பெண்களில் கணிசமானோர் ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் ஆசைகனி, " இங்கு பணிபுரியும் பெண்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்குகின்றனர். அந்தவகையில் அரசு குறிப்பிடும் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என்பது 8 கிராம் தங்கம் பெறுவதற்கு போதுமானதாக இருக்கும்" என்கிறார் அவர்.

ஒரு கிராம் தங்கம் வாங்க முடியாத பல குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் உள்ளதாகக் கூறுகிறார், உசிலம்பட்டியைச் சேர்ந்த சுகாசினி. இவர் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை கட்டட வேலை செய்து வருகிறார்.

"எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திருமணம் நடக்க உள்ளது. வரன் வந்தால் கூட தங்கம் இல்லை என்ற குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை" என இவர் குறிப்பிட்டார்.

அண்ணன் சீர், ஒரு சவரன் தங்க நாணயம், பட்டுப்புடவை, அரசாணை, தமிழ்நாடு அரசு

'வரதட்சணையை நினைவூட்டும்'

இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்தை முன்வைத்துப் பேசுகிறார், மதுரை பிபி குளம் பகுதியைச் சேர்ந்த அட்சயா. இவர் ஆசிரியர் பணிக்கான நெட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

"கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முக்கியமானதாக உள்ளது. ஆனால், வரதட்சணையை மறுக்கும் சூழல்கள் உருவாகி வரும் நிலையில், 'அண்ணன் சீர்' என்ற பெயரில் அதை நினைவூட்டும் வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்க முடிகிறது" என்கிறார்.

கிராமப்புறங்களில் திருமணச் செலவு என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு மிகப் பெரிய சுமையாக இருப்பதாகக் கூறுகிறார், வழக்கறிஞர் செல்வகோமதி.

"சீர் என்ற பெயரில் திருமணத்துக்காக தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்கின்றனர். தங்கம், பட்டுப்புடவை, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என சீர் பட்டியல் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. குடும்பங்கள் திருமணத்திற்குப் பிறகும் அந்தக் கடனைச் சுமக்கின்றன" என்கிறார் அவர்.

"பெண்ணுக்கு வழங்கப்படும் தங்கம் சிறிய சொத்தாக இருக்கலாம். இந்தத் திட்டத்தின் நோக்கத்தை மறுக்கவில்லை. ஆனால் 'அண்ணன் சீர்' என்ற பெயரில் வழங்கப்படுவது தான் சில கேள்விகளை எழுப்புகிறது" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் செல்வகோமதி.

அண்ணன் சீர் திட்டம்
படக்குறிப்பு, வழக்கறிஞர் செல்வகோமதி

தொடர்ந்து பேசிய அவர், " தங்கள் மகளுக்கு திருமணம் செய்துவிட்டால் எட்டு கிராம் தங்கமும் பட்டுப்புடவையும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் 18 வயது நிறைவடைந்த ஒரு பெண்ணைப் பற்றிய குடும்ப முடிவுகளில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என்கிறார்.

"18 வயது என்பது சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய குறைந்தபட்ச வயதாக இருக்கலாம். ஆனால், அது ஒரு பெண்ணின் கல்வி முடிந்துவிட்ட வயது அல்ல. பல பெண்கள் அந்த வயதில் இன்னும் பட்டப்படிப்பைத் தொடங்கியிருக்கலாம் அல்லது தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கலாம்" எனக் கூறுகிறார் செல்வகோமதி.

"பெண் பிள்ளைகளை இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்க வைப்பதற்குப் பதிலாக திருமணம் செய்துவிட்டால் அரசு உதவி கிடைக்கும். என்ற எண்ணம் ஏழைக் குடும்பங்களில் உருவாகக் கூடாது. அப்படியொரு எதிர்பாராத விளைவு ஏற்படுமா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இதன்படி, எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதே திட்டம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 'தாலிக்குத் தங்கம்' திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.

இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் கூடவே 4 கிராம் தங்கம் வழங்கவும் 2011 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் 4 கிராம் தங்கமும் அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டது. இதே திட்டத்தை 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 2022இல் இதே திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றி, 'புதுமைப்பெண்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, உயர் கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

அண்ணன் சீர் திட்டம்
படக்குறிப்பு, இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்தை முன்வைத்துப் பேசுகிறார், மதுரை பிபி குளம் பகுதியைச் சேர்ந்த அட்சயா

பலன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா?

அ.தி.மு.க ஆட்சியில் தாலிக்குத் தங்கம் கொடுக்கப்பட்ட திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசும் அட்சயா, "திருமணம் முடிந்த பிறகு அரசு கொடுக்கும் தங்கத்தை மணமகன் வீட்டார் சொந்தமாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. தற்போது எட்டு கிராம் தங்கம் கொடுக்கும்போது அதற்கான பலன் பெண்ணுக்கு சேருவதில் சிக்கல்கள் ஏற்படும்" என்கிறார்.

த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சத்தியகுமாரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "அரசு கொடுக்கும் தங்கத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பயனாளிகளின் தனிப்பட்ட விவகாரமாக பார்க்கப்படுகிறது" என்கிறார்.

"எந்தவொரு அரசு திட்டத்திலும் பயனாளிகள் பயன்படுத்தும் விதம் பற்றிய கேள்விகள் எழுவதில்லை" எனக் கூறும் அவர், "லட்சக்கணக்கான மகளிரை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இந்தத் திட்டம் உள்ளது" எனக் கூறுகிறார்.

படித்த மகளிருக்கு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தாலிக்குத் தங்கம் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "படிக்காத மகளிருக்கும் தங்கம் கொடுப்பது திட்டத்தின் நோக்கமாக உள்ளது" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு