தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி - வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி - வாக்கு வித்தியாசம் எவ்வளவு?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் பெரும் அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.

இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இது தவெக அரசின் சுமார் 4 மாத கால ஆட்சிக்கான முக்கிய மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது.

தாராபுரம் நிலவரம் - சத்யபாமா முன்னிலை

தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற 23 சுற்றுகளின் முடிவில், தவெக வேட்பாளர் சத்யபாமா 66841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக, திமுக வேட்பாளர் சுகன்யா 57370 வாக்குகள் பெற்று இரண்டாம் பெற்றார். இருவரிடையே 9471 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.

அதிமுக வேட்பாளர் பானுமதி 45280 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 5268 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 1157 வாக்குகள் பெற்றுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை

மதுராந்தகம் நிலவரம் என்ன?

மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை, 27 சுற்றுகளின் முடிவில், 74048 வாக்குகளைப் பெற்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் பரந்தாமன் 54008 வாக்குகளைப் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே 20040 வாக்குகள் வித்தியாசம் நிலவுகிறது.

அதிமுக வேட்பாளர் கனிதாசம்பத் 47450 வாக்குகளையும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 2709 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 1986 வாக்குகள் பெற்றுள்ளார்.

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள்

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி
படக்குறிப்பு, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அஷோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அஷோக் ஆனந்த் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் சேதுசெல்வம் 2,664 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை: சுயேச்சை வேட்பாளர் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை

ஏன் இந்த இடைத்தேர்தல்?

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, "மக்களின் ஆதரவோடு தவெக வெற்றிப் பாதையில் தொடர்கிறது" – அமைச்சர் சரத்!

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலுவும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர்.

இருப்பினும், அவர்கள் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை
தாராபுரத்தில் இடைத்தேர்தலின் போது வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

பதிவான வாக்குகள் எவ்வளவு?

கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலுமே வாக்குப்பதிவு சதவிகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் 86.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த பொதுத் தேர்தலின்போது பதிவான 93.22 சதவிகிதத்தைவிட 7.23% குறைவு.

தாராபுரம் தொகுதியில் 80.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் இங்கு 89.9% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது 9.58% வாக்குப் பதிவு சரிந்துள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - தவெக அரசின் முதல் அக்னிப்பரீட்சை

களம் காணும் முக்கிய வேட்பாளர்கள் யார்?

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, இடதுசாரிகள் என முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாக மோதும் 5 முனைப் போட்டி நிலவியது.

ஆளும் தவெக கூட்டணி சார்பில், ஏற்கெனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று தவெக-வில் இணைந்த மரகதம் குமரவேல் மீண்டும் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களம் கண்டனர்.

மறுபுறம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியிலும் பலப்பரீட்சை தீவிரமாக உள்ளது.

தவெக சார்பில் இத்தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான சத்தியபாமா போட்டியிட்டார்.

இவருக்குப் போட்டியாக திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் க. பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைதேர்தலில் பணப் பலமின்றி, அன்பு மற்றும் ஜனநாயகம் சார்ந்த 'ஃபார்முலா'வைக் கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தனிப்பட்ட அவதூறு பேச்சுகளுக்கும் தரம் தாழ்ந்த தாக்குதல்களுக்கும் மக்கள் இடைத்தேர்தல் மூலம் தகுந்த பதிலடி தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிகார பலம், பண பலம் மற்றும் அரசு இயந்திரத்தின் தவறான பயன்பாடு மூலம் த.வெ.க. அரசு இந்தத் தேர்தலை எதிர்கொண்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஐந்து மாதங்களுக்குள்ளாகவே, எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகலால் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்."

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண பலம் மூலம் வெற்றி பெற்றுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், இத்தேர்தலில் அதிமுகவுக்கு நல்ல எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த இடைத்தேர்தலின் வெற்றி தற்காலிகமானது மட்டுமே என்றும், அதிமுக போன்ற வலுவான இயக்கம் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வரும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளைக் கடந்து இடதுசாரிகளின் மக்கள் பணி தொடர்ந்து அமையுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்தான அவரது அறிக்கையில், தேர்தல் என்பது மாற்றத்திற்கான நீண்ட நெடிய பயணத்தின் ஒரு பகுதி என்றும், பண பலமின்றி மாற்று அரசியல் குறித்து மக்களிடம் உரையாடினோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு