இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரமாண்ட சரக்கு கப்பல் மூழ்கியது - என்ன நடந்தது?

கடலோரக் காவல்படை இதுவரை உயிர் காக்கும் படகுகளில் (life rafts) இருந்த இருவரை மீட்டுள்ளது (குறியீட்டுப் படம்).

பட மூலாதாரம், Costfoto/NurPhoto via Getty Images

படக்குறிப்பு, கடலோரக் காவல்படை இதுவரை உயிர் காக்கும் படகுகளில் (life rafts) இருந்த இருவரை மீட்டுள்ளது (குறியீட்டுப் படம்). (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவில் இருந்து புறப்பட்ட பனாமா கொடி ஏந்திய 'ஓஷன் வின்னர்' என்கிற கப்பல் சனிக்கிழமை வங்காள விரிகுடாவில் மூழ்கியது.

ஒடிஷாவின் பாராதீப் துறைமுகத்தில் இருந்து 240 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அந்தக் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் சீனாவைச் சேர்ந்த 20 பேர், மியான்மரைச் சேர்ந்த 3 பேர் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.

இரு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களைக் காணவில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

அந்தக் கப்பல் ஒடிசாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதுவை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்குப் பிறகு, கப்பல் உடனான தொடர்பை இந்திய கடலோரக் காவல்படை இழந்தது.

இந்திய கடலோரக் காவல்படையும் இந்திய கடற்படையும் மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள்

பனாமா கொடியை ஏந்திய சரக்குக் கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை

பட மூலாதாரம், CFOTO/Future Publishing via Getty Images

படக்குறிப்பு, பனாமா கொடியை ஏந்திய சரக்குக் கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை (கோப்புப் படம்).

கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டன்ட் அமித் உனியால் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், மூழ்கிய கப்பலைத் தேடி மீட்கும் பணிகளுக்காக ஶ்ரீ விஜயாபுரத்திலிருந்து இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடலோரக் காவல்படை இதுவரை உயிர் காக்கும் படகில் இருந்த இருவரை மீட்டுள்ளது. கப்பலின் மற்ற பணியாளர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை பாராதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் தற்போது கரையிலிருந்து சுமார் 240 கடல்மைல் தொலைவுக்குச் சென்றுள்ளது. கப்பல் மூழ்கியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை.

பாராதீப் துறைமுக ஆணையத்தின் துணை பாதுகாவலரான கேப்டன் அலேகா சரண் சாஹு கப்பல் பணியாளர்களின் நிலை பற்றி நம்பிக்கை தெரிவித்தார். கப்பலில் இருந்த அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வதாகவும் அனைத்தும் நலமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கப்பலின் நிலை என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மரைன் டிராஃபிக் இணையதளத்தில் அந்தக் கப்பல் இன்னும் 'தொடர்பு எல்லைக்கு அப்பால்' இருப்பதாகவே பட்டியலிடப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் ஒரு நாள் மற்றும் 10 மணி நேரத்துக்கு முன்பாக வங்காள விரிகுடாவில் காணப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரைன் டிராஃபிக் இணையதளத்தின்படி, அந்தக் கப்பல் 225 மீட்டர் நீளமும் 32 மீட்டர் அகலமும் கொண்டது. அதன் திறன் தோராயமாக 72,928 டன் ஆகும்.

டிஜிட்டல் கடல்சார் சரக்குப் போக்குவரத்து தளமான ரிண்டாவின்படி, இந்த பிரமாண்ட சரக்குக் கப்பல் 1998-ஆம் கட்டப்பட்டது. இது பெருமளவிலான சரக்குகளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது.

'ஓஷன் வின்னர்' கப்பல் 72,928 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இதன் மொத்தக் கொள்ளளவு 39,755 டன்கள் ஆகும்.

கப்பல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரநிலைகளை ஆய்வு செய்யும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான 'பியூரோ வெரிடாஸ்' நிறுவனம் இந்தக் கப்பலுக்கு சான்றளித்துள்ளது.

சமீபத்தில், இந்தக் கப்பல் சிங்கப்பூர் நீரிணை, தெற்காசியா மற்றும் கிழக்காசியாவின் கடல் பகுதிகளில் காணப்பட்டுள்ளது.

ஆவணங்களின்படி, ஓஷன் வின்னர் கப்பல் கடந்த 36 மாதங்களில் 67 முறை 'துறைமுக அரசு கட்டுப்பாட்டு' ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; இதில் மூன்று முறை அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலின் பாதுகாப்பு, செயல்பாடுகள் மற்றும் கடல்சார் விதிமுறைகளுக்கு அது இணங்கி நடத்தல் ஆகியவற்றை மதிப்பிடுவதற்காகவே இச்சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஓஷன் வின்னர் தற்போது பனாமா நாட்டுக் கொடியின் கீழ் இயங்கி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு