இடைத்தேர்தல் முடிவு பற்றி திமுக, அதிமுக, விசிக, இடதுசாரிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், MKStalin/Getty/Edappadi Palanisamy
தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் தவெக கூட்டணி இடைத்தேர்தல் முடிவை மக்கள் தங்களுக்கு அளித்த அங்கீகாரமாக முன்னிறுத்துகின்றனர். "இந்தத் தேர்தலில் பணபலமின்றி, அன்பு மற்றும் ஜனநாயகம் சார்ந்த ஃபார்முலாவைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக" த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதிகார பலத்தைப் பயன்படுத்தியே இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றுள்ளதாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
தேர்தல் முடிவுகளைக் கடந்து மக்கள் பணி தொடரும் என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
'அன்பு மற்றும் ஜனநாயக ஃபார்முலா மூலம் வெற்றி'
தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தனது எக்ஸ் பதிவில், தனிப்பட்ட அவதூறு பேச்சுகளுக்கும் தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்கும் மக்கள் இடைத்தேர்தல் மூலம் தகுந்த பதிலடி தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இரண்டு நாள்கள் மட்டுமே பிரசாரம் செய்ததை விமர்சித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர். அவதூறு பேச்சுகளுக்கும் தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்கும் மக்கள் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி. மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி." என்று அவர் கூறியுள்ளார்.
'போலி பிம்ப அரசியல் வீழ்ச்சி'

பட மூலாதாரம், FB
அதிகார பலம், பண பலம் மற்றும் அரசு இயந்திரத்தின் தவறான பயன்பாடு மூலமே த.வெ.க. அரசு இந்தத் தேர்தலை எதிர்கொண்டதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களுக்குள்ளாகவே, எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகலால் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முதல்வர் விஜய்யின் ஐந்தே நிமிடப் பேச்சு மற்றும் ரீல்ஸ் அரசியல் முகத்திரை இந்த இடைத்தேர்தல் மூலம் கிழிந்துவிட்டது; போலி பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பதிவான அனைத்துக் கட்சிகளின் வாக்குகளும் த.வெ.க. அரசுக்கு எதிரான மக்கள் தீர்ப்பையே காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பண பலம் மூலம் வெற்றி'

பட மூலாதாரம், AIADMK
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சியான த.வெ.க. அரசு தன் பண பலத்தையும் அதிகார பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தித் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும் இத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நல்ல எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இடைத்தேர்தல் வெற்றி தற்காலிகமானது மட்டுமே. அ.தி.மு.க. போன்ற வலுவான இயக்கம் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு மீண்டு வரும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
'கூட்டணி வெற்றி' - வி.சி.க.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றது அக்கூட்டணிக்கு மக்கள் வழங்கிய மாபெரும் அங்கீகாரம் என்று வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "கடந்த பொதுத்தேர்தலில் வாய்ப்பிழந்த த.வெ.க., தற்போது கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்யின் 'கூட்டணி அரசு' என்ற நிலைபாட்டிற்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரத்தைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
"வி.சி.க. அங்கம் வகிக்கும் அணி வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில், முழு ஈடுபாட்டுடன் மற்ற கூட்டணி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திறம்படக் களப்பணியாற்றிய வி.சி.க. தோழர்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்துள்ளார்.
'மக்கள் பணி தொடரும்' - இடதுசாரிகள்

பட மூலாதாரம், PShanmugam/X
தேர்தல் முடிவுகளைக் கடந்து இடதுசாரிகளின் மக்கள் பணி தொடர்ந்து அமையுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்தான அவரது அறிக்கையில், தேர்தல் என்பது மாற்றத்திற்கான நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதி என்றும், பண பலமின்றி மாற்று அரசியல் குறித்து மக்களிடம் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
"தேர்தலில் பண பலம் அல்லது அதிகார பலமின்றி, மக்களிடம் சென்று மாற்று அரசியல் குறித்து எடுத்துரைத்துள்ளோம். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக இடதுசாரிகளின் பயணம் தொடர்ந்து அமையும்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































