ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை

ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2026-ஆம் ஆண்டில் இளைஞர்களின் போராட்டங்கள் வேலைவாய்ப்பு அல்லது தேர்வுகள் தொடர்பான பிரச்னைகளை மையப்படுத்தியதாக மட்டும் நின்றுவிடவில்லை.

தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகளுடன் தொடங்கிய இளைஞர் இயக்கங்களைத் தொடர்ந்து, தற்போது வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான விவகாரங்களிலும் இளைஞர் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இளைஞர்கள் இன்று என்னென்ன பிரச்னைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள்? ஏன்? என்பதுதான் தற்போது இருக்கும் கேள்வி.

வேலைவாய்ப்பு குறித்த கவலை, படிப்படியாக நிறுவனங்களின் மீதான நம்பிக்கை தொடர்பான கவலையாக மாறி வருகிறதா? தேர்வுகளில் நேர்மை வேண்டும், தேர்தல்களிலும் நேர்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள், அமைப்புகளின் மீதான நம்பிக்கை தொடர்பான கேள்வியில் வேரூன்றியுள்ளனவா?

அல்லது, கள நிலவரம் அவ்வளவு தெளிவாக இல்லாத நிலையில், ஆய்வாளர்கள் பல்வேறு பிரச்னைகளையும் இயக்கங்களையும் ஒரு பெரிய செய்தியாக ஒன்றிணைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்களா?

ஒவ்வொரு போராட்டத்தையும் அரசியல் அணிதிரட்டல் அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் நடவடிக்கையாக மட்டுமே பார்ப்பது போதுமானதா என்ற கேள்வியும் அரசுக்கு எழுகிறது.

அல்லது, கோடிக்கணக்கான இளைஞர்கள் ஓர் அமைப்பின் நம்பகத்தன்மை குறித்தும், அதன் மீதான தங்களது நம்பிக்கை குறித்தும் கேள்வி எழுப்பி வரும்போது, விதிகளை மட்டும் மாற்றாமல், அந்த நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் அந்த அமைப்பில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அரசு சிந்திக்க வேண்டுமா?

பல ஆண்டுகளாகத் தனக்கு கிடைத்து வந்த மக்கள் ஆதரவு சரிந்து வருகிறதா என்பதுதான் பிரதமர் நரேந்திர மோதி எதிர்கொள்ளும் கேள்வி.

வாக்காளர்களாக உருவெடுத்து வரும் ஜென் ஸி இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்ப்பது பாஜகவுக்குச் சவாலாக மாறி வருகிறதா?

இந்த அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக, கலெக்டிவ் நியூஸ்ரூமின் பத்திரிகைத் துறை இயக்குநர் முகேஷ் சர்மா, சிஎஸ்டிஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அரசியல் ஆய்வாளர் சஞ்சய் குமார், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பேராசிரியர் கௌரவ் வல்லப் மற்றும் அரசியல் ஆய்வாளர் நீரஜா சௌத்ரி ஆகியோருடன் கலந்துரையாடினார்.

'இந்த அரசாங்கம் மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை'

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் திடீரென உருவானவை அல்ல.
படக்குறிப்பு, டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும், மக்கள் போராட்டம் நடத்த வீதிகளில் இறங்கினார்கள்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இளைஞர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் திடீரென உருவானவை அல்ல.

கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக, ஏன் அதற்கும் மேலாகவே இந்தப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. ஆனால், தற்போது ஒன்றன்பின் ஒன்றாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களைப் பொறுத்தவரையில், இந்தச் சூழலில் என்ன மாறியிருக்கிறது அல்லது மாறிக் கொண்டிருக்கிறது?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சஞ்சய் குமார், கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் ஒரு கேள்வி தவறாமல் இடம்பெறுவதாகக் கூறுகிறார்.

அதாவது, உங்களுக்கோ அல்லது நாட்டுக்கோ தற்போது மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது எது என்பதுதான் அந்தக் கேள்வி.

பொதுவாக, ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் வேலையின்மை ஒரு பெரிய பிரச்னையாகவே அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் இளைஞர்கள், வேலையின்மை தான் மிகப்பெரிய பிரச்னை என்று தெரிவிக்கின்றனர்.

எனவே, டெல்லியின் வீதிகளிலும் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெறுவதற்குக் காரணமாக ஏதோ ஒரு நிகழ்வு திடீரென நடந்துவிட்டது என்று கூறுவது சரியாக இருக்காது.

இளைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் நாட்டின் பொதுமக்களும் தங்களது கோரிக்கைகளை அரசு செவிமடுத்துக் கேட்பதில்லை என்ற உணர்வைப் பெறத் தொடங்கியுள்ளனர் என்று சஞ்சய் குமார் கூறுகிறார்.

இதன் விளைவாகவே, இன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வீதிகளில் மக்களின் கோபம் வெளிப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

ஆனால், ஆளும் பாஜகவுடன் தொடர்புடைய பேராசிரியர் கௌரவ் வல்லப், மாற்றுக் கருத்துகளை அரசு வரவேற்பதாகக் கூறுகிறார். "மாணவர்களுக்குச் சில பிரச்னைகள் இருந்தன. அரசு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றை ஏற்றுக்கொண்டது. அவற்றில் சில பிரச்னைகள் உண்மையானவை. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக வலுவான குழு ஒன்று அமைக்கப்பட்டு, தீர்வு காண்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், சில அரசியல் கட்சிகள் இந்தக் கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தங்களது அரசியல் நலன்களை முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"இவர்கள் இந்தியாவின் இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு எல்லாமே தெரியும். ஏமாற்றமடைந்தவர்களையும் விரக்தியில் இருப்பவர்களையும் அவர்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டார்கள். இந்தியாவின் முன்னேற்றத்துக்குத் தடைகளை உருவாக்க விரும்பும் சிந்தனையற்ற நக்சல்களிடமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

அரசியல் ஆய்வாளர் நீரஜா சௌத்ரியின் கருத்துப்படி, தற்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. வாஜ்பாய் காலத்திலிருந்தே நடுத்தர வர்க்கத்தினர் பாரதிய ஜனதா கட்சியின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால், தற்போது அவர்களிடையே அதிருப்தி வெளிப்படத் தொடங்கியுள்ளது. நரேந்திர மோதி தனக்கென ஒரு தனித்துவமான செல்வாக்கைக் கொண்டிருந்தாலும், தற்போது ஒரு திருப்புமுனை நெருங்கி வருவதாகத் தெரிகிறது என்று அவர் கூறுகிறார்.

இந்தப் பிரச்னை மக்களை ஆழமாகப் பாதித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர், மக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டால், நலத்திட்டங்களின் கீழ் ஏழைகளுக்குக் கிடைக்கும் பலன்களும் கிடைக்காமல் போகும். இது அவர்களுக்கு இரட்டைத் தாக்குதலாக அமையும் என்கிறார்.

"இதன் பொருள் என்னவென்றால், நான் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு, எனக்குக் கிடைக்க வேண்டியவை கிடைக்கவில்லை என்றாலும், எனது அரசாங்கத்தை மாற்றுவதற்காக வாக்களிக்கக்கூட முடியாது என்பது தான். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே, நமது வாக்களிக்கும் உரிமை தொடர்பாக ஏதோ தவறு நடக்கிறது என்ற சந்தேகமும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளன. இதுவே மக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.

'அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள்'

அரசியல் ஆய்வாளர் நீரஜா சௌத்ரியின் கருத்துப்படி, தற்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. வாஜ்பாய் காலத்திலிருந்தே நடுத்தர வர்க்கத்தினர் பாரதிய ஜனதா கட்சியின் உறுதியான ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளனர்.
படக்குறிப்பு, அக்டோபர் 10 அன்று டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல்துறை குவிக்கப்பட்டது.

ஜந்தர் மந்தரில் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும், போராட்டக்காரர்களைத் தடுக்கவும் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஜனநாயக நாட்டில் இத்தகைய நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நியாயமானவை?

இதற்குப் பதிலளித்த கௌரவ் வல்லப், எந்தவொரு இளைஞருக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த முழு உரிமை உள்ளது என்று கூறுகிறார்.

பிரச்னைகளை எழுப்பலாம், ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடலாம், தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். இந்தக் கவலைகள் குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறுகிறார்.

"நான் யாரைப் பற்றியும் கருத்துத் தெரிவிக்கவில்லை. சிஜேபி மாணவர்களிடமும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் உங்கள் கவலைகளை முன்வைத்தீர்கள்; நாங்கள் உங்களை அழைத்து, உங்கள் கருத்துகளைக் கேட்டோம். இப்போது, இந்தியாவுக்கு எதிரான சக்திகள் உங்கள் மேடையைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்" என்று அவர் கூறினார்.

சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு (SIR) எதிரான போராட்டங்கள் குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டார். அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தேர்தல் ஆணையமும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"ஆனால், நீங்கள் தினமும் கன்னாட் பிளேஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஆடம்பர உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, வீதிகளுக்குச் சென்று குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். அரசியலமைப்பு அமைப்புகளைத் திட்டுவதுடன், அவற்றின் மதிப்பையும் குறைக்கிறீர்கள். ஆனால், இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? அவர்களுக்கு அரசியலமைப்பு அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வை நீரஜா சௌத்ரி வேறுவிதமாகப் பார்க்கிறார்.

ஜூன்-ஜூலை மாதங்களில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டங்கள் மற்றும் ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றுக்குப் பிறகு அரசாங்கத்தைப் பற்றி நிலவிய அச்சம் சிறுகச்சிறுக மறைந்து வருவதாக அவர் கூறுகிறார்.

தற்போது எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், மக்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.

ராகுல் காந்தி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்குத் தயாராக இருப்பதுடன், வீதிகளில் இறங்கிப் போராடுகிறார். மற்ற எதிர்க்கட்சிகளும் போராட்டங்களில் இறங்கியுள்ளன.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அணிகளிலிருந்தும் விலகி இருக்கும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளமும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலிருந்து பிரிந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியும் இதில் பங்கேற்றுள்ளது.

இவ்வாறு, இந்தப் போராட்டத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இருப்பினும், சஞ்சய் குமார் இந்த விவகாரத்தை வேறுவிதமாகப் பார்க்கிறார்.

தற்போது இவை முக்கியமான பிரச்னைகளாக இருந்தாலும், தேர்தல் வரும்போது இந்தக் கட்சிகள் போராட்டங்களிலிருந்து தேர்தல் பிரசாரத்துக்கு மாறிவிடும், ஏனெனில், அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல்கள் வரும்போது, இந்தப் பிரச்னைகள் படிப்படியாகப் பின்னுக்குச் சென்றுவிடும். அப்போது தேர்தல் தொடர்பான பிரச்னைகளே முன்னிலை வகிக்கும்.

தற்போது போராட்டங்களில் பங்கேற்று, பாஜகவுக்கு எதிராகத் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வரும் பல வாக்காளர்கள் இருக்கலாம். ஆனால், தேர்தல் நாளன்று அவர்கள் இந்த ஒரு பிரச்னையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாக்கை தீர்மானிக்காமல் போகலாம்.

அவர்களுக்கு முன்னால் வேறு பல பிரச்னைகளும் இருக்கும். வாக்களிப்பது குறித்து முடிவெடுக்கும் போது, அவர்கள் பிற பிரச்னைகளின் அடிப்படையிலும் தங்களது வாக்கைச் செலுத்த முடிவு செய்யலாம்.

'வாக்களிக்கும் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்'

தற்போது போராட்டங்களில் பங்கேற்று, பாஜகவுக்கு எதிராகத் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வரும் பல வாக்காளர்கள் இருக்கலாம். ஆனால், தேர்தல் நாளன்று அவர்கள் இந்த ஒரு பிரச்னையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்காமல் இருக்கலாம்.
படக்குறிப்பு, பாதுகாப்புப் படையினர் எந்தவொரு போராட்டக்காரரையும் ஜந்தர் மந்தருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

தற்போதைய சூழலை அரசுக்கு எதிரான மனநிலையாகப் பார்க்க வேண்டுமா அல்லது ஆளும் வர்க்கத்திற்கு எதிரான மனநிலையாகப் பார்க்க வேண்டுமா?

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த சஞ்சய் குமார், "அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெறுவதாக நான் கருதவில்லை. ஏனெனில், அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் கோபத்தில் இருப்பதற்கான எந்த அறிகுறியையும் நான் காணவில்லை.

இரண்டாவதாக, அமைப்புகளுக்கு எதிராக ஏதேனும் கோபம் இருக்கிறதா?

நாட்டை நிர்வகிப்பதற்குப் பல்வேறு வகையான அமைப்புகள் உள்ளன. ஆனால், ஏதேனும் ஒரு அமைப்புக்கு எதிராகக் கோபம் வெளிப்படுகிறது என்றால், அது தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மட்டுமே உள்ளது".

"ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரே ஒரு விஷயத்தில்தான் கோபம் நிலவுகிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தின் (SIR) கீழ் வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பதிலும் நீக்குவதிலும் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் முறையாக நடந்தனவா, இல்லையா என்பதுதான் அந்தக் கேள்வி.

மக்களின் கோபமும் அதிருப்தியும் அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த அமைப்புக்கு எதிராகவோ இல்லாமல், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது" என்று கூறினார்.

இருப்பினும், இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் தலைமுறையே மாறுபட்டது என்பதால், அவற்றின் தாக்கம் பரவலாக இருக்கக்கூடும் என்று நீரஜா சௌத்ரி கருதுகிறார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் புதிய தலைமுறை, குறிப்பாகக் கல்வியறிவு பெற்ற நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள், கேள்வி கேட்கக் கற்றுக்கொண்டுள்ளனர் என்று நான் கருதுகிறேன். அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அச்சமின்றி, ஏற்கெனவே நிலைபெற்றுள்ள நம்பிக்கைகளையும் கருத்துகளையும் சவாலுக்கு உட்படுத்துகின்றனர்.

"ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் ஏபிவிபி அமைப்புகளுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு, கேள்வி கேட்கும் பழக்கம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அவர்களுக்குக் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. ஏற்கெனவே வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்".

"காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் கூறுவதைக் கேளுங்கள். எங்களது எதிர்காலம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதனால்தான் வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்கிறார்கள். எங்களைத் கைது செய்தாலும் பரவாயில்லை. அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாங்கள் எங்களது குரலை உயர்த்துவோம். வாக்குரிமையைக் காப்பாற்றப் போராடுவோம் என்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சிஜேபி கோரி வருகிறது. தற்போது இது ஓர் அரசியல் கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சிகளும் இணைந்துள்ள அழுத்தக் குழுவாகச் செயல்படுகிறது.

அப்படியானால், இந்த இயக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கும்?

இதற்குப் பதிலளித்த நீரஜா சௌத்ரி, "இந்தப் போராட்டங்கள் அனைத்து அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன். மக்கள் அமைதியான முறையில் வீதிகளில் இறங்கிப் போராடும்போது, அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்குகின்றனர். அரசியல் கட்சிகளும் எச்சரிக்கையாகின்றன. நீதித்துறையும் தனது பங்கு என்ன என்பது குறித்து எச்சரிக்கையுடன் சிந்திக்கத் தொடங்கக்கூடும்.

"இந்தச் செயல்முறைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் எங்கு சென்று முடியும் என்பதை இப்போது கூறுவது மிகவும் கடினம். தற்போது, இந்தப் போராட்டங்கள் பாஜகவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறியுள்ளன" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு