ஜந்தர் மந்தரில் போராட தடை: டெல்லியில் வேறு 3 இடங்கள் போராட்டங்களுக்காக ஒதுக்கீடு - சிஜேபி கூறியது என்ன?

பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு போராட்டங்களுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கும் மையப்புள்ளியாகத் திகழ்ந்த டெல்லி ஜந்தர் மந்தர், இனி போராட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ இடமாக இருக்காது என்று அரசு அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜிநாமாவை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி திங்கள்கிழமை ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தை அணுகியது. இந்நிலையில்தான், ஜந்தர் மந்தர் போராட்டக் களங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக டெல்லி காவல்துறை ஆணையர் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்தத் திடீர் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள சிஜேபி இயக்கம், "அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்குமான மக்களின் அடிப்படை உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்" என இதைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
சிஜேபி அமைப்பின் சௌரவ் தாஸ், போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறைக்கு 24 மணி நேரக் கெடு விதித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் காவல்துறைப் பாதுகாப்புடன் உள்ளது. முன்னதாக, அக்டோபர் 10 அன்று நடைபெற்ற சிஜேபி போராட்டத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதும், அரசு ஒதுக்கிய இடங்களில் அமைதியான போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னதாக, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜந்தர் மந்தரில் பெருந்திரளான மக்கள் கூடினர். கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதலும் வன்முறையும் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி சிஜேபி மீண்டும் போராட்டம் அறிவித்த போதும், இடதுசாரி மாணவர் அமைப்புகளும் 'இந்தியா' கூட்டணியும் அக்டோபர் 2 முதல் 10 வரை தொடர் இயக்கங்களை அறிவித்தபோதும் ஜந்தர் மந்தர் பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டு பொதுமக்கள் அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
டெல்லி காவல்துறை அறிவிப்பு என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், Getty Images
தலைநகரில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக டெல்லி காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 11 அன்று டெல்லி காவல் துறை ஆணையர் அனுராக் குமார் வெளியிட்ட உத்தரவின்படி, "போராட்டங்களுக்கான மாற்று இடங்களை மதிப்பாய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த புதிய ஏற்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானம், புராரி மைதானம் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்களை புதிய போராட்டக் களங்களாக அறிவிக்க இந்தக் குழு பரிந்துரைத்துள்ளதாக புதிய உத்தரவு குறிப்பிடுகிறது.
"இந்த மூன்று இடங்களிலும் போராட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். " என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று இடங்களும் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த இடமாற்றத்தின் மூலம், நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள மத்திய நிர்வாகப் பகுதியிலிருந்து போராட்டங்கள் இனி விலக்கி வைக்கப்படும். ராம்லீலா மைதானம் மத்திய டெல்லியிலும், புராரி மைதானம் வடமேற்கு டெல்லியிலும், சிபிடி மைதானம் கிழக்கு டெல்லியிலும் அமைந்துள்ளன.
ஜந்தர் மந்தரிலிருந்து ராம்லீலா மைதானம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது; இது மற்ற இரண்டு இடங்களை விட ஜந்தர் மந்தருக்கு மிக அருகில் உள்ள இடமாகும். அதே நேரத்தில், புராரி மைதானம் ஜந்தர் மந்தரிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவிலும், சிபிடி மைதானம் 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.
ராம்லீலா மைதானம் என்பது 1975 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய பேரணி மற்றும் 2011 இல் அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல அரசியல் பேரணிகள் மற்றும் பொது இயக்கங்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட இடமாகும். மறுபுறம், 2020 விவசாயிகளின் போராட்டத்தின் போது அரசாங்கம் போராட்டக்காரர்களை அங்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டபோது புராரி மைதானம் வெளிச்சத்திற்கு வந்தது.
சி.ஜே.பி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், ANI
"இன்று நரேந்திர மோதி, ஜந்தர் மந்தரை போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். நாளை இந்தியாவிலிருந்து ஜனநாயகத்தையே நீக்கிவிடுவார். சர்வாதிகாரிக்கு போராட்டத்தின் இடம் பிரச்சனையல்ல, மக்கள் போராடுகிறார்கள் என்ற எண்ணமே பிரச்னை" என்று சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் தீப்கே கடுமையாகச் சாடியுள்ளார்.
"நரேந்திர மோதி ஏன் ஜந்தர் மந்தரைக் கண்டு அஞ்சுகிறார்? இந்த முடிவை எடுப்பதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய மக்களிடமோ, அமைப்புகளிடமோ கலந்தாலோசித்ததா? இந்தத் தன்னிச்சையான முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் அமைதியாக ஒன்று கூடிப் போராடும் அடிப்படை உரிமையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் இது. இனி ஒட்டுமொத்த நாடே ஜந்தர் மந்தராக மாறும்" என்று சௌரவ் தாஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
"போராட்டங்களை டெல்லியின் எல்லைப் பகுதிகளுக்குத் தள்ள அரசு விரும்புவது தெளிவாகிறது. ராம்லீலா மைதானத்தில் கூட அவர்கள் பெரிய போராட்டங்களை அனுமதிக்க மாட்டார்கள். இது உள்நோக்கம் கொண்டதும் சட்டவிரோதமானதும் ஆகும். மக்களுக்கான அமைதியான போராட்ட உரிமையை குறிப்பிட்ட 'ஒதுக்கப்பட்ட இடங்களில்' மட்டும் அரசால் சுருக்க முடியாது" என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் நேஹா போரா, "ஜந்தர் மந்தர் என்பது வெறும் இடமல்ல, அது மக்களின் குரல். எங்களது குரலை அடக்க முடியாது" எனக் கூறியுள்ளார். சி.ஜே.பி சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங், "மக்கள் உரிமைக் குரல் எழுப்ப இடம் கேட்கும்போது, அந்த இடத்தையே அரசாங்கம் பறிக்கிறது" என விமர்சித்துள்ளார்.
ஜந்தர் மந்தர் போராட்டங்களின் மையமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
1960களின் பிற்பகுதியிலிருந்து 1980கள் வரை 'படகு சங்கம்' பகுதியே இந்தியாவின் ஜனநாயகக் குரலின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது. 1993-க்குப் பிறகு அரசியல் சூழல் மாறியதால், ராஜபாதை (தற்போது கர்த்தவ்ய பாதை) பகுதியிலிருந்து போராட்டங்கள் மாற்றப்பட்டு, ஜந்தர் மந்தர் ஒரு போராட்டத்திற்கான இடமாக உருவெடுத்தது. இது நாடாளுமன்றத்திற்கு அருகில் இருந்ததுடன், தெரியக்கூடிய வகையிலும் ஆனால் கட்டுப்படுத்தக் கூடிய அளவிலும் அமைந்திருந்தது.
2003 ஜனவரி 31 நாளிட்ட டெல்லி காவல்துறையின் நிலையான உத்தரவு எண் 309-ன் படி, ஜந்தர் மந்தரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடக்கூடாது என்றும், போராட்டக்காரர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் 2015-ல் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. நாடாளுமன்ற வீதி காவல் நிலையப் பதிவுகளின்படி, 2006 ஜனவரி முதல் 2010 ஆகஸ்ட் வரை குறைந்தபட்சம் 13,118 தர்ணாக்கள் மற்றும் 5,491 ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடந்துள்ளன. 2010-ன் முதல் எட்டு மாதங்களில் மட்டும் அவற்றில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
1990களின் நர்மதா பச்சோவ் அந்தோலன் 2011 அன்னா ஹசாரே இயக்கம், 2012 நிர்பயா இயக்கம், 2015 ஒரே பதவி ஒரே ஓய்வூதிய இயக்கம் மற்றும் 2017 தமிழக விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களுக்கு ஜந்தர் மந்தர் சாட்சியாக விளங்கியுள்ளது.
2017 அக்டோபரில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நிறுத்த உத்தரவிட்டு அவற்றை ராம்லீலா மைதானத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தை எட்டியது. 2018 ஜூலை 23 அன்று விவசாயிகள் சங்க வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் ஒன்று கூடும் அடிப்படை உரிமைக்கும், அப்பகுதி குடியிருப்பாளர்களின் உரிமைகளுக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
"ஒரு ஜனநாயகத் தலைநகரைத் தடையின் நிலையான கோட்டையாக மாற்ற முடியாது; அதேவேளையில், போராட்டச் சுதந்திரம் என்பது பிற குடிமக்களின் வாழ்வை காலவரையின்றி முடக்கும் உரிமமும் அல்ல" என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































